சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு சார்பிலும் வீடியோக்கள், படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசல், மின் தடை குறித்து அரசுத்தரப்பில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் சமூக ஊடங்களில் வெளியிட்ட வீடியோவில், "என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த சூழலை நான் எதிர்கொண்டதில்லை. மனம் முழுக்க வலியாக உள்ளது. வலி மட்டும்தான் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருகின்றனர். என் மீதான பாசத்தாலேயே அவர்கள் வருகின்றனர். அந்த பாசத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்." என பேசியுள்ளார்.
இந்த சுற்றுப்பயணங்களில் எல்லா விஷயங்களையும் தாண்டி மக்களின் பாதுகாப்பு மட்டும்தான் தன் மனதில் ஆழமாக இருக்கும் என்றும், அதனால்தான் அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே இடங்களை காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவும் விஜய் கூறியுள்ளார்.
"ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே, அவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போது என்னால் எப்படி அந்த ஊரை விட்டு வர முடியும். நான் திரும்பி போக வேண்டியிருந்தால் வேறு சில பதற்றங்கள், சூழல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் மீண்டும் அங்கு செல்லவில்லை." என விஜய் கூறியுள்ளார்.
இறந்தவர்களுக்கு வீடியோவில் இரங்கல் தெரிவித்த விஜய், என்ன சொன்னாலும் குடும்பத்தினரின் இன்னல்களுக்கு ஈடாகாது என குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனைகளில் உள்ளவர்கள் நலம் பெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விரைவில் அவர்களை சந்திப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Getty Images
'என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்'
"எங்களின் வலிகளை புரிந்துகொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். ஆனால், கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கரூரை சேர்ந்த மக்கள் உண்மையை சொல்லும்போது, எனக்கு கடவுளே வந்து உண்மையை கூறியது போல் இருந்தது. விரைவில் எல்லா உண்மைகளும் தெரியவரும்." என விஜய் கூறியுள்ளார்.
தங்களுக்கு தரப்பட்ட இடத்தில் பரப்புரை நடத்தினோமே தவிர வேறு ஏதும் செய்யவில்லை என கூறியுள்ள விஜய், எனினும் தவெகவினர் மீது வழக்குகள் போடப்பட்டிருப்பதாக கூறினார். சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர்கள் மீதும் வழக்கு தொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"முதலமைச்சரே, உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என நினைத்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அவர்களை எதுவும் செய்யாதீர்கள். நான் வீட்டில் இருப்பேன், இல்லையெனில் அலுவலகத்தில் இருப்பேன், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாகியிருக்கிறது, இன்னும் தைரியமாக தொடரும்." என அவர் தெரிவித்தார்.
Getty Images
அரசுத் தரப்பில் கூறுவது என்ன?
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள், படங்களை காட்டி அமுதா ஐஏஎஸ் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
தவெக கேட்ட இடத்திற்கு மாறாக வேலுசாமிபுரத்தில் அனுமதி தரப்பட்டதா?
''கூட்டத்திற்கு 26-ஆம் தேதி அனுமதி கேட்ட கடிதத்தில் வேலுசாமிபுரத்தில் அனுமதி கேட்டிருந்தனர். 25-ஆம் தேதிதான் வேறொரு கட்சி அங்கு கூட்டம் நடத்தியது. அதில், 10,000-15,000 பேர் கலந்துகொண்டிருந்தனர்.''
கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் ஏன் இடம் கொடுக்கப்படவில்லை?
''கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் இருந்தது. மேலும், வடிகால் கால்வாயும் இருந்தது. அதனால் தான் அந்த இடத்தை போலீஸார் தேர்ந்தெடுத்து தரவில்லை. உழவர் சந்தையில் 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள கூடிய இடம். எனவே தான், இறுதியில் வேலுச்சாமிபுரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.''
Getty Images
கூட்டத்தை முன்பே கணிக்க முடியவில்லையா?
''தவெகவின் அனுமதி கடிதத்திலேயே 10,000 பேர் கூடுவார்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தனர். இதில், 20 பேருக்கு ஒரு போலீஸ் என, 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்சித் தலைவர் வரும்போது அவரின் பின்னாலும் நிறைய கூட்டம் கூடியது. அதனால் பரப்புரை நடைபெறும் இடத்தில் 25,000க்கும் அதிகமானோர் கூடியிருக்கலாம்.''
பரப்புரையின்போது மின்சாரம் நிறுத்தப்பட்டதா?
''தவெக தலைவர் உரையாற்றும்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது உண்மையல்ல என, கரூரில் மின்வாரிய அதிகாரிகள் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளனர். தடுப்புகள் அமைத்து கட்சியினர் வைத்திருந்த ஜெனரேட்டர் அறைக்குள் தொண்டர்கள் உள்ளே நுழைந்தபோது அப்பகுதியில் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்பட்டது.''
DIPRகரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்
காவலர்கள் தடியடி நடத்தியதால் தான் இது நடந்ததா?
''பரப்புரை நடைபெறும் இடத்தை நோக்கி வாகனத்தின் பின்னால் வந்தவர்கள் என பலரும் நகர ஆரம்பித்தனர். அதனால், கூட்ட நெரிசல் அதிகமாகவே பரப்புரை வாகனம் இன்னும் முன்னே செல்ல வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அதை கட்சியினர் கேட்கவில்லை.''
பரப்புரை துவங்குவதற்கு முன்பே நெரிசல் தொடங்கிவிட்டதா?
''நண்பகல் 12 மணிக்கு விஜய் வந்திருக்க வேண்டும். காலையிலிருந்தே கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. மதியம் 3 மணி முதல் கூட்டம் அதிகமாகிவிட்டது. வாகனம் பரப்புரை இடத்திற்கு நெருங்கவே, அதன் பின்னால் உள்ளவர்கள், ஏற்கெனவே உள்ள கூட்டத்துடன் கலந்ததால், கூட்ட நெரிசல் அதிகமானது.''
இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு அமுதா ஐஏஎஸ் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் ஆகியோர் பதிலளித்தனர்.
என்ன நடந்தது?
Getty Images
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழயமைன்று (செப்டெம்பர் 27) பரப்புரை மேற்கொண்டார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதியழகன் நேற்றைய தினம் (29/09/2025) கைது செய்யப்பட்டுவிட்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார்.
அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.
விஜய் பரப்புரை செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
'கரூரில் மட்டும் ஏன் இப்படி? உண்மை வெளியே வரும்' - விஜய் பேசியது என்ன? tvk
#🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ