நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும்!- SDPI கட்சி வேண்டுகோள்
குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்துவதை உறுதி செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எஸ்டிபிஐ கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சி, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் இதர அரசியல் கட்சிகள், தங்களின் கட்சி நலன்களைக் கடந்து நாட்டு மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் அர்த்தமுள்ள விவாதங்களுடன் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் செயல்தலைவர் முகமது ஷஃபி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் புதன்கிழமை தொடங்கும் இப்பட்ஜெட் கூட்டத்தொடர், நாடு பொருளாதார, சமூக மற்றும் ஜனநாயக ரீதியாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் சூழலில் நடைபெறுகிறது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயக வெளிப்பாட்டின் உச்சபட்ச மன்றமாகும். அது வெறும் அரசியல் ஆதாயம் தேடும் போர்க்களமாக மாறிவிடாமல், உண்மையான விவாதம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தளமாகச் செயல்பட வேண்டும்."
வேலையின்மை, பணவீக்கம், விவசாயிகளின் பிரச்சனைகள், வெளியுறவுக் கொள்கை சவால்கள், கூட்டாட்சி உறவுகள், வாக்காளர் பட்டியல் திருத்தங்கள், பொது சுகாதாரம் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களின் பாதுகாப்பு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து தீவிர விவாதம் தேவை.
தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் கொள்கைகள் குறித்து ஆழமான விவாதங்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தேவையற்ற இடையூறுகள் முக்கியப் பிரச்சினைகளைத் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது.
அரசாங்கம் தனது சட்டமியற்றும் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முறையான ஜனநாயக உணர்வுடன் பதிலளிக்க வேண்டும்.
அதே சமயம், எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்ற நேரத்தைத் திறம்படப் பயன்படுத்தி, மக்கள் பிரச்சினைகளை உறுதியுடனும் பொறுப்புடனும் எழுப்ப வேண்டும் என எஸ்டிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள இந்தக் கூட்டத்தொடரில், வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் சமமான பொருளாதார வளர்ச்சி குறித்த தெளிவான பதில்களை இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயக நிறுவனங்கள் மோதல்களால் அல்ல, அரசியலமைப்பு விழுமியங்களின் அடிப்படையிலான உரையாடல்களால்தான் வலுப்பெறுகின்றன.
ஆகவே, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், குடிமக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை உறுதிப்படுத்தவும் ஒரு ஆக்கப்பூர்வமான நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அவசியம் என்பதை எஸ்டிபிஐ மீண்டும் வலியுறுத்துகிறது.
-முகமது ஷஃபி
தேசிய செயல் தலைவர், SDPI
#📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP