#நோபல் பரிசு
நவம்பர் 27, 1895*
நோபல் பரிசுக்கான நோபல் அறக்கட்டளையை உருவாக்க தன் சொத்தில் 94 சதவீதத்தை (அன்றைய மதிப்பில் 3,12,25,000 ஸ்வீடன் க்ரோனார்கள்) வழங்கும் உயிலில் ஆல்ஃப்ரெட் நோபல் பாரிஸில் கையெழுத்திட்ட நாள்.
1833 ஆகஸ்ட் 21 அன்று ஸ்வீடனில் ஒரு பொறியாளர்கள் குடும்பத்தில் பிறந்த நோபல், ஒரு பொறியாளர், வேதியிலாளர், கண்டுபிடிப்பாளர் மட்டுமின்றி பெரிய போர்த்தளவாட உற்பத்தியாளரும் ஆவார்.
போஃபர்ஸ் உட்பட 90 போர்த்தளவாட நிறுவனங்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தன. அவர் 355 கண்டுபிடிப்புக்களுக்குக் காப்புரிமை பெற்றிருந்தாலும், அவரை உலகறியச் செய்தது டைனமைட்தான்.
இங்கிலாந்து உருவாக்கிய கார்டைட் உள்ளிட்ட புகையில்லாமல் வெடிக்கக்கூடிய பொருட்களுக்கு அடிப்படையாக அமைந்தது இவர் கண்டுபிடித்த பாலிஸ்டைட் என்னும் பொருள்தான். சுரங்கம் தோண்டுதல், மலைகளை, கற்களை உடைத்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு டைனமைட் பயன்பட்டாலும் அழிவுப் பொருளை உருவாக்கியவராகவே நோபல் பார்க்கப்பட்டார்.
அவரது மறைவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பாக, அவரது சகோதரர் லுத்விக் மறைந்தபோது, ஒரு ஃப்ரான்ஸ் செய்தித்தாள், நோபல் இறந்துவிட்டதாகக் கருதி, 'மரண வியாபாரி மரணமடைந்தார்' என்று செய்தி வெளியிட்டிருந்தது. அதனைப் படித்த நோபல், தன்னை உலகம் அவ்வாறு நினைவு கூறுவதை விரும்பாததால் நோபல் பரிசை உருவாக்கினார்.
உயில் எழுதப்பட்டு ஓராண்டில் 1896 டிசம்பர் 10 அன்று நோபல் மறைந்துவிட 1900 ஜூன் 29 அன்று ஒரு தனியார் நிறுவனமாக நோபல் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
இயற்பியல், வேதியியல், உடற்கூறியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மனித குலத்திற்குப் பெரும் பயனளிக்கும் சாதனைகளைப் புரிவோருக்கு இப்பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற அவரது விருப்பத்தின்படி, 1901லிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு நோபல் பரிசின் இன்றைய மதிப்பு சுமார் ஏழேகால் கோடி ரூபாய்களாகும்.
1966ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செயற்கைத் தனிமம், நோபலின் பெயரால் நோபலியம் என்று பெயரிடப்பட்டது.