அம்மா பேராசிரியர் சக்குபாய் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தார். அய்யா பேராசிரியர் நெடுஞ்செழியனின் இணையர், அவரோடு இணைந்து தமிழ் மெய்யியல் ஆய்வுகள் நடத்தியவர். பெரியாரிய பற்றாளர், திராவிடர் இயக்க களச் செயற்பாட்டாளர். தமிழ்த்தேசிய சிந்தனையாளர். ஈழப்பிராட்டத்திற்கு தம் மகனை ஒப்புவித்த ஒப்பில்லா தாய். பேராசிரியர் சக்குபாய் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாதது.
இந்த இணையர் இல்லையெனில் தமிழுலகத்தின் மெய்யியல் சிறப்புகளை நாம் சமகாலத்தில் அறிந்திருக்க இயலாது. பேரா.நெடுஞ்செழியன் அவர்கள் தமிழர் மெய்யியல் ஆய்வுகளை நிகழ்த்தி, 'ஆசீவகத்தின் மரபுகள்' குறித்து விரிவான தகவல்களை உலகிற்கு அளித்தார். தக்க சான்றுகளுடன் தமிழ் மெய்யியல் ஆரியவைதீகத்துடன் நடத்திய போராட்டங்களை குறித்த நூல்களை இருவரும் நமக்களித்தனர்.
அம்மா சக்குபாய் அவர்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நேரில் சந்தித்து நீண்டநேரம் உரையாட வாய்ப்பிருந்தது. இதற்கு முன்னதாக எங்களது தமிழ்த்தேசிய பெருவிழா நிகழ்வில் பேரா.நெடுஞ்செழியன் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அவருக்கு 'அருந்திறள் தமிழர்' எனும் வாழ்நாள் விருதை அளிக்க ஒப்புதல் பெற்ற பொழுது பேசினேன்.
பேரா.நெடுஞ்செழியன் அவர்களது வைதீக எதிர்ப்பு அகத்திணை மரபுகள் ஆய்வு குறித்து நீண்ட நேரம் தொலைபேசியில் எனக்கு விளக்கமளித்து புரியவைத்தார். அவ்வப்போது அவரது நூல்களை வாசித்து மேலதிகமாக புரிந்துகொள்ள முயல்வதுண்டு. பொங்கல் சமயத்தில் கூட அவரது 'பக்தி இயக்கங்களும் வைதீக எதிர்ப்பும்' குறித்த நூலை மீள வாசித்துக் கொண்டிருந்த பொழுது அம்மாவின் நினைவு வந்தது. நேரில் சென்று பேசினால் நன்றாக இருக்குமென நினைத்திருந்தேன். இந்நூலின் பதிப்பாசிரியராக சக்குபாய் அம்மா இருந்தார். நெடுஞ்செழியன் அவர்களது 'தமிழர் தோற்றம் என்பது இடப்பெயறுதலால் நிகழவில்லை' மாறாக இந்நிலத்தில் இயற்கையாக வாழ்ந்து வளர்ந்த நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் எனும் ஆய்வு குறித்து அம்மா என்னிடம் நீண்டநேரம் உரையாடினார். இந்த ஆய்வை முடிக்க இயலாது அய்யா நெடுஞ்செழியன் மறைவுற்று சில ஆண்டுகளில் அம்மாவையும் இழந்துள்ளோம். முடிவுறா ஆய்வு குறித்து அம்மா ஆதங்கத்துடன் பேசியது நினைவில் நிற்கிறது. பேரா.நெடுஞ்செழியன் அவர்களை இறுதியாக மருத்தவமனையில் சந்தித்த பொழுது அவர் பேச முயன்றதும், சிகிச்சை காரணமாக இயலாமல் போனதும் நினைவில் இன்றும் நின்று உறுத்துகிறது. தனது ஆய்வு முடியாமல் விடைபெற நேர்ந்தது குறித்தான ஆதங்கத்தை நான், இறுதியாகக் கண்ட அவரது முகம் சொல்லியது. இந்த ஆய்வைப்பற்றி பேசி இதை நிறைவு செய்ய இயலாது போனதை அதே ஆதங்கத்துடன் சக்குபாய் அம்மாவும் பேசியது என்பது இருவரின் தமிழினப் பற்றினை நமக்கு விளக்கும்.
தனது மகனை தமிழீழ போராட்டத்திற்கு ஒப்புவித்த தாய் அவர். ஈழப்போராட்டத்தில் அவர் வீரமரணமெய்தினார். தனது மகனின் இறுதி முகத்தைக்கூட காண இயலாத தாய் என்றாலும், தமிழினப் போராட்டத்திற்காக தன் மகனை கொடையாக அளித்த அவரது துணிவு எளிதில் எவருக்கும் வராது.
தமிழிய ஆய்வுகளை நடத்தினார் என்பதற்காக இந்திய அரசு பொய் வழக்கில் பேரா.நெடுஞ்செழியன் அவர்களை கொடுஞ்சிறையில் கர்நாடகத்தில் தள்ளியது. ஆண்டுகள் கடந்து அவர் சிறைப்பட்டார். நீண்ட போராட்டத்தின் பின்னர் அவர் விடுதலை பெற்றார் என்றாலும் அவரது விடுதலைக்காக அம்மாவின் போராட்டம் அளப்பறியது. இத்தனை இழப்புகளைக் கடந்தும் தமிழினம் மீதும், திராவிடர் இயக்கத்தின் மீதுமான அவர்களது பற்று ஈடு இணையில்லாமல் இறுதிநாள் வரை இருந்தது.
மிக எளிமையாகவும், அன்புடனும் இல்லம் வரும் ஒவ்வொருவரையும் வரவேற்று இன்முகத்துடன் உபசரித்து போற்றும் தமிழிய மரபுக்கு சொந்தக்காரர் அம்மா சக்குபாய் அவர்கள். அவரை சேலத்தில் உடல்நலமில்லாத சமயத்தில் சந்தித்த பொழுதும் கூட, வீட்டிற்கருகே எதுவும் வாங்க இயலவில்லையென தமது வீட்டு மாம்பழத்தை பறித்து அனைவரும் பகிர்ந்து கொடுத்து உண்ணச்செய்தார்.
அவரது அன்பும், இன்முகமும், புன்னகையும் நெஞ்சிலிருந்து என்றும் அகலாதவையாக வாழ்நாள் முழுதும் நீடிக்கும்.
இருவரிடமும் எனக்கு நேரில் பரிச்சியம் இல்லாத பொழுதில் ஈ*ழப்போராளி அய்யா வேலுச்சாமி அவர்கள் வழியே அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் எங்களது திருச்சி கருத்தரங்கம் காவல்துறையால் தடைப்பட்டு பல இடங்கள் மாற்றப்பட்டு, சிறு அரங்கில் நடந்த பொழுது அய்யாவும், அம்மாவும் நேரில் வந்திருந்தது மிக நெகிழ்ச்சியான நினைவுகள். 'ஆசிவகம்' குறித்து எம் தோழர்களுக்கு நெடுநேரம் விளக்கப்படுத்திய அவரது அரசியல் உரை மறக்க இயலாதது.
திருச்சியில் 2018ல் கருஞ்சட்டைப் பேரணி முடிந்த சில நாட்களில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த சமயத்தில் 'பெரியார் மீதான அவதூறுகளை' குறித்து பேசிவிட்டு, 'இதையெல்லாம் கடந்தவர் பெரியார்' என்று நம்பிக்கை உணர்வோடு எங்களுக்கு சொன்னதை இன்று நினைத்துப்பார்க்கிறேன்.
அம்மா சக்குபாய் அவர்களுக்கு நேரில் சென்று மரியாதை செய்ய இயலாத நிலை பெரும் துயரைத் தருகிறது. அவரது புகழ் தமிழினம் வாழும் வரை மங்காது உயர்ந்து நிற்கும்.
தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர், பெரியாரிய சிந்தனையாளர், திராவிடர் இயக்கப் போராளி
அம்மா பேராசிரியர் சக்குபாய் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.
#வீரவணக்கம் #தமிழ்த்தேசியம் #தமிழ்நாடு தமிழருக்கே! #📰தமிழக அப்டேட்🗞️ #🚨கற்றது அரசியல் ✌️