புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி தொடங்கியது. இதையொட்டி பலர் தங்கள் வீடுகளில் கொலு வைத்துள்ளனர். இந்த நவராத்திரி இன்று ஆயுத பூஜையுடன் முடிவடைகிறது.
நவராத்திரியின் முதல் மூன்று நாள் துர்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம். ஒரு மனிதனுக்கு வீரம், செல்வம், ஞானம் ஆகிய மூன்று அவசியம் என்பதே இந்த மூன்று மூன்றாக பிரித்து வழிபடுவதன் நோக்கமாகும்.
9 நாட்கள்
அரக்கன் மகிஷாசுரனை அழிக்க அனைத்து தெய்வங்களிடம் இருந்து அன்னை பெற்ற ஆயுதங்களுக்கு பூஜை செய்ததாக ஐதீகம். இதனால்தான் நாம் பயன்படுத்தும் ஆயுதங்களுக்கு பூஜை போடும் வழக்கம் வந்தது. நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் பொருட்களை துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து கொண்டாடுகிறோம். நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி அன்று அம்பிகை மகிஷனை அழித்து வெற்றி பெற்றதை கொண்டாடும் நாளாகும்.
என்ன செய்யலாம்
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நாளில் என்னென்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், வீடு, வாசல், நிலை கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவைகளை துடைத்து அவற்றிற்கு திருநீறு பட்டை போட்டு சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.
நிலை வாசலில்
நிலை வாயிலிலும் சாமி அறையிலும் மாவிலை தோரணம் கட்டிவிட வேண்டும். பூஜை அறையையும் சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூ வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். சரஸ்வதி பூஜை செய்யும் முன்பு விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும்.
மஞ்சள் குங்குமம்
அதாவது மஞ்சளிலோ அல்லது மாட்டு சாணத்திலோ பிள்ளையார் பிடித்து வைத்து அதில் மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைத்து அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். கல்வியில் சிறந்த சரஸ்வதி தேவியை வணங்க புத்தகங்கள், பேனா உள்ளிட்டவைகளுக்கு பொட்டு வைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.
எதற்கெல்லாம் பூஜை
அது போல் அரிவாள் மனை, கத்தி, சுத்தியல், கட்டிங் பிளையர், கத்தரிகோல், பூண்டு நசுங்கும் இடி கல், குழவி கல், சப்பாத்தி போடும் கட்டை என நாம் என்னவெல்லாம் பயன்படுத்துகிறோமோ அதற்கெல்லாம் பூஜை செய்ய வேண்டும். அது போல் மோட்டார், லிப்ட் உள்ளிட்டவைகளுக்கும் பூஜை செய்ய வேண்டும்.
இயந்திரங்களுக்கு பூஜை
வீட்டில் இருக்கும் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், அயர்ன் பாக்ஸ் உள்ளிட்டவைகளுக்கும் பூஜை செய்ய வேண்டும். எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் உங்கள் தொழிலுக்கு பிரதானமாக பயன்படுத்தும் பொருளை சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். அது போல் பஸ், லாரி, ஆட்டோ, இரு சக்கர வாகனம், சைக்கிள், கார் உள்ளிட்டவைகளையும் துடைத்து பூ, பூஜை செய்யலாம். வாகனங்கள், இயந்திரங்களுக்கு சந்தனத்தை கரைத்து தெளித்து அதில் பொட்டு வைக்க வேண்டும்.
வாழை கன்று
தேவைப்பட்டால் வாழை கன்றை கட்டலாம். பின்னர் சுண்டல் செய்து, பொரி கடலை, பழங்கள் வைத்து தேங்காய் உடைத்து படைக்க வேண்டும். சுவாமிக்கு தனி பூஜையும் வாகனங்கள், மோட்டார், கடைகளுக்கு தனி பூஜையும் போட வேண்டும்.
சுண்டல் கடலை
ஒவ்வொரு பூஜைக்கும் தனித்தனியே பொரி கடலை, சுண்டல் வைக்க வேண்டும். வாகனங்களின் டயர்களில் எலுமிச்சை பழத்தை வைத்து பூஜை முடிந்ததும் ஓட்டி பார்க்க வேண்டும். அதுபோல் வாகனங்களுக்கு சுத்தி போட வேண்டும்.
உகந்த நேரம்
இந்த ஆண்டு இன்றைய தினம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வருவதால் காலை 9 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் பூஜை செய்யலாம். மாலையில் பூஜை போடும் வழக்கம் இருப்போர், மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்யலாம்.
மேலும் காலை 9 டூ 10, மதியம் 1.30 டூ 3, மாலை 4 டூ 5, இரவு 6 டூ 10 ஆகிய நேரங்களிலும் பூஜை செய்யலாம். அவரவருக்கு எப்போது தோதுபடுகிறதோ அந்த நேரத்தில் பூஜை செய்து கொள்ளலாம்.
#🙏🏻புரட்டாசி மாதம்✨ #🙏நமது கலாச்சாரம் #ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் #சரஸ்வதி #ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
