பெங்குவின்களா நாம்?
”பெங்குவினுக்கு மனநிலை பிறழுமா,” என ஆவணப்பட இயக்குநர் கேட்க, "எனக்கு தெரிந்து அப்படியேதும் கேள்விப்பட்டதில்லை!" என்கிறார் பதிலளிக்கும் நபர்.
கடந்த சில தினங்களாக Encounters at the end of the world ஆவணப்பட காட்சி ஒன்று பரவலாக சமூகதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அண்டார்டிகாவில் உணவு தேடி ஒரு பெங்குவின் கூட்டம், கடலை நோக்கி செல்ல, கூட்டத்தில் இருந்து ஒரே ஒரு பெங்குவின் விலகி, உள்ளே இருக்கும் மலைப்பரப்பை நோக்கி செல்கிறது.
விடுவிடுவென விலகி நடந்து கொஞ்சம் நின்று திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி மலையை நோக்கி அந்த பெங்குவின் நடந்து செல்கிறது.
வர்ணனையாளர், 'கூட்டத்திலிருந்து தனித்து செல்வதன் மூலம் மரணத்தை நோக்கிதான் அந்த பெங்குவின் செல்கிறது," எனக் குறிப்பிடுகிறார்.
சமூகதளவாசிகள் இந்த பெங்குவினுக்கு Nihilist Penguin எனப் பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
Nihilism என்றால் எதிலும் நம்பிக்கையற்ற தன்மை என புரிந்து கொள்ளலாம்.
ஊரை தள்ளிவிட்டு, தனியாக ஒரு வழியை தேர்ந்தெடுத்து செல்லுதலை முன் வைக்கும் விஷயமாகவும், உடன்படாத ஒரு விஷயத்தை ஏற்காத எதிர்ப்பின் அடையாளமாகவும், இன்னும் பல விஷயங்களாகவும் பெங்குவினின் தனிநடை அவதானிக்கப்படுகிறது.
அடிப்படையில் அனைவரும் தத்தம் சிந்தனைகளை, தத்துவ சிக்கல்களை, அக குழப்பங்களை அண்டார்டிகாவின் ஒற்றை பெங்குவின் மீது சுமத்தி ஆறுதல் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது இருக்கும் சமூக சிந்தனை மற்றும் வாழ்க்கை முறை மீதான அவநம்பிக்கையும் அவற்றை நிராகரிப்பதற்கான யத்தனிப்பும் அனைவருக்குள்ளும் இருக்கிறது என்பதுதான் இதிலிருந்து புரிந்துகொள்ளப்பட வேண்டிய உண்மை!
கூட்டு வாழ்க்கை தன்மை என்பது மனிதனுக்கு ஒரே நேரத்தில் சிக்கலாகவும் ஆதாயமாகவும் இருக்கிறது.
கூட்டு வாழ்வுக்குள் இருக்கும் முரண்கள், பொருளாதார தேடல், அதிகாரக் கட்டமைப்பு முதலியவை ஒரு பக்கம் மனிதனுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் தனிமை வாழ்க்கை எந்த மனிதனுக்கும் நிம்மதி அளித்ததாக சாட்சியங்களும் இல்லை.
பெங்குவினுக்கு கேள்விகள் கிடையாது. முழுக்க முழுக்க தன்னுணர்வால் மட்டுமே இயங்குகிறது. மனிதன் அப்படியல்ல. தன்னுணர்வு குறைந்து சமூகத்தின் ஒட்டுமொத்த அறிவின் விளைவில் வாழ்பவனே மனிதன்.
அகம் குறித்து யோசித்தல் என்பது மனிதனுக்கு சாத்தியம். விலங்குகளுக்கு அது சாத்தியமல்ல.
இருதலை கொள்ளி எறும்பு போல தன்னுணர்வுக்கும் சமூக உணர்வுக்கும் இடையில் அல்லாடுபவனே மனிதன் என்பார் சமூக உளவியலாளரான எரிக் ப்ராம்.
இந்த இருதலை தன்மையில் ஒன்றான தனிமையைத்தான் தனிமைவாதமாக முதலாளித்துவம் முன்னிறுத்துகிறது. அதிகாரம் களையப்பட்ட கூட்டுத்தன்மையை இடதுசாரியம் முன்னிறுத்துகிறது.
ஒரு மனிதன் இயற்கைப்பூர்வமான எளிய வாழ்க்கையை வாழ முடியாமல், தனக்கே அந்நியமாகும் வாழ்க்கையை முதலாளித்துவம் அவன் மீது திணிக்கிறது என்பார் மார்க்ஸ். அப்படி அந்நியமாவது தவறில்லை என போதிப்பது முதலாளித்துவம்.
இதனால்தான் Individualism, Identity, Self Love போன்றவை முதலாளித்துவ கட்டமைப்பில் வரவேற்புடன் செழிப்பாக வளர முடிகிறது.
ஆனால் கூட்டு வாழ்க்கைதான் மனிதனை அழிய வைக்காமல் காத்த பரிணாம திருப்பம்!
நிம்மதியற்ற சமூகத்தில் மதம் போன்ற ஒரு மாயை மக்களுக்கு அபின் போல தேவைப்படுகிறது என்ற மார்க்ஸின் கூற்றையும் கொண்டு அவதானித்தால், இன்று மதத்தின் இடத்தை தொழில்நுட்பம் நிரப்பிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை!
திடீரென வரும் ஒரு பெங்குவின் பின்னால் ஒரு பெரும் மக்கள்திரள் தங்களின் இருத்தலியல் சிக்கல்களை தீர்க்க முற்படுகிறது.
பழங்குடி வாழ்வு அல்லது இயற்கை சார்ந்த வாழ்க்கைமுறைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் ஆசிய சமூகங்களில் முதலாளித்துவ வளர்ச்சி மூர்க்கமாக முடுக்கி விடப்படும்போது தனிமையும் தற்கொலைகளும் தனி வாழ்வுகளின் துரித மரணங்களும் கொலை குற்றங்களும் அதிகரிப்பது என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய சமூக யதார்த்தம்.
மனித சமூகம் என்கிற தொகுப்பு வாழ்விலிருந்து மனித உயிரினம், விடுவிடுவென விலகி அழிவை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி.
எரிக் ப்ராம் சொன்ன விஷயத்துடன் பதிவை முடிக்கிறேன்:
"வாழ்வின் நோக்கம் என்ன என்கிற கேள்விக்கான பதிலை கண்டடைய வேண்டிய தேவை இருக்கும் ஒரே விலங்கு மனிதன் மட்டும்தான்!"
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #penguin #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏