கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 19.11.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
ஆயர்குடியில் வளர்ந்து வெண்ணெய் அருந்தி முறைமா தரையணைந்து
தீயன் கொடிய கஞ்சனையும்திருக்கி யறுத்து அசுரரையும்
உபாய முடனே கொலையடக்கிஉருப்பிணி முதலாய்ப் பெண்களையும்
தேயம் புகழ மணமுகித்துத் துவரம் பதியிலி ருந்தளரே
.
விளக்கம்
=========
ஆயர்பாடி எனப்படும் கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ண பரமாத்மா, வேடிக்கையாக வெண்ணெய் முதலான பொருட்களையெல்லாம், அங்குள்ள அனைத்து இல்லங்களிலும் வினோதமாகத் திருடித் தின்று மகிழ்ந்து எல்லோருடைய உள்ளத்ததையும் இதமாகக் கொள்ளை கொண்டு விட்டார்.
.
அதுமட்டுமல்ல, அந்த கறுப்புநிறக் கண்ணன், பெண்களுக்குகெல்லாம் விருப்பனாகவும் வளர்ந்தார். காலம் கனிந்ததும் கண்ணனின் அவதாரக் கடமைகள் அவருக்கு அழைப்பு விடுத்தது.
.
காலங்காலமாக கயமைத்தனம் புரிந்து கொண்டிருந்த கம்சனையும், அவனுடைய அனைத்து அசுரப்படைகளையும், தெய்வ நீத சங்கல்பத்தின்படி சம்காரம் செய்து, மதுராபுரியை மாண்புடையதாக்கினார்.
.
பின்பு கிருஷ்ண அவதாரக் கிருத்தியங்களான, ருக்குமணி முதலான சில மங்கையர்களையெல்லாம் மாநிலத்தோர் அறிய மணமுடித்த மாயக் கண்ணன் துவரயம் பதியில் அமர்ந்திருந்தார்.
.
.
அகிலம்:
=========
அஸ்தினாபுரச் செய்தி:
=======================
பாண்டவர் வரலாறு:
=====================
உருப்பிணி முதலாய் ஒத்துவந்த பெண்களையும்
திருப்பொருத்தம் பூட்டிச் செகலதுக்குள் வீற்றிருந்தார்
கஞ்ச னிடுக்கம் கழித்தந்தக் காரணரும்
பஞ்சவர்க்கு நன்மைசெய்யப் பார்த்தனர்கா ணம்மானை
பிறந்த துரியோதனனும் பிறவியொரு நூற்றுவரும்
சிறந்தபுக ழைபேரும் தேசமதி லேவாழ்ந்து
அவரவர்க்குத் தக்க ஆர்க்கமுள்ள வித்தைகற்று
எவரெவரு மெய்க்க இவர்வளர்ந்தா ரம்மானை
.
விளக்கம்:
==========
ருக்குமணி முதலான, விதிவயத்தால் அமைந்த மங்கையர்களுக்கெல்லாம் மானசீகத் தர்மத் திருச்சரடு சூட்டி மகிழ்ச்சி பொங்கிய நிலையில் சமுத்திரத்துள் சமைந்திருக்கும் துவரயம்பதியில் வீற்றிருந்து கொண்டிருக்கும் கிருஷ்ணபரமாத்மா அவருக்கு இடுக்கம் மிகக் கொடுத்த இரக்கமில்லா கம்சனின் இறுமாப்புகளுக்கெல்லாம் முடிவுகட்டிவிட்டதால் இனிமேல் பஞ்ச பாண்டவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நாட்டமுற்றார்.
.
அப்போது அஸ்தினாபுரத்தில் பஞ்சபாண்டவர்களும், குறோணியின் ஆறாவது பிறப்பாகிய துரியோதனனும், அந்தத் துரியோதனனின் உடன் பிறப்புகளாக நூறுபேரும் பிறந்து வளர்ந்து, ஒவ்வொருவரும் பற்பல வித்தைகளைக் கற்றுத் தேர்ந்து நல்லாரும், வால்லாரும் எல்லாரும் வியக்கத்தக்க வீரம் பொருந்தியவர்களாக விளங்கினர்.
.
.
அகிலம்:
=========
வளர்ந்து நிமிர்ந்து வரும்வேளை யானதிலே
இழந்துருகி வாடும் இசைகெட்ட மாபாவி
துடியாய் மனுவழக்குச் சொல்லித்துரி யோதனனும்
முடிய வினைசூடி உலகாண்டா னம்மானை
.
விளக்கம்:
==========
அஸ்தினாபுரத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டிய திருதராஷ்டிரன் கண்பார்வையற்றவர். ஆகவே திருதராஷ்டிரனின் தம்பியாகிய பாண்டு ஆட்சிப் பொறுப்பேற்று அஷ்தினாபுரியை ஆண்டுகொண்டிருந்தார். பாண்டு இறந்தபோது பஞ்ச பாண்டவர்களும் சிறுவர்கள். எனவே, அஸ்தினாபுரி ஆட்சியை கண்பார்வையற்ற திருதராஷ்டிரனே ஏற்க வேண்டியதாயிற்று.
.
இப்படி திருதராஷ்டிரனின் ஆட்சிக் காலத்தில் பாண்டவர்களும், கௌரவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் உறவாடி வளர்ந்தனர். என்றாலும், துரியோதனனின் மனதில் மட்டும் சிறு வயதிலிருந்தே பஞ்சபாண்டவர்கள் மீது ஒருவிதக் குரோத உணர்வு இருந்து கொண்டேயிருந்தது.
.
இந்நிலையில் பஞ்சபாண்டவர்களும், கௌரவர்களும் இளவரசர் அந்தஷ்தைப் பெற்றுவிட்டார்கள். அதாவது வாலிபர்களாகிவிட்டனர். எனவே, திருதராஷ்டிரனின் பெரிய தந்தையாகிய பீஷ்மர், இளவரசர்களில் மூத்தவரான தர்மருக்கு இளவரசர் பட்டம் சூட்டவேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்த, திருதராஷ்டிரரும் சம்மதிக்கிறார். தர்மருக்கு இளவரசர் பட்டம் சூட்டப்படுகிறது.
.
அப்போதுதான் துரியோதனனின் துரோக புத்தி கொடிகட்டிப் பறக்கிறது. முடிசூட்டி ஆள முனைந்து நிற்கிறான். பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள் பூகம்பமாக வெடிக்கிறது. முடிவு, அஷ்தினாபுரத்துக்கு அரசனாக துரியோதனனே முடிசூட்டிக் கொள்கிறான். அது நாட்டை ஆட்சிபுரியச் சூட்டிய திருமுடியல்ல. மாறாகத் துரியோதனனின் நாச காலத்தை நிர்ணயிக்கும் வினை முடியாக அமைந்தது.
.
.
அகிலம்
=======
அஷ்தினாபுரத்திற்கு ஏற்பட்ட அவலம்
===================================
பாவி யிருந்து பாராண்டச் சீமையிலே
கோவுகட்கு நீர் குடிக்கக் கிடையாது
தன்ம ரவ்வீமன் சகாதே வன்விசயன்
நன்மை பரிநகுலன் நாடான நாடதுதான்
குருநா டெனவே கூறுவா ரந்நகரு
திருநாடு தன்னுடைய சிறப்புக்கே ளம்மானை
.
விளக்கம்
=========
மகாபாதகனாகிய அந்தத் துரியோதனன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதுமே அஷ்தினாபுரத்தில் பசுக்கள் குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காத நிலையில் வறட்சி ஏற்பட்டுவிட்டது.
.
ஆனால் தர்மர், வீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய பஞ்சபாண்டவர்களுக்காக அவர்கள் மீது அனுதாபம் கொண்டவர்களெல்லாம், இந்திர பிரஸ்தம் என்னும் காட்டுப்பகுதியை நாடாகச் செப்பனிட்டு ஆண்டு கொள்ளுங்கள் என்னு அனுமதித்திருந்ததின் பேரில், அப்பகுதியைச் செம்மையாக சீர் செய்து பஞ்சபாண்டவர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள். அந்நாட்டைக் குருநாடு என்றும் கூறுவர். அந்த அற்புதமான திருநாட்டின் சீரிய சிறப்பும் இங்கே சொல்லப்படுகிறது.
.
.
தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩

