N.ராஜாமுனியப்பன்
476 views
என் மனைவியே உயிர்..! தள்ளு வண்டியே உலகம். 350 கிமீ தூரம் மனைவியை தள்ளு வண்டியில் சுமந்த 75 வயது முதியவர். அன்பே மருந்து என உயிரைக் காத்த நெகிழ்ச்சி..!! துணையின் மீது கொண்ட மாறாத அன்பிற்கு சான்றாக, ஒடிசாவில் 75 வயது முதியவர் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை தள்ளுவண்டி ரிக்ஷாவில் வைத்து 350 கிலோமீட்டர் தூரம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு லோஹர் (75). இவரது மனைவி ஜோதி (70). கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜோதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டது. உள்ளூர் மருத்துவமனைகளில் பார்த்தும் பலன் கிடைக்காததால், கட்டாக்கில் உள்ள எஸ்சிபி (SCB) மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பாபு முடிவு செய்தார். வசதி இல்லாத காரணத்தினால் யாரிடமும் உதவி கோராமல், தனது வாழ்வாதாரமான தள்ளுவண்டி ரிக்ஷாவையே ஆம்புலன்ஸாக மாற்றினார். சம்பல்பூரிலிருந்து கட்டாக் வரையிலான 350 கி.மீ தூரத்தை கடும் வெயில், தூசி என எதையும் பொருட்படுத்தாமல் கடந்து சாதனை படைத்துள்ளார். பயணத்தின் போது தள்ளுவண்டியிலேயே படுக்கை, போர்வை மற்றும் கொசுவலை ஆகியவற்றை வைத்துக் கொண்டார். பகல் முழுவதும் வண்டியை இழுத்துச் செல்லும் அவர், இரவில் சாலையோரக் கடைகளின் முன்போ அல்லது மரத்தடியிலோ தங்குவார். வழியில் மக்கள் கொடுத்த உணவையும் பணத்தையும் கொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார். கட்டாக் மருத்துவமனையில் தனது மனைவியை அனுமதித்த பாபு, அங்கு தங்கியிருந்த இரண்டு மாதங்களிலும் சும்மா இருக்கவில்லை. அங்கேயே தள்ளுவண்டி ஓட்டியும், பழைய பாட்டில்களைச் சேகரித்தும் தனது மனைவியின் மருத்துவச் செலவுக்கான பணத்தைத் திரட்டினார். சிகிச்சை முடிந்து ஜனவரி 19-ஆம் தேதி மனைவியுடன் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, சௌத்வார் அருகே அடையாளம் தெரியாத லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் தள்ளுவண்டி சேதமடைந்து ஜோதி காயமடைந்தார். தகவலறிந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சை அளித்தனர். காவல்துறை ஆய்வாளர் விகாஸ் சேத்தி அவர்கள் இருவரையும் குளிர்சாதன பேருந்தில் ஊருக்கு அனுப்பி வைக்க முன்வந்தார். ஆனால், பாபு அதனை ஏற்க மறுத்துவிட்டார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் கூறுகையில்: "தன்னுடைய வாழ்வாதாரமான தள்ளுவண்டியையும், உயிரான மனைவியையும் தன்னால் பிரிய முடியாது என பாபு கூறிவிட்டார். பயணத்தில் களைப்பு ஏற்படும் போதெல்லாம் தனது மனைவியின் முகத்தைப் பார்த்து தான் தெம்பைப் பெறுவதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்," என்றார். இதனைத் தொடர்ந்து, சேதமடைந்த தள்ளுவண்டியைப் பழுது பார்த்துத் தந்த காவல்துறையினர், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பண உதவி செய்து வழியனுப்பி வைத்தனர். மேலும் இந்த முதியவரின் விடாமுயற்சியும் காதலும் தற்போது பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. #தெரிந்து கொள்ளுங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩