பழைய காயங்கள் உண்மையிலேயே குணமாகின்றனவா? அல்லது நாட்டில் புதிய காயங்கள் ஏற்படுத்தப்படுகின்றனவா?
அயோத்தியில் புதிதாக எழுப்பப்பட்ட ராம் கோயிலில், சங்க பரிவாரால் ‘தர்ம த்வஜ்’ என அழைக்கப்படும் காவிக் கொடியை இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார். அவ்வேளையில் அவர், “பல நூற்றாண்டுகளாக நீடித்து வந்த காயங்கள் இப்போது குணமாகி வருகின்றன; பழைய வலி இப்போது முடிவுக்கு வருகிறது; பல நூற்றாண்டுகளாக இருந்த ஒரு உறுதிமொழி இப்போது நிறைவேறுகிறது” என்று பேசினார். இதை அவர் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான ‘யாகத்தின்’ நிறைவு எனவும் விவரித்தார்.
அயோத்தி ராம் கோயிலில் ஏற்றப்பட்ட இந்தக் காவிக் கொடி “தர்மம், மரியாதை, உண்மை, நீதி மற்றும் தேசிய மதத்தை” குறிப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். அவரைப் பொறுத்தவரை இது வளர்ந்து வரும் இந்தியாவின் அடையாளம்.
ஆனால் உண்மை அதுவல்ல. சுதந்திரத்துக்குப் பிறகு கடந்த ஏழு தசாப்தங்களாக இந்திய மக்கள் அறிந்து வந்த, வாழ்ந்து வந்த இந்தியா ஒரு முடிவை நோக்கி நகர்கிறது. அதற்குப் பதிலாக, சமத்துவம், மதச்சார்பின்மை, அனைவருக்குமான கண்ணியம் ஆகிய அடிப்படைக் கொள்கைகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மதவெறி மற்றும் சகிப்புத்தன்மையின்மைக்குப் பலிகடாவாக்கப்படும் ஒரு புதிய நாடு உருவாக்கப்படுகிறது. அரசியல் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றிய இப்பிரிவினர், இப்போது அரசியலமைப்பின் அடித்தளங்களையும், அமைதியான சமூக ஒழுங்கையும், ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையும் கண்ணியமான பங்கேற்பும் உறுதி செய்த அரசியல் முறையையும் அழித்தொழிக்க முனைப்புக் காட்டுகின்றனர்.
பிரதமரின் உரை மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஏனெனில், இந்திய வரலாற்றில் எந்தப் பிரதமரும் இவ்வளவு அப்பட்டமான, குறுகிய மனப்பான்மை கொண்ட, வகுப்புவாத மொழியைப் பயன்படுத்தியதில்லை. ஐந்து நூற்றாண்டுகளாக அங்கு ஒரு மசூதி இருந்தது, அது அவரது சொந்த ஆதரவாளர்களால் இடிக்கப்பட்டது என்பதாலேயே அவர் ‘ஐந்நூறு ஆண்டு யாகம்’ பற்றிப் பேசுகிறார். அந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிரையும் சொத்தையும் இழந்தனர்; இன்றுவரை அவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. ஆனாலும், அந்த உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது போலவே பிரதமர் பேசுகிறார்.
இந்த அணுகுமுறை, அரசாங்கம் தன் சிறுபான்மை குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் விசயத்தில் எவ்வளவு அலட்சியமாகவும் பொறுப்பற்றதாகவும் மாறியிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இத்தகைய பேச்சு எந்தப் பொறுப்புள்ள அரசாங்கத்துக்கும் அவமானம். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இதை எதிர்க்க வேண்டிய கடமை உள்ளது.
பன்முக மதங்கள், பன்மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட இந்நாட்டுக்கு “தேசிய மதம்” என்ற கருத்தே மிகவும் ஆபத்தானது. இது பாகிஸ்தானில் நடந்தது போல, பெரும்பான்மை மதத்தை அரசின் அதிகாரபூர்வ மதமாக மாற்றி, நாட்டை முழுமையான பேரழிவை நோக்கித் தள்ளும். அந்தக் கொள்கை அங்கு முழுமையான பேரழிவையே உருவாக்கியிருக்கிறது என்பது நிதர்சனம்.
பாஜக மற்றும் சங்க பரிவார் தலைவர்கள் ஆபத்தான விளையாட்டை ஆடுகிறார்கள். இந்தியாவை “இந்து ராஷ்ட்ரமாக” மாற்றும் முயற்சிகள் நாட்டைப் பிளவுபடுத்துவது மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக கீழ் சாதியினரும் பழங்குடியினரும் அடிப்படை உரிமைகளையே இழந்து வாழ்ந்த கடுமையான சாதி அமைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும். “தேசிய மதம்” என்ற கருத்து முன்னெடுக்கப்பட்டால், அது பிராமண ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதாகவே செய்தி அனுப்பும். சுதந்திர இந்தியாவில் இச்சமூகங்கள் மிகக் கடினமாகப் போராடி அடைந்த குறைந்தபட்ச சாதனைகளையும் இது குறைத்து மதிப்பிடும் அபாயம் உள்ளது.
–முகமது ஷஃபி
தேசிய துணைத் தலைவர், SDPI #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📷வாட்ஸப் DP #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴

