ShareChat
click to see wallet page
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை-1ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 18.10.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======= கிரேதா யுகம் தொடர்ச்சி ==================== . . அகிலம். ====== என்றேதான் தூதன் இவையுரைக்கச் சூரனுந்தான் அன்றே மனது அளறித்துணிந் தேதுரைப்பான் ஆனா லறிவோம் ஆண்டி தனையுமிங்கே போனா லென்னோடே போருசெய்ய யேவிடுநீ சூர னிவையுரைக்கச் சூலாயுதப் பெருமாள் தூதன் மிகநடந்து சொன்னான் சுவாமியர்க்கு . விளக்கம் ====== தூதுவனாக எந்த வீரவாகு தேவரின் உறுதி வாய்ந்த வார்த்தைகள், சூதுமதி கொண்ட சூரபத்மனின் மனதை உலைக்களமாக்கிற்று என்றாலும் திடப்படுத்திக் கொண்டவனாய், வீரவாகுதேவரைப் பார்த்து, என்னைக் கொன்று தீர்த்துவிட்டு இந்த உலகத்தையே அந்த ஆண்டி ஆளப்போகிறானா? அதையும் தான் பார்ப்போம். . இப்போது நீ அந்த ஆண்டியிடம் சென்றால்தான், அவனை என்னொடு போரிடுவதற்கு நீ ஏவி விடுவாய். உடனே ஓடிப்போ ஏவி விடு அந்த ஆண்டியை என்று முழக்கமிட்டான். வேலாயுதப் பெருமானின் விவேகமிக்கத் தூதுவனோ அங்கிருந்து விரைந்து வந்து. எல்லாச் செய்திகளையும் கந்தபிரானிடம் எடுத்துரைத்தார். . . கந்தபிரான் சூரனை வதைக்கப் புறப்படுதல். =================================== அகிலம் ======= சுவாமி மனமகிழ்ந்து சூரன் தனையறுக்கக் காமிவே லாயுதத்தைக் கையிலெடுத்தா ரம்மானை வேலா யுதமெடுத்து வேதப் படைசூழ சூலாயுதப் பெருமாள் துடியாய் நடக்கலுற்றார் கந்தனார் வேசம் கரந்திருந்த மாயவனார் வந்தார்காண் சூரன் வலுவிழந்தா னம்மானை . விளக்கம் ======== தூதுவனின் சொற்கேட்ட வேலாயுதனார் வெற்றிக் களிப்படைந்தார். சூரனை சம்காரம் செய்தேயாக வேண்டுமென முடிவெடுத்தார். வேதப்படைகளை அணிவகுக்கச் செய்தார். சக்தியாகிய வேலாயுதத்தைக் கையிலே எடுத்துக் கொண்டு வீறுநடை நடந்தார். அழகுத் திருவேசம் கலந்திருந்த மாயப்பெருமாளாம் மகாவிஷ்ணுவின் வருகையால் சூரபத்மன் வலுவிழந்தான். . . அகிலம் ======== சூர னவன்கண்டு தோசப் படையணிந்து மூரன் படைக்கு முன்னே நடக்கலுற்றான் கண்டா ரீராறு கரத்தோ னகமகிழ்ந்து பண்டார வேசம்பண்பா யெடுத்திறுக்கி முன்னே வருஞ்சூரன் முகத்தை யவர்பார்த்துப் பின்னே சுவாமி புத்தி மிகவுரைப்பார் . விளக்கம் ========= மாயனின் வருகையால் மனம் புழுங்கிய சூரன் தன்னுடைய குதர்க்கமான படைகளைப் போருக்கு ஆயத்தமாக்கிக் கொண்டு அந்தக் குற்றப்படைக்கு முன்னிலை வகித்து வந்தான். படை நடத்தி வரும் சூரபத்மனை பன்னிரு கரத்தோனாகிய மாயோன் கண்டு அகமகிழ்ந்தார். தன்னுடைய பண்டார வேசத்தை அதாவது உலகம் யாவுமே தம் உடைமை என்ற நிலைப்பாட்டை இதமாக எதிரே நிற்கும் சூரனுக்கு எடுத்துக் காட்டியவாறு சூரனின் முகத்தைப் பார்த்து சூரனுக்கு அறிவுரை வழங்க ஆயுத்தமானார். . . சூரபத்மனுக்குப் போர்க்களத்தில் புத்திமதி ========================================= அகிலம் ======== . வம்பி லிறவாதே வாழ்விழந்து போகாதே தம்பி தலைவன் தளமு மிழவாதே பற்பக் கிரீடப் பவுசு மிழவாதே அற்ப மிந்தவாழ்வு அநியாயம் விட்டுவிடு கரணமீ தில்லாமல் கௌவையற்று வாழ்ந்திருந்து மரணம் வந்துசீவன் மாண்டுபோ கும்போது நன்மை யதுகூட நாடுமே யல்லாது தின்மை வராது தேவரையும் விட்டுவிடு தீட்சை யுடன்புத்தி செவ்வேநே ரிட்டுவொரு மோட்ச மதுதேட முடுக்கமதை விட்டுவிடு . விளக்கம் சூரபத்மா, வீரனான நீ வீணான விபரீத புத்தியால் வம்பாக அடம் பிடித்து துஷ்டன் என்ற பெயரோடு துர்மரணம் அடையாதே. . உன்னுடைய ஆட்சி என்னும் அதிகார துர்ப்பிரயோகத்தால் உன்னுடைய வலிமை வாய்ந்த சூரப்படைகளுக்குத் தளபதியாகத் தலைமையேற்றிருக்கும் உன் தம்பியையும், படைகளையும் சேனைத் தளங்களையும் பரிதாபத்துக்குரியவனாகப் பறிகொடுத்து விடாதே. . சூரபத்மா, உன் பெயருக்குப் பொருத்தமாக உனக்கு அமைந்திருக்கும் தடாகத்துத் தாமரை மலர் போன்ற அழகு மிகு மகுடத்தையும், வளமான செழிப்பும், வலுவான சிறப்பும் பொருந்திய சொகுசான சிங்கார வாழ்வையும் சீர்குலைத்து விடாதே. . இந்த உலகத்தில் நாம் என்றென்றும் நிரந்தரமாக இருக்கப் போகிறோம் என்ற தவறான எண்ணத்தினால் ஈடழிந்து போகாதே. நிலவுலக வாழ்க்கை என்பது நீர்க் குமிழி போன்றது. நிலையில்லாதது. .. குறுகிய கால அளவைப் கொண்ட வாழ்க்கையானது சில சமயங்களில் வானவில் போன்று பகட்டாகத் தோன்றும். ஆனால் வானவில் நிரந்தரமாக எப்போதும் வானத்தில் இருப்பதில்லை. அதுபோல் இந்த பூவுலக வாழ்க்கையும் தோன்றி மறையும் தன்மையுடையதேயாகும். .. ஆகவே, இவற்றையெல்லாம் இதமாக உணர்ந்து வாழுகின்ற நாளில் மற்றவர்களின் மனம் குமுறும்படியான குற்றங்களையும், குதர்க்கமான நடவடிக்கைகளையும், அபாண்டமான பழி பாவங்களையும் செய்து உனக்கு நீயே படுகுழியைத் தோண்டாதே. . உனக்காக இறைவன் அருளிய காலத்தையும், அறிவையும், ஆற்றலையும் அட்டுழியங்களுக்குப் பயன்படுத்தாமல், பலருக்குப் பயன்படத்தக்க, பலரால் பாராட்டத்தக்க நற்கைங்கரியங்களுக்கு உபயோகப்படுத்தி உலகில் கவலை என்ற துன்பமற்று, நிம்மதி என்ற சுகத்தோடு வாழ்க்கையை நடத்து. . உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனுக்கும் மரணம் உண்டு. மரணம் என்பது கருவில் உருவாகும்போதே நிச்சயிக்கப்படுவதாகும். அது இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவருடைய பிடியிலும் இல்லை. அதிலிருந்து தப்பிக்கவோ, தள்ளிப்போடவோ, மரணம் எப்போது வரும் என்று கணக்கிடவோ யாராலும் முடியாது. . படைத்தவனால் கணிக்கப்பட்ட நேரத்தில் திணிக்கப்படுவதே மரணம். அத்தகைய இயற்கையான மரணத்தால் உயிர் பிரிந்து உடல் சடமாகும் நேரத்தில் நீ செய்த நற்செயல்கள்தான் உன்னை நாடி நிற்குமே தவிர நீ செய்த தீவினைகள் உன்னைக் காப்பாற்றாது. ஆகவே, நீ சிறைப்படுத்தி வைத்திருக்கும் விண்ணவர்களை எல்லாம் உடனே விட்டு விடு. . நான் இப்போது கூறும் இந்த வரதநியம உபதேசத்தை, உன் சிந்தையிலே ஏற்றி. நற்புத்தியோடு மண்ணோரும், விண்ணோரும் மனம் மகிழத்தக்க நற்பணிகளை நாட்டமுடன் நேர்மையாகச் செய்து, மோட்சத்தை ஈட்ட முற்படும் வகையில், உன்னுடைய ஆணவ மலத்தால் ஏற்பட்ட அகம்பாவத்தால், அதிகார துஷ்பிரயோகத்தால் அடுத்தவர்களுக்குத் துன்பம் ஏற்படுத்தும் கொடூர குணத்தை விட்டுவிடு என்று சூரபத்மனுக்குக் கந்தபிரான் உபதேசம் செய்தார். . . . அகிலம் ======= இத்தனையும் நாதன் எடுத்து மிகவுரைக்கப் புத்திகெட்டப் பாவி போர்சூர னேதுரைப்பான் இரந்து திரியுகின்ற இரப்பனுக் குள்ளபுத்திப் பரந்த புவியாளும் பாரமுடிக் காவலற்கு ஏற்குமோ ஞானம் இரப்போருக் கல்லாது ஆர்க்குமே சொல்லாதே ஆண்டிவுன் ஞாயமதை சண்டைக்கு வாவெனவே தரங்கூறித் தூதுவிட்டப் பண்டார மென்ற படைக்கார னும்நீயோ என்னுடைய சேனை எல்லாமிக அழித்து என்னையும் நாய்நரிக்கு இடுவேனென் றதும்நீயோ என்றே யச்சூரன் இயம்பி மிகநகைத்துப் பண்டார னோடே படையெடுத்தா னம்மானை . விளக்கம் ========= கந்தபிரான் உரைத்த கருத்தாழமிக்க உபதேசங்களைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த கெடுமதியாளனாகிய சூரபத்மன், கந்தபிரானைப் பார்த்துச் சொல்கிறான், கந்தா நீயோ ஒரு பிச்சைக்காரன். ஒரு பிச்சைக்காரனுக்கே இத்தனை விவேகம் இருக்கிறதென்றால் இந்த பெரும் புவியை ஆண்டுகொண்டிருக்கும் பேரசனான எனக்கு எவ்வளவு விவேகம் இருக்கும் என்பதை எள்முனையளவாவது எண்ணிப் பார்த்தாயா? . இரப்பனான உன்னுடைய தர்ம ஞாயங்களை இன்னொரு இரப்பன் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளக் கூடுமே தவிர, என்னைப் போன்றோர் யாருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இத்தகைய பிச்சைக்காரத் தனமான பிதற்றல்களை யாரிடத்திலும் இன்னொரு முறை சொல்லிவிடாதே. . என்னைச் சண்டைக்கு வா என்று தூது அனுப்பிய பண்டாரமாகிய பலசாலி நீதானோ? என்னுடைய படைகளையெல்லாம் கொன்று குவித்துவிட்டு, என்னையும் நாய் நரிகளுக்கு உணவாக்குவேன் என்று சூளுரைத்த வேலாயுதன் நீ தானோ? என்று சூரபத்மன் சிந்தனையற்று கந்தபிரானை நிந்தித்தான். உலகம் யாவையும் உடைமையாகக் கொண்ட கந்தனாகிய அந்த விந்தா வினோதனோடு போர் தொடுத்தான். . . அகிலம் ======= சூரன் வதை =========== சூரனுட படைகள் துண்டந்துண்ட மாய்விழவே வீரர்களும் வந்து வெட்டினா ரம்மானை வெட்டிதினால் செத்தார் மிகுசூ ரக்குலங்கள் பட்டார்க ளென்று பார்சூரன் தான்கேட்டு வந்து எதிர்த்தான்காண் மாயாண்டி தன்னோடே இன்றுவந்து வாய்த்துதென்று எம்பெருமா ளுமகிழ்ந்து வேலா யுதத்தை விறுமா பதஞ்சேவித்து மேலாம் பரனார் விமல னருளாலே எறிந்தார்காண் சூரன் இறந்தானே மண்மீதில் பறிந்தேவே லாயுதமும் பாற்கடலில் மூழ்கியதே சூரன் மடிந்து துடித்துயிர் போகுகையில் வீரமுள்ள நாதன் வீணனவன் முன்பில்வந்து சொன்ன மொழியெல்லாம் சூட்சமாய்க் கேளாமல் இந்நிலமேல் பாவி இறந்தாயே வம்பாலே நாட்டமுடன் நானுரைத்த நல்லமொழி கேளாமல் கோட்டையு முன்னுடைய குஞ்சரமுந் தோற்றாயே சந்துவிட்ட சொற்படிக்குத் தந்தரசு ஆளாமல் விந்துக் குலங்களற்று வீணாய்நீ மாண்டாயே மாளா வரங்கள் மாகோடி பெற்றோமென்று பாழாக மாண்டாயே பண்டாரங் கையாலே என்றந்த ஆதி இத்தனையுந் தான்கூற . விளக்கம் ========= அசுரப்படைகளுக்கு அரசனாகிய சூரபத்மன் போர்புரிய ஆணை பிறப்பித்ததுமே, அனைத்து அசுரர்களும் ஆயுத பாணிகளோடு களம் புகுந்தனர். கணப்பொழுதில் கந்தபிரானின் படைகளும் களம் வந்து சேர்ந்தன. இருமுனைப் படைகளும் ஒன்றோடு ஒன்று மோதின. கந்த பிரானின் படைகள் சூரபத்மனின் படைகளை வெட்டி வீழ்த்தினர். . அழிந்தது அசுரகுலம் என்ற செய்தியை அறிந்தான் சூரபத்மன். ஆறுமுகமாக ஆண்டிக்கோலத்தில் காட்சியளிக்கும் மாயோனை மாய்த்துவிட வேண்டும் என்ற மமதையோடு போர் புரியத் துணிந்தான். .. கந்தபிரானை நேரடியாக எதிர்த்துப் போர் புரிய வந்த சூரபத்மனைப் பார்த்து மனம் மகிழ்ந்த மாயோன். இதுவே நல்ல சந்தர்ப்பம் என்றெண்ணி, வேகமாக வேலாயுதத்தை எடுத்து, அந்த வேலாயுதம் என்ன செய்ய வேண்டுமோ அதற்கான உபாயத்தை அதற்குப் போதித்து, பரம்பிரம்ம நிலையாகி நின்று கொண்டு வேலாயுத்தை வீசினார். வேலாயுதம் சூரபத்மனை கூர்பார்த்துவிட்டது. எனவே சூரபத்மன் மண்ணிலே சாய்ந்தான். .. சூரபத்மனை கூர்பார்த்த வேராயுதம் அந்த வேகத்திலேயே பறந்து சென்று பாற்கடலில் மூழ்கியது. அப்போது சூரபத்மன் குற்றுயிராகக் கிடந்தான். மரண தருணத்தில் இருக்கும் அந்த மகாபாதகனின் அருகில் சென்ற கந்தபிரான், சூரபத்மா, நான் உன்னிடம் உரைத்த உபதேசங்களை உணர்வுப்பூர்வமாக உற்றுப் பார்க்காமல் அவற்றை உதாசினப்படுத்தியதால் தானே இப்போது வேரற்ற மரம்போல் இந்த மண்ணில் வீழ்ந்து மாளக்கிடக்கிறாய்? .. உன்னைத் திருத்திவிடலாம் என்ற திடமான சிந்தையோடு நான் உரைத்த கருத்தையெல்லாம் குறைத்து மதித்ததினால்தானே உன்னுடைய கோட்டை கொத்தளங்களையும், யானை, சேனைகளையும் இழக்க வேண்டியதாயிற்று. . நான் தூதுவன் மூலமாகச் சொல்லி அனுப்பியபடி சிறையில் அடைத்து வைத்திருக்கும் தேவர்களையெல்லாம் விடுவித்து விட்டு, நல்ல முறையாக நாட்டை நீ ஆண்டு இருக்கலாம். இப்படி உன்னுடைய வம்சா வழிகளை எல்லாம் பூண்டோடு ஒழித்து விட்டு வீணாக நீயும் மாண்டிருக்க வேண்டாமே? . சாகாத வரங்கள் பல கோடி பெற்றுவிட்டோமென்ற ஆங்காரத்தோடு வாது சூது செய்து வம்புரைத்த காரணத்தால், நீ இந்தப் பண்டாரத்தின் கையினால் பாழாக மாண்டு விட்டாயென்று கந்தபிரான் சூரபத்மனிடம் சொல்லி உணர்த்தினார். . . அகிலம் ======= முந்து பிறந்த முப்பிறப்புச் சூரமதால் என்னையோ கொல்ல இரப்பனோ ஏலுவது உன்னையோ கொல்ல ஒட்டுவனோ நான்துணிந்தால் வேலா யுதத்தாலே வென்றுகொன்ற தல்லாது ஏலாது வுன்னாலே இளப்பமிங்கே பேசாதே என்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன் கொன்றாரே சூரனுட குறவுயிரை யம்மானை . விளக்கம் ========= கந்தபிரானின் சொற்றொடர்கள் சூரபத்மனின் சிந்தையில் பாய்ந்து சிலநொடி தேங்கி நின்றது. ஆகவே அவ்வரக்கனின் சித்தம் சற்று தெளிவடைந்தது. என்றாலும், பிறவிக்குணம் பேய்க்குக் கொடுத்தாலும் திருந்தாது என்று பாமரர்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் பழமொழியொன்று சொல்வார்களே அது போல, கந்தபிரானின் கருத்துரையால் சூரபத்மன் உண்மையை உணர்ந்த போதிலும் அவனுடைய பிறவிக்குணம் அவனுடைய நாவை ஆக்கிரமித்துக் கொண்டது. . ஆகவே, சூரபத்மன் கந்தபிரானைப் பார்த்துச் சொல்கிறான், அடே பிச்சைக்காரா பிதற்றாதே. என்னைக் கொல்வதற்கு இரப்பனாகிய உன்னால் முடியாது. நான் மட்டும் மனப்பூர்வமாக நினைத்திருந்தால் உன்னைக் கொல்லாமல் ஒருபோதும் விட்டிருக்கவே மாட்டேன். ஆனால் நீயோ, வேலாயுத்ததின் துணை கொண்டு என்னை வென்றுவிட்டாய். இத்தலத்தில் கொன்றுவிட்டாய். வேலாயுதம் மட்டும் இல்லாவிட்டால் என்னைக் கொல்ல உன்னால் ஏலாது. என்னைப் பார்த்து இன்னும் இளப்பமாகப் பேசாதே என்றான். . சூரபத்மனின் இந்தச் சூதுரை கந்தபிரானுக்குக் கடும் கோபத்தைத் தூண்டியது. எனவே, குற்றுயிராக் கிடக்கும் சூரபத்மனின் குறை உயிரையும் கந்தபிரான் கவர்ந்து கொண்டார். . அகிலம்: ======= விருத்தம் ========= சூரனைத் துணித்த சத்தி சூலமும் கடலில் மூழ்கி வீரமால் பதத்தைப் போற்றி விளம்புவாள் சத்தி மாது மூரனைச் செயிக்க முன்னே முச்சூலமாய்ச் சபித்த சாபம் தீரவே வேணு மென்று திருப்பதம் வணங்கி நின்றாள் . விளக்கம் ========= சூரபத்மனை சம்காரம் செய்த சக்தியாகிய வேலாயுதம் கடலில் நீராடிவிட்டு, திரும்பிவந்து திருமாலின் திருப்பாதங்களைத் தொட்டு வணங்கி, சூரபத்மனை கொல்வதற்காக என்னை வேலாயுதமாக்கிய தாங்கள் மீண்டும் எனக்கு பழைய நிலையை அருள வேண்டும் என்று வேண்டி நின்றது. . . தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008}
Ayya Vaikundar - {ನa {ನa - ShareChat

More like this