கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 21.11.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
பாண்டவரைக் காக்க பரமாத்மா எழுந்தருளல்
===========================================
அப்போது வேத வியாச ரவறிந்து
செப்போடு வொத்தத் திருமா லருகேகி
மாயவரே பஞ்சவர்க்கு வாரமதாய்த் தானிருந்து
தீயதுரி யோதனனைச் செயிக்கவந்த பெம்மானே
பஞ்சவரை மாபாவி பழுதுசூ தாடிவென்று
வஞ்சக மாய்ப்பாவி வனத்தில் துரத்திவிட்டான்
ஐபேரும் பத்தினியும் அன்னை பிதாவுடனே
பைப்போ லலறிப் பசித்திருந்து வாடுகிறார்
அன்றுமகா மேர்வில் அடியே னுரைத்தபடி
இன்றுபா ரதமுடிக்க எழுந்தருளும் நாளாச்சு
என்று முனிதான் எடுத்துரைக்க மாயவரும்
அன்று திருமால் ஐவ ரிடம்நடந்தார்
வேத வியாகரரும் வேயூதும் வாயானும்
சீதக்குணத் தர்மர்முன்னே சென்றனர்கா ணம்மானை
நாரா யணர்வரவே நல்லதர் மாதிகளும்
பாரா னதையளந்தோன் பதம்பூண்டா ரம்மானை
கால்பிடித்துத் தர்மர் கண்ணர் பதந்தொழவே
மால்பிடித்துத் தர்மரையும் மார்போ டுறவணைத்துப்
பதறாதே பாண்டவரே பத்தியுள்ள பஞ்சவரே
கதறாதே ஐவரையும் காத்தருள்வோ மென்றுரைத்தார்
.
விளக்கம்
=========
கானகம் சென்ற பஞ்சபாண்டவர்களின் நிலைமையை வேத வியாசமுனிவர் அறிந்தார். தாம் அறிந்த செய்தியைக் கிருஷ்ண பரமாத்மாவிடம் தெரிவிக்க விரைந்தார். கிருஷ்ண பரமாத்மாவைச் சந்தித்த வேதவியாசர், கிருஷ்ணா, மாயதி சூட்சனே, பஞ்சபாண்டவர்களுக்கு உற்ற துணையாக இருந்து துரியோதனனைத் தொலைத்துக்கட்ட தோன்றிய பரம்பொருளே பஞ்சபாண்டவர்களைத் துரியோதனன் வஞ்சகமாச் சூதுக்கு அழைத்து வஞ்சித்து வனத்துக்கு அனுப்பி விட்டான். பாண்டவர்கள் இப்போது வனத்திலே பசித்திருந்து வாடுகிறார்கள்.
.
அன்றொருகால் கைலயங்கிரியில் வைத்து அடியேன் சொன்னேனே அதன்படி தாங்கள் மகாபாரதப் போரை நிகழ்த்த வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று தன்னுடைய ஆதங்கத்தையும், கால நிலையையும் வேதவியாசர், கிருஷ்ணபரமாத்மாவின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
.
அதைக்கேட்ட கிருஷ்ண பரமாத்மா, வேதவியாசரையும், அழைத்துக்கொண்டு கானகத்திலிருக்கும் பாண்டவரிடம் சென்றார். கிருஷ்ண பரமாத்மாவைக் கண்ட பாண்டவர்கள் மனம் பூரித்தோராய் மாயோனின் பாதத்தை வணங்கி மகிழ்ந்தார்கள்.
.
தம்முடைய பாதத்தில் மண்டியிட்டிருக்கும் பாண்டவர்களை மார்போடு அணைத்து அரவணைத்த கிருஷ்ண பரமாத்மா, பாண்டவர்களைப் பார்த்து, பாண்டவர்களே, பக்தியில் மித மிஞ்சிய நீங்கள் எதற்காகவும் பயப்படவேண்டாம். உங்களில் யாருமே கண்கலங்கக் கூடாது. எப்போது என்னிடம் தஞ்சமடைந்து விட்டீர்களோ அப்போதே உங்களை நான் காத்துவிட்டேன் என்று அவர்களிடம் கனிவோடு சொன்னார்.
.
அகிலம்
========
பாண்டவருக்குக் கிருஷ்ணபரமாத்மா சூரியபாண்டம் அருளுதல்.
=============================================================
அப்போது தர்மம் அச்சுதரை யும்போற்றி
இப்பெழுது எங்களுக்கு ஏற்ற பசிதீர
சூரிய பாண்டம் தனையழைத்துச் சுத்தமனே
ஆரிய மான அன்ன மருளுமென்றார்
அப்போது மாயவனார் ஆதிதனை நினைத்து
மெய்ப்பான பாண்டம் மிகவருத்தி ஓரரியும்
கையா லெடுத்துக் கனத்ததர்மர் கைக்கொடுத்து
ஐயா யிரங்கோடி ஆட்கள்மிக வந்தாலும்
என்பே ரரிதான் எனைநினைந்து பாண்டமதில்
அன்பரே நீரை அதுநிறைய விட்டவுடன்
என்பே ரரியை எடுத்ததி லிட்டதுண்டால்
அன்பாக எல்லோர்க்கும் அமுதாய் வளருமென்றார்
இத்தனையுஞ் சொல்லி ஈந்தாரே யன்பருக்கு
.
விளக்கம்
=========
கிருஷ்ண பரமாத்மாவின் ஆறுதல் உரையால் மனம் மகிழ்ந்த தருமர் கிருஷ்ண பரமாத்மாவின் பாதம் பணிந்து கிருஷ்ணா எங்களைத் தாங்கள் காத்து அருள்வீர்கள் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
.
ஆனால், வனத்திலே வாழவேண்டிய எங்களுக்கு அன்றாடம் ஏற்படும் பசியை அமர்த்துவதற்கு வசதியாக தங்களின் தயவால் சூரிய பாண்டத்தை வரவழைத்து எங்களுக்கு அருளி அன்னம் கிடைக்க வகை செய்யுங்கள் என்றார்.
.
அதைக் கேட்டு அகமகிழ்ந்த கிருஷ்ண பரமாத்மா, மூலப் பரம்பொருளை அகமே கொண்டு, வணக்கத்திற்குரிய சூரிய பாண்டத்தையும், ஓர் அரிசியையும் வருவித்து, அதைத் தர்மரின் கையில் கொடுத்து, தர்மராஜனே இன்று முதல் தங்களைத் தேடி ஐந்தாயிரம் கோடி ஆட்கள் வந்தாலும், அரியாகிய என்னுடைய பெயரை நினைத்துக் கொண்டு இந்தப் பாண்டம் நிறைய நீரை நிரப்பி என்னுடைய பெயரைக் கொண்டதாகிய ஓர் அரிசியை அதில் இட்டீர்களேயானால் அத்தனை பேருக்கும் அமுதாக வளர்ந்து பசியமர்த்தும் என்று சொல்லி, சூரிய பாண்டத்தைப் பஞ்ச பாண்டவர்களுக்கு அருளினார்.
.
.
அகிலம்
========
பாண்டவருக்குத் துரியோதனன் செய்த சதிகள்
============================================
சித்திரம்போல் வேண்டித் தெளிந்திருந்தா ரம்மானை
மாயனுஞ் சொல்லி மண்டபத்தில் போயின்பின்
தூயவியா கரரும் சொல்லுவார் தர்மருடன்
பஞ்சவரே உங்களுக்குப் பச்சைமா லின்றுமுதல்
தஞ்சமென்று சொல்லித் தான்போனார் மாமுனியும்
மாமுனியும் போக வனத்திலந்த ஐபேரும்
ஓமுனியே தஞ்சமென்று உகந்திருந்தா ரம்மானை
பாவிதுரி யோதனனும் பஞ்சவரைக் கொல்லவென்று
ஆவி யவன்செய்த அநியாய மத்தனையும்
ஒக்க வொருமிக்க உரைக்கக்கே ளொண்ணுதலே
சிக்கெனவே நஞ்சைத் தீபாவி யிட்டனனே
.
விளக்கம்
=========
கிருஷ்ண பரமாத்மா அருளிய சூரிய பாண்டத்தைக் கிடைத்தற்கரிய திரவியமென நினைத்து வாங்கிய பஞ்சபாண்டவர்கள் நெஞ்சுறுதியோடு மனக் கலக்கமின்றி கானகத்தில் இருந்தனர்.
.
பஞ்ச பாண்டவர்களுக்குச் சூரிய பாண்டம் அருளிய கிருஷ்ண பரமாத்மா அங்கிருந்து புறப்பட்டு தமது இருப்பிடத்தை அடைந்தார். அப்போது பாண்டவர்களோடு பேசிக் கொண்டிருந்த வேதவியாசர், பாண்டவர்களிடம் பஞ்சபாண்டவர்களே, இன்று முதல் உங்களுக்குக் கிருஷ்ண பரமாத்மாவே தஞ்சம் என்று சொல்லிவிட்டு வேதவியாசரும் அங்கிருந்து புறப்பட்டார்.
.
கிருஷ்ண பரமாத்மாவும், வேதவியாசரும் அங்கிருந்து சென்றதும் கானகத்தில் இருக்கும் பஞ்ச பாண்டவர்களும், திரௌபதியும், அண்டபிண்டம் அனைத்தையும் தன்மயமாக்கிக் கொண்டிருக்கும் பரம்பொருளே தமக்குத் தஞ்சமென்று சந்தோசமாக இருந்தார்கள்.
.
அமைந்திருக்கும் கானக வாழ்வே கடவுள் அமைத்த விதி என்று பாண்டவர்கள் காட்டிலே இருந்தபோதிலும், பாதகனாகிய துரியோதனன் அங்கேயும் அவர்களை நிம்மதியாக வாழ விட்டானில்லை. பஞ்சவர்களைக் கொன்றே தீரவேண்டுமென்று அடுக்கடுக்கான சதிச் செயல்களில் ஈடுபட்டான்.
.
பஞ்சபாண்டவர்களை வஞ்சகமாகக் கொல்வதற்குத் துரியோதனன் ஆர்வமாகச் செய்த அத்தனை கொடுமைகளையும் வரிசையாக இங்கே உரைக்கப்படுகிறது துணுக்கமாக நுகருங்கள்.
.
.
தொடரும்… அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩

