கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 14.11.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
துவாபர யுகம் தொடர்ச்சி
===========================
கொண்டாடித் தானெடுத்துக் கூறுவா ளம்மானை
கண்ணணோ சீவகனோ கரியமுகில் மாயவனோ
வண்ணனோ தெய்வேந்திரனோ மறையவனோ தூயவனோ
அய்யோமுன் பெற்ற அதிக மதலையெல்லாம்
மெய்யோதா னிம்மதலைக்(கு) ஒவ்வாது மேதினியே
என்று பிரியமுற்று ஏற்ற மதலைதனை
அன்று கொடுத்து அனுப்பினா ளயோதையிடம்
கொண்டு வசுதேவன் அயோதைக் குடிலேகிக்
கண்டு அயோதை கன்னியங்கே பெற்றிருந்த
பெண்மதலை தன்னைப் பூராயமா யெடுத்து
ஆண்மதலை தன்னை அயோதை யிடமிருத்தி
வந்து வசுதேவன் மங்கைகை யில்கொடுத்துப்
புந்திமிக நொந்து போயிருந்தா னம்மானை
.
விளக்கம்
=========
இன்ப அதிர்ச்சியடைந்த தெய்வகி இனம்புரியாத மகிழ்ச்சியோடு பெற்ற குழந்தையைப் பிரியத்தோடு எடுத்தணைத்து, உலகிலே தோன்றுகின்ற உயிரினங்கள் அத்தனைக்கும் கண்ணுக்கு ஒளியாய் இருப்போனோ? சீவகர்களுக்கெல்லாம் சீவ முக்தியருள்வோனோ? மழை மேக நிறங்கொண்ட மாயத்திருமாலோ? அழகுக்கெல்லாம் ஆதாரம் ஆனவனோ? தேவர்களின் தலைவனோ? படைப்புக் கர்த்தனாகிய பிரம்பதேவனோ? முடிவில்லா வாழ்வருளும் முனிவன் இவன்தானோ?
.
அய்யகோ நான் இதற்கு முன்பு பெற்றெடுத்த அருமைக் குழந்தைகள் அத்தனையும் உண்மையாகச் சொன்னால் இக்குழந்தையின் அழகுக்கு ஈடாகாது என்று அளவிட முடியாத ஆசைப் பெருக்கோடு அந்தக் குழந்தையைக் கொஞ்சிக் குலாவிய தெய்வகி, தன் கணவன் வசுதேவனிடம் அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கொடுத்து ஆயர்பாடியில் இருக்கும் யசோதையிடம் ஒப்படைத்து வர ஏவினாள்.
.
வறண்ட நெஞ்சுடையோனா வசுதேவன்? அவன் வாய்விட்டு அழவில்லை. குமுறிய மனத்தோடு குழந்தையை வாங்கிய வாசுதேவன், குழந்தையுடன் ஆயர்பாடி நோக்கி விரைந்தார். யசோதையின் இல்லத்தை அடைந்தார். தன்னுடைய ஆண்குழந்தையை யசோதையிடம் கொடுத்துவிட்டு, யசோதை பெற்றிருந்த பெண்குழந்தையை யசோதையிடமிருந்து வாங்கிக் கொண்டு இரவோடு இரவாக விரைவாக வந்து தன் மனைவி தெய்வகியின் கையிலே கொடுத்துவிட்டுத் தேம்பித் தேம்பி அழுதார்.
.
.
அகிலம்
========
கண்ணனைக் கொல்ல கம்சன் வீசிய வஞ்சக வலை.
======================================================
அந்த யிராவிடிந்து அலைகதிரோன் தோன்றினபின்
கந்த மனசுள்ள கஞ்ச னவன்தனக்கு
ஒற்றாளாய்த் தூதன் ஒருவன் மிகஓடி
பெற்றா ளுன்தங்கை பிள்ளை யெனவுரைத்தான்
கேட்டானே கஞ்சன் கெருவிதமாய்த் தானெழுந்து
பூட்டான நெஞ்சன் பிள்ளைதனை வந்தெடுத்துத்
தூக்கி நிலத்தில் துண்ணெனவே தானடிக்க
ஆக்கிரமத் தாலே அவன்தூக்க ஏலாமல்
சோர்வுறவே கஞ்சன் துடியிழந்து நிற்கையிலே
பாரளந்தோன் தங்கை பகவதியு மேதுசொல்வாள்
என்னை யெடுத்து ஈடுசெய்யா தேகெடுவாய்
உன்னை வதைக்க உற்றயெங்க ளச்சுதரும்
ஆயர்பா டிதன்னில் அண்ணர் வளருகிறார்
போய்ப்பா ரெனவே போனாள் பகவதியும்
கேட்டந்தக் கஞ்சன் கிலேச மிகவாகி
வீட்டுக்குள் போயிருந்து விசாரமுற்றா னம்மானை
.
விளக்கம்
=========
கண்ணபிரான் பிறந்த இரவு, கதிரவனின் ஒளிக்கரங்கள் மண்மகளைத் தழுவியதால் மறைந்து மறுநாளாய் மலர்ந்தது. அப்போது கொடுங் குணத்தானாகிய கம்சனின் ஒற்றன் ஒருவன் கம்சனிடம் சென்று, மன்னா தங்களுடைய தங்கை தெய்வகிக்கு குழந்தை பிறந்திருக்கிறது எனக் கூறினான்.
.
ஆசனத்தில் அமர்ந்திருந்த கம்சன் ஒற்றனின் உரை கேட்டு வெகுண்டெழுந்தான். வெறிபிடித்த வேங்கைபோல் தெய்வகி இருக்கும் சிறையை நோக்கி விரைந்தான். சிறைக்குள் நுழைந்தான். வழக்கம்போல் அந்த ஈரமில்லா நெஞ்சன் குழந்தையை தலைகீழாகப் பிடித்து தலையிலே அடிப்பதுபோல் இந்த குழந்தையையும் எடுத்தடிக்க எத்தனித்தான். ஆனால் அந்தக் குழந்தை சற்றும் அசையவில்லை. அந்நிலை கம்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவனுக்கே உரித்தான் அசுரபலத்தையெல்லாம் அக்குழந்தையிடம் பிரயோகித்தான். ஆயினும் பயனில்லை. எனவே அவன் துவண்டு, துடிப்பான் பலமிழந்து, பிரம்மித்து, பேதலித்து நிற்கும்போது பாரளந்தோன் தங்கை பகவதியாம் அக்குழந்தை அரக்கனாகிய கம்சனைப் பார்த்து ஏனடா, கெடுமதியோனே என்னைக் கொன்றுவிடலாமென்று நினைக்காதே ! உன்னைக் கொல்வதற்காக அச்சுதராகிய என் அண்ணன் கண்ணனாக, கார்முகில் வண்ணனாக ஆயர்ப்பாடியில் வளருகிறார். அங்கே நீ சென்று பார் என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.
.
பிஞ்சுக் குழந்தையான பகவதியின் கூற்று கம்சனின் நெஞ்சத்தை ரணகளமாக்கியது. அலைபாயும் மனத்தோடு அரண்மனைக்குச் சென்று அமைதியற்றுத் தவித்தான்.
.
.
அகிலம்
========
விருத்தம்
==========
அய்யோ முனிதான் சபித்தபடி ஆயர் பதியில் போகறியேன்
மெய்யோ தளரு துடல்மெலியு மெல்லி மொழிந்த விசளமதால்
கையோ சலித்துக் காலயர்ந்து கால விதியாற் கருத்தயர்ந்து
பையோ ராளைத் தானழைத்துப் பார்க்க விடுத்தான் கஞ்சனுமே
.
விளக்கம்
==========
கம்சனின் கடந்த காலச் சம்பவங்கள் அவனுடைய மனத்திரையில் மாயாசாலம் காட்டியது. அன்றொருகால் அவன் ஆயர்ப்பாடிக்குச் சென்று, அங்குள்ள பெண்மணிகளைச் சிறையெடுத்து வந்து சீரழிப்பதை உணர்ந்த பிரம்மதேவன், ஆயர்ப்பாடி எல்லைக்குள் இனி நீ நுழைந்தால் உன் தலை சிதறிச் சாவாய் என்று சாபமிட்டாரே அதை நினைத்து நினைத்து நிலை குலைந்தான். மெய் தளர்ந்தான். உடல் மெலிந்தான்.
.
குழந்தைப் பகவதியின் கூற்றில் புதையுண்டிருந்த விவரத்தால் கைகள் செயல்பட மறுத்தன. கால்களோ அவனுடைய உடலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தன. காலத்தின் கட்டளையால் கருத்தயர்ந்து போன கம்சன், ஆயர்ப்பாடிக்குள் தாம் நுழைந்தால் தமக்குச் சாவு நிச்சம் எனப் பயந்து, ஆயர்ப்படியில் கண்ணன் வளருவதைக் கருத்தோடு பார்த்து வா என்று தம்முடைய ஏவலன் ஒருவனை அனுப்பி வைத்தான்.
.
.
தொடரும்… அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008}

