#✍️கவிதை📜 #✍️தமிழ் மன்றம் #🙏நமது கலாச்சாரம் #📝என் இதய உணர்வுகள் #🖌பக்தி ஓவியம்🎨🙏
தமிழை யாப்பில் தனித்து கட்டியே
தமிழ்ச்சுவை நாளும் தமிழரில் விதைக்கவே
உதிரிப் பூக்களையும் உயிரில் சேர்க்கவே
மதியில் கலந்து மனதில் வளரும்
அழகிய மாலையைஅன்பில் கட்டவே
கழுகு போன்று கருத்தை அறியவே
தனித்தனி எழுத்தும் தன்னகத்தே சேரவே
கனிமொழி சுவைக்க கரங்களில் சுழலுமே
தாளநயம் கோர்த்து தனிப்பாடல் அமையுமே
கோளமும் அழகூர கொடுக்கும் தன்மையே
ஒவ்வொரு பூவும் ஒருமாலை செய்யவே
ஒவ்வொரு நாரும் ஓசையின்றி மணக்குமே
தொடுக்கும் முறையே தொன்மை நிகழ்வே
உடுப்பு போலவே உணர்ந்து அணியவே
பூக்கள் எடுத்து பூங்கொத்து தொடுக்க
பாக்கள் சேர்ந்து பாமாலை ஒலிக்குமே
ஒன்றோ இரண்டோ ஒன்றியே அசையும்
நன்றாய் நேரசை நவரசம் தருமே
நிரையசை உள்நுழைய நீங்காத சீராகுமே
உரைநடை சொற்களும் உரையாடலில் சிறக்குமே
பூச்சரம் அசைகள் பூத்துக் குலுங்கும்
மாச்சரம் சேர்ந்து மனமும் குளிரும்
விளச்சீர் மாச்சீர் விரைந்து பெருக
இளமை புதுமை இனிக்கும் தமிழே
தளைமுடிச்சு நின்றசீரும் தானாய் வந்திணையும்
விளையும் பயிராய் வீறுகொண்டு வளரும்
பாட்டு ஓசையும் பண்பாடு மிளிரும்
ஊட்டும் அறிவும் உண்மையை சொல்லும்
இடிக்காமல் தாளத்தோடு இயல்பாய் வருமே
அடியாய் சீர்கள் அமைந்து ஒலிக்கும்
தொடையும் அழகாய் தொடர்ந்து வருமே
கடைமடை வரையில் கலந்து நிற்கும்
வெண்பா ஓசையும் வேரூன்றும் செப்பலோசையே
வெண்கல ஓசையும் வெகுதூரம் ஒலிக்கும்
திருக்குறள் நாலடியார் தினமும் செப்பவே
இருளும் அகழவே இறையாசி பெருகுமே
ஆசிரியப்பா ஓசையும் அகலோசை தருமே
பேசிடும் சிலப்பதிகாரமும் பேரொளி மணிமேகலையுமே
கலிப்பா ஓசையும் கனிந்த துள்ளலோசையே
கலித்தொகை பரிபாடல் கற்கும் பொற்சுவையே
வஞ்சிப்பா ஓசையும் வசீகரிக்கும் தூங்கலோசையே
தஞ்சம் கொண்டு தவழும் ஊஞ்சலே
பட்டிதொட்டியெங்கும் தமிழே பாமாலை ஒலிக்குமே
பட்டினப்பாலை அமுதம் பாடலில் சிறக்குமே
✍️ஆதி தமிழன்