அச்சானியமாகப் பேசுவதற்கு ஆயிரம் தடவை யோசிக்க வேண்டும்.
அதைத் தெரிந்து பேசினாலும் தவறு, தெரியாமல் பேசினாலும் தவறு. ஆனால் தெரிந்து பேசினால், அதைக் கூற்றம் என்றாலும் அதில் தவறு இல்லை! ஏனெனில், அந்தப் பேச்சுக்களுக்கு மனோதத்துவ ரீதியாக வீரியம் அதிகம்!
"அச்சானியம்" என்றால் என்ன? அச்சானியம் என்பது மனக்கலக்கம், அமங்கல நினைவு, அல்லது அபசகுனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இது பொதுவாக ஒரு தீக்குறி அல்லது விரும்பத்தகாத விஷயத்தால் அல்லது பேச்சால் ஏற்படும் மன வருத்தத்தைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஒருவரது வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளை வைத்தே ஒருவர் வெகுஜன மக்களால் விரும்பப் படுகிறார், அல்லது ஒருவேளை வெறுக்கப் படாவிட்டாலும் ஒதுக்கப் படுகிறார். "மனதில் பட்டதைப் பேசுகிறேன்", "வெள்ளந்தியாகப் பேசுகிறேன்" என்று சொல்லிக்கொண்டு, நீங்கள் வெளிப்படையாக நல்ல எண்ணத்துடன் பேசினாலும்கூட, அது பிறருடைய மனதில் எதிர்பாராத, எதிர்மறையான தாக்கங்களையே ஏற்படுத்தும்.
தமிழகத்தில், அரசியல் மேடைகளில் தலைவர்கள் அச்சானியமாகப் பேசுவது ஒரு மாற்ற முடியாத மரபாகிவிட்டது. இந்த விஷயத்தில், அவர்களிடமிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வது அறிவீனம்.
வாயிலிருந்து வருகிற வார்த்தைகளைக் கட்டுப் படுத்திக்கொண்டு பேசுவது என்பது ஓர் எளிதான காரியம் இல்லை. அதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. அது முடியாத பட்சத்தில் பேசுவதைக் குறைப்பதைப் பற்றி சிந்திப்பது சாலச்சிறந்தது.
ஒன்றுமில்லை, ஒருவரிடம் நான்கைந்து பேர், "நீங்கள் ஒரு மாதிரியாக இருக்கிறீர்களே, உடல்நலமில்லையா?" என திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ கேட்டுவிட்டால் போதும், அவர் "ஒரு மாதிரியாக தலை வலிக்கிற மாதிரிதான் இருக்கிறது, இதற்கு என்ன மாத்திரை போடலாம்" என யோசிக்க ஆரம்பித்து விடுவார்.
சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு, "நீயெல்லாம் தண்டம்" என்று திட்டித்திட்டி அவர்களை தண்டங்களாகவே மாற்றி விடுவது உண்டு. சிலர் பிறந்த குழந்தை ஒன்றை பார்க்கச் செல்கிறார். அப்போது குழந்தையின் பெற்றோரிடம், "உங்களுக்குத் தெரியுமா? எங்கள் பக்கத்து வீட்டில் போன வாரம் ஒரு குழந்தை ஜன்னி கண்டு இறந்து விட்டது" என்று நடந்ததைத்தான் கூறுவார். ஆனால் பெற்றோருடைய மனம் என்ன பாடுபடும்?
எதிர்மறையான பேச்சுக்களே அச்சானியமான வார்த்தைகளுக்கு ஆணி வேராக அமைகிறது. "தீ" என்றால் சுட்டுவிடுமா என்று சிலர் கேட்டாலும், அது தேவையா என்பதை உணர்ந்து பேசுவது அவசியம். சில சமயங்களில் அப்படிப் பேசுவதால் புண்பட்டுப் போனவர் எதிர்வினை ஆற்றும் வண்ணம், பதிலுக்கு அறம் பாடிவிட்டால் நமது நிம்மதி தொலைந்தது!
"நான் கெட்ட எண்ணத்துடன் பேசவில்லையே, எனக்கு ஏன் இந்த சோதனை?" என ஒருவர் இன்னும் அரற்றிக் கொண்டிருந்தால், அவர் இன்னும் தனது தவறை உணரவில்லை என்று பொருள்.
மங்கல வழக்கு என்பது அமங்கலமான சொற்களைத் தவிர்த்து, வேறு சொற்களால் குறிப்பதாகும். உதாரணமாக, "விளக்கை அணை" என்பதற்கு "விளக்கைக் குளிரவை" என்று சொல்வது தமிழர் பண்பாட்டில் மங்கல வழக்கு எனப்படுகிறது.
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"
- திருக்குறள்
எனவே, சமய சந்தர்ப்பம் தெரியாமல் தேவையில்லாததைப் பேசிவிட்டு, "நான் சொன்னதில் என்ன தவறு?" என எதிர்க்கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால், "நீங்கள் சொன்னது தவறு" என்று யாரும் சொல்லப் போவதில்லை, மனதிற்குள் "விவஸ்தை கெட்ட ஜென்மம்" என்று நினைத்துக் கொள்வார்கள், அவ்வளவுதான்.
"மனமெனும் மாயமான்"
https://www.amazon.in/dp/B0DF4Y1TZ6
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
00:05
