அமைப்பியல் என்பதுஒரு அமைப்பு எனவும் அதன் அர்த்தக் கூறுகளை அதற்குள்ளேயே இருக்கிற பிற கூறுகளுடன் வைத்து மட்டுமே காண வேண்டும் எனவும் கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட தருணத்தில் மொழியை உறைநிலைக்குக் கொண்டுசென்று மொழியின் அமைப்பைப் புரிந்து கொள்ள இது பயன்படலாம் என்றாலும் மொழிக்கும் சமூக இயக்கத்திற்கும் உள்ள உறவை இதன் உறைநிலைப் பார்வையால் விளக்க முடியாது.
மொழியில் அர்த்தம் என்பது உறைநிலை அமைப்பாக இல்லை. அது அலைந்துகொண்டே இருக்கிறது. காரணம் மொழியில் உள்ளார்ந்திருக்கிற வித்தியாசங்களினால் இடையீட்டை அது நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது எனவும் பின் அமைப்பியல் கூறுகிறது..
ஒரு சமூகத்தில் மொழி மனிதர்க்கிடையிலான தொடர்பாடல் வடிவமாக இருக்கும்போது மொழியின் வடிவமும் அர்த்தமும் மாறிக் கொண்டேயிருக்கிறது. மொழி மனிதச் செயல்பாடுகளுடன் இணைந்து பயணிக்கிறது. எனில், மனிதனின் செயல்பாடு, நிலைபாடு போன்றவற்றில் மொழி குறித்த அமைப்பியல்-பின் அமைப்பியல் பார்வைகள் பெறும் இடமென்ன?
இங்குதான் மொழியின் உறைநிலையை உடைத்த, அதன் அலையும் தன்மையையும் தாண்டிய ஒரு புரிதல் அவசியமாகிறது. இனக்கொலை, காலனியம் போன்றவற்றை இந்த இரு அணுகுமுறைகளாலும் கடக்க முடியாது. அறம் எனும் கேள்வி இங்கு எழுந்து நிற்கிறது. கட்டுடைப்பையும் மீறிய, வரலாற்றில் காலூன்றிய பார்வை தேவையாகிறது.
தென் ஆப்ரிக்க நிறவெறியை எதிர்த்துப் போராடியதால் கொல்லப்பட்ட தென் ஆப்ரிக்கக் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் கிரிஷ்ஹானிக்கு அதனால்தான் தெரிதா தனது 'ஸ்பெக்டர்ஸ் ஆப் மார்க்ஸ்' நூலைச் சமர்ப்பித்தார்.
தெரிதா அறப்பண்புகள் குறித்தும், நீதியுணர்வு குறித்தும் தனது இறுதிக்காலத்தில் பேசினார். தான் மறுமலர்ச்சியுக மதிப்பீடுகளுக்கு எதிரானவர் என்பதனை மறுத்த அவர், தான் எப்போதுமே மறுமலர்ச்சி யுக மதிப்பீடுகளின் மீது பெருமதிப்பு கொண்டவன் எனவும் தெரிவித்தார். தன்னை ஒரு போதும் அவர் பின்-நவீனத்துவாதியென்றோ அல்லது பின்-அமைப்பியல்வாதி என்றோ கோரிக் கொண்டதில்லை.
மொழிக்கு அப்பால் எதுவுமே இல்லையென ஒரு போதும் தான் கோரிக்கொண்டதில்லை என்ற அவர், தன்னை வெறுமனே மொழிவிளையாட்டுக்காரராகப் புரிந்து கொண்டிருப்பதனைக் குறித்து வருத்தம் வெளியிட்டார். நான் மார்க்சியன் அல்ல என கார்ல் மார்க்ஸ் தெரிவித்ததது போலவே, தன் பெயரால் நடைபெறும் பின்நவீனத்துவ முறையியல் உருவாக்கம் குறித்து அவர் நக்கல் செய்தார்.
தெரிதா தனது கட்டுடைப்பை ஒரு திட்டவட்டமான அமைவுக்குட்பட்ட முறையியலாக உருவாக்க என்றுமே முயன்றதில்லை. தெரிதா மேற்கத்தியத் தத்துவ மரபுகள், கோட்பாடுகள் போன்றவற்றில் எதனையும் நிராகரிக்கும் முகமாகவோ அல்லது முழுமையாக எதனையும் ஏற்குமுகமாகவோ தனது அறிவார்நத நடவடிக்கையைத் தேர்ந்து கொள்ளவில்லை. மேற்கத்திய தத்துவ மரபைக் குலைப்பதாகவும், பிரதானமானதற்கு மாற்றாக வித்தியாசமானதையும் விளிம்புநிலையில் இருந்ததனையும் பிதான இடத்திற்குக் கொண்டு வருவதாகவுமே அவரது நடவக்கை அமைந்தது.
தெரிதா குறித்த ஆவணப்படம் சாத்தியமில்லாமல் போவதற்கான நிலைமை எப்போதும் இருக்கிறது என்கிற சவால்தான் தன்னை அதில் ஈடுபாடு காட்ட வைத்தது என்கிறார் தெரிதா குறித்த ஆவணப்பட இயக்குனரான கிர்பி டிக். எப்போதுமே எதிர்மறைகளையும் பிறவற்றையும் வைத்துப் பேசியபடியிருக்கும், தனது சொந்த வாழ்வு தொடர்பான தகவல்கள் குறித்தும் அதே அணுகுமுறையைக் கடைபிடிக்கும் தெரிதா பல முறைகள் இவ்வாறான ஆவணப்படங்களை நிராகரித்திருக்கிறார்.
திரைப்படமாக்கலின் போது தான் இயல்பாக இருக்க முடியாது எனும் அசௌரியமும் - தான் வீட்டில் இருக்கும்போது வழமையான சட்டை அணிவதில்லை என்கிறார் தெரிதா - தனது உடல் குறித்த தெரிதாவின் சங்கடங்களும் ஆவணப்படம் குறித்த நிச்சயமின்மையை எப்போதுமே கொண்டிருந்தன. இந்த நிச்சயமின்மையும் குறிப்பிட்ட தகவல் வேண்டப்படும்போது அதனை அவர் நிராகரித்துச் செல்தலும் ஆவணப்படம் முழுக்க விரவியிருக்கிறது.
தெரிதா பேசும் கட்டுடைப்பில், ஒரு பிரதியிலான மௌன விடுபடலும், அது சொல்லும் மற்றதுமான செய்தியும் எப்போதும் அவரது அக்கறைக்கு உரியவை. துருவ நிலைபாடு என்பதற்கு தெரிதாவில் இடமில்லை. படம் துவங்கும்போதே எதிர்காலம் என்ன என்பது குறித்த கேள்வியை எழுப்புகிறார் தெரிதா. நாம் அறந்தவற்றினின்று நாம் தர்க்கபூர்மாக யூகிக்கும் எதிர்காலம் என்பது ஒன்று, பிறிதொன்று நாம் எப்போதுமே யூகிக்கவியலாது, எவரும் முற்றிலும் எதிர்பாராதது என்பது மற்றது. இந்த மற்றதிலேயே எனது ஆர்வம் இருக்கிறது என்கிறார் தெரிதா.
காதலும் அன்பும் குறித்து அதிகமும் தமது பிரதிகளில் பேசிய ஐரோப்பாவின் மரபான தத்துவவாதிகள் எவரும் ஏன் தமது பாலுறவு வாழ்வு குறித்து எதுவும் எழுதவில்லை என அறிந்துகொள்ளத் தனக்கு விருப்பம் எனச் சொல்லும் தெரிதா, அதேகேள்வியை அவரிடம் கேட்கும்போது தான் பதில் சொல்வதிலிருந்து தவிர்க்கிறார். அதற்கான காரணம் தான் அதனை மறைக்கிறேன் என்பது அல்ல, மாறாக எனது அந்தரங்கமான விடயங்களை அந்தத்தருணத்தில் பேச விரும்பவில்லை, எனினும் எனது பல பிரதிகளில் எனது சுயவரலாறும், குறிப்பிட்ட எனது வேட்கைள் குறித்த விஷயங்களும் பேசப்படுகின்றன என்கிறார் அவர்.
தத்துவவாதியின் சிந்தனைக்கும் அவனது வாழ்வுக்கும் தொடர்பு இருக்கு வேண்டுமா எனும் கேள்வி எழுப்பும் தெரிதா, தனது எழுத்துக்களில் அவ்வாறு இருக்கிறது என்பதனையும் பிற தத்துவவாதிகளின் எழுத்துக்களில் அவ்வாறு இல்லை என்பதனையும் தெரிவித்துவிட்டு, இது குறித்துத் தான் தீர்மானமாகச் சொல்ல முடியாது, அப்படி இருக்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார்.
அறம் சார்ந்து தன்னுடைய பொறுப்புணர்வுடன் தேர்வுகளைத் திட்டவட்டமாக தெரிதா முன்வைக்கவும் செய்கிறார். தான் யூதக் குழந்தையாகப் பெற்ற அனுபவங்கள் நிறவாதம் குறித்து தனக்கு அதிபிரக்ஞையை ஊட்டியிருப்பதாகத் அவர் தெரிவிக்கவும் செய்கிறார். தான் மிகவும் ஆகர்சிக்கப்பட்ட ஹைடேக்கர் மற்றும் பால் தீ மான் போன்றோரின் யூத எதிர்ப்பும், நாசிக் கட்சி ஆதரவும் குறித்துத் திட்டவட்டமாக அவர் எதுவும் சொல்லாதது போலவே, தென் ஆப்ரிக்காவில் முழுக்கவும் வெள்ளையின மாணவர்களே பங்குபற்றிய கேப் டவுன் பல்கலைக்கழக உரையாடலில், மன்னித்தல் மறத்தல் குறித்த கேள்விகளுக்கும் நேரடியிலாக அவர் பதில் சொல்வதில்லை.
தத்துவவாதியாகத் தெரிதா புரிந்து கொள்ள முடியாதவர் எனும் பிரம்மையைப் படம் தகர்க்கிறது. சமையலறையையும் தமது மகனின் படுக்கையறையாகவிருந்து தற்போது புத்தக அறையாக மாறியிருக்கும் தனது புத்தக அலமாரி அறையையும், தனது பேத்தியின் சிறுநீர்க் கட்டுதுணியையும் காண்பிக்கும் போதும், தனது சகோதரியுடன் ஒரு போதும் தான் சண்டைபோட்டதில்லை என்பதோடு அவளை நான் நேசிக்கிறேன் என்கிற போதும் அவரது சாதாரணத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. புத்தகம் நிறைந்த பிறிதொரு அறைக்குள் செல்லும்போது, ஆயிரக்கணக்கான இந்தப் புத்தகங்ககள் அனைத்தையும் நீங்கள் படித்திருக்கிறீர்களா எனும் கேள்விக்கு, நான்கு புத்தகங்களை மட்டுமே படித்திருக்கிறேன், அந்த நான்கை நான் ஒழுங்காகப் படித்திருக்கிறேன் என்கிறார் தெரிதா.
தனது பேச்சிலிருந்து தனது முகத்தையும் தனது கைகளையும் அசௌகரியமாக உணரும் தெரிதா, தனது புகைப்படமொன்றை ஒரு காட்சியகத்தில் பார்க்கும் போது தனக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை எனும் தெரிதா, பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒரு காட்சிக் கோணத்தில் தமது முகம் தமக்குப் பிடித்திருப்பதாகவும் சொல்கிறார்.
தெரிதா பேசுகிற கட்டுடைப்பின் பல்லடுக்குகள் படத்தின் சொல்முறையிலும் வந்திருக்கிறது. தெரிதாவும் அவரது மனைவியும் அருகிருந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கும் ஒளிப்பதிவை, அவர் பார்ப்பதைக் குறித்த ஒளிப்பதிவை, அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். கைகளின், முகத்தின் அன்னியத்தன்மை பற்றி அவர் பேசிக் கொண்டிருக்கும்போது அவரது இடது பக்கத்தில் இருக்கும் கண்ணாடியில் அவரது முகமும் கைளின் அசைவுகளும் பிரதிபலிக்கிறது.
தெரிதாவின் கட்டுடைப்பும் அவரது எதிர்மறைகளும் அதற்கு அப்பாலுமான பிறிதும் குறித்த தொடர் சஞ்சாரமும, அவரது வாழ்வின் அன்றாட நடத்தைகளிலும் வெளிப்படுவதைப் பிரக்ஞைபூர்வமாக ஆவணப்படுத்தியது எனும் அளவில், அமி காப்மென் மற்றும் கிர்பி டிக்கின் ஆவணப்படம் தெரிதா குறித்த ஒரு அபூர்வமான ஆவணப்படம் எனவே நாம் சொல்ல வேண்டும்.
90 மணிநேரங்கள் 8 ஆண்டுகள் படம் பிடிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் 84 நிமிட ஆவணப்படமாகவே நம்மை எட்டியிருக்கிறது. தெரிதாவும் எடுக்கப்பட்ட சில காட்சிகளை வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார். அவரது தோள் வழியே எடுக்கப்பட்ட, அவர் தயிரை ரசித்துச் சாப்பிடும் காட்சி அது என்கிறார் கிர்பி டிக். தெரிதா ஆவணப்படத்தின் இறுதிப் பிரதியின்மீது தனது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். எது கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். என்றாலும் படம் அவருடையது அல்லாததாக எம்முடையாதாகத்தான இருந்தது என்கிறார் கிர்பி டிக். இந்த வாசகத்திலுள்ள முரண் தெரிதாவின் ஆளுமையைத் துல்லியமாகத் தெரிவிக்கிறது என்பதை மட்டும் நாம் நிச்சயமாகச் சொல்லலாம்.
சுகமட்டோவின் பின்னணி இசை, குறிப்பாக தான் தோன்றும் ஒளிப்பதிவுகளைத் தெரிதா மீளவும் பார்க்கும் தருணங்கள், நூல்களையும், பொருட்களையும் தெரிதா கையாளும் தருணங்கள் மற்றும் இறுதி எழுத்துக்கள் போடப்படும் தருணத்தினான கீறுதல் போன்ற, வெட்டும் மணியோசை போன்ற இசை, தெரிதா எழுப்பும் கேள்விகள் போலவே நம்மை மெலிதாக அதிரவைத்து மனச்சமநிலையை நமக்குள் எழுப்பிச்செல்கிறது.
‘தெரிதா தவறாகச் சித்திரிக்கப்பட்டவர். அவர் அவநம்பிக்கைவாதியோ அல்லது கலாச்சாரச் சார்புவாதியோ அல்ல. அனைத்தும் சமம் எனவோ, உனக்கு என்ன விருப்பமோ அதனைச் செய்து கொள் எனவோ அவர் ஒரு போதும் சொன்னதில்லை. கடவுளோ அல்லது உனக்கு மேலான சக்தியோ இல்லை என்பதால் உனக்கு நீயே பொறுப்பேற்றுக் கொள் என்றார் தெரிதா. முற்ற முழுதான உண்மை என்பது இல்லை. ஆகவே ஒரு தேர்ந்து கொண்ட நடவடிக்கையை நீ ஏற்றுக்கொள் என்றார் தெரிதா. அவரது சிந்தனையமைப்பு கறரான அறவுணர்வின் அடிப்படையில் அமைந்ததாகும்’ (தி கார்டியன் : அக்டோபர் 12 : 2004) என்கிறார் அமி காப்மென்.
அமி காப்மெனும் கிர்பி டிக்கும் உருவாக்கிய தெரிதா குறித்த ஆவணப்படம் இதற்கான அழகிய சாட்சியமாக நமக்கு முன் இருக்கிறது.
#மொழி #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️