கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை-1ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 19.10.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
=======
கிரேதா யுகம் தொடர்ச்சி
==========================
.
.
அகிலம்
வேலாயுதம் மீண்டும் சக்தியாக உருமாற்றமாகுதல்
==============================
ஆதியே நாதி அனாதித் திருவுளமே
சோதியே யென்னுடைய சூலசா பந்தீரும்
என்று உமையாள் எடுத்து மிகவுரைக்க
நன்றெனவே அந்த நாரா யணர்மகிழ்ந்து
சாப மதுதீரச் சாந்தி மிகவளர்த்தார்
தாபமுடன் மாயன் சாந்தி மிகவளர்க்க
அம்மை உமையாளின் ஆனசாபந் தீர்ந்து
செம்மையுடன் கயிலை சென்றனள்கா ணம்மானை
.
விளக்கம்
========
சக்தியாகிய வேலாயுதம் மகாவிஷ்ணுவின் பாதார விந்தங்களைப் பணிந்து, ஆதியே, நித்தியமாகிய நிரந்தரவஸ்துவே, முதன்மையாகிய மூலத் திருவுள்ளமே, உலகிற்கு வெளிச்சத்தை அருளுகின்ற ஒளியே, நான் வேலாயுதமாவதற்கான காரண காரியம் நிறைவேறிவிட்டதால் எனக்கே உரித்தான உருவத்தை அருளும் என்று கேட்டதும், மகாவிஷ்ணு அதற்கான தோஷ நிவாரணம் செய்தார். வேராயுதம், அம்மை உமையவளாக உருமாற்றம் பெற்று கயிலைக்குச் சென்றாள்.
.
.
அகிலம்
========
இரணியன் பாடு
================
சத்திசா பந்தீர்த்துத் தவலோக மேயனுப்பித்
தத்தியாய்ச் சூரனையும் சங்காரஞ் செய்துஅந்த
சூரனூர் தன்னைத் தீயோன் தனக்களித்து
வீரசூ ரன்தனையும் மேலுமந் தவ்வுகத்தில்
பார இரணியனாய்ப் படைத்தார்கா ணம்மானை
.
விளக்கம்
========
அம்மை உமையவளைக் கயிலைக்கு அனுப்பிவிட்டு, வல்லமையோடு சூரபத்மனை வதை செய்வதற்கு உதவிய, அதாவது, சூரன் ஆட்சிபுரிந்த நாட்டை இது தியோன் ஆண்ட நாடு என்ற பழியைப் போக்கி, சூரபத்மனை மீண்டும் அதே கிரேதாயுகத்தில் சகல வகையான பலமும் பொருந்திய இரணியனாகப் படைத்தார்.
.
.
அகிலம்
========
இரணியன் வதை.
================
சூர னிரணியனாய்த் தோன்றினா னவ்வுகத்தில்
மாய னொருகோலம் மகவா யுருவெடுத்து
வாயல் நடையில்வைத்து மாபாவிச் சூரனையும்
நெஞ்சை யவர்நகத்தால் நேரேப் பிளந்துவைத்து
வஞ்சக னோடே மாயன் மிகவுரைத்தார்
சூர பற்பனாகத் தோன்றினா யந்நாளில்
ஊரிரப்ப னாக உருவாக நான்தோன்றிக்
கொன்னே னானென்று கூறினே னப்போது
அந்நேரம் நீதான் ஆண்டியல்லக் கொன்னதென்றாய்
வேலா யுதத்தாலே வென்றாய்நீ யல்லாது
ஏலாது உன்னாலே என்றன்று பேசினையே
ஆயுதங்க ளம்பு அஸ்திரம்வா ளில்லாமல்
வாயிதமா யென்னகத்தால் வகிர்ந்தேனா னுன்வயிற்றை
என்றுமா யனுரைக்க ஏதுரைப் பான்சூரன்
.
விளக்கம்
========
கிரேதாயுகத்தின் வயது முடிவடைவதற்கு முன்பே சூரசம்ஹாரம் நடைபெற்றுவிட்டதாலும், சூரபத்மன் சாகும் தருணம், சக்தியை வேலாயுதமாகக் கொண்டு தான் என்னைக் கொல்ல முடிந்ததே தவிர, அல்லாமல் என்னைக் கொல்ல ஏலாது உன்னாலே, என்று வீறாப்பு பேசியதாலும் சூரபத்மன் மீண்டும் அதே யுகத்தில் இரணியனாகப் பிறப்பிக்கப்பட்டான்.
.
மகாவிஷ்ணுவின் ஒரு அம்சம் இரணியனுக்கு மகனாகப் பிரகலாதன் என்ற பெயரோடு பிறந்தது. அதே மகாவிஷ்ணு நரசிம்மாகவும் அவதாரமெடுத்தார். இரணியனின் அரண்மனை வாயில் நடையில் வைத்து இரணியனின் நெஞ்சைத் தன் நகத்தால் பிளந்து வைத்துக் கொண்டு இரணியனோடு நரசிம்மனாக மகாவிஷ்ணு உரையாடுகிறார்.
.
இரணியா, இதே கிரேதாயுகத்தில், நீ சூரபத்மனாகப் பிறந்து கொலையாட்சி புரிந்தாய். அப்போது நான் பிச்சைக்காரக் கோலத்தில் தோன்றி உன்னைக் கொன்றேன். நீயோ, வேலாயுதமே என்னைக் கொன்றது உன்னால் என்னைக் கொல்ல முடியாது என்றாய். எனவே, இப்போது எவ்வித ஆயுதங்களும் இல்லாமல் என்னுடைய நகத்தால் உன்னை இரண்டாகப் பிளந்து விட்டேன்.. இப்போதாவது உன்னையும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணருகிறாயா என்று கேட்டார். அதற்கு, இறக்கும் தருணத்தில் இருக்கும் இரணியன் ஏறுக்கு மாறாக அன்று சூரனாகச் சொன்னது போலவே பதில் சொல்கிறான்.
.
.
அகிலம்
========
பத்து மலையைப் பாரநக மாய்ப்பதித்து
இத்தலத்தி லென்னை இறக்கவைத்தா யல்லாது
ஏலாது உன்னாலே இந்தமொழி பேசாதே
மாலா னவேதன் மனதுகோ பம்வெகுண்டு
உன்னை யின்னமிந்த உலகில் பிறவிசெய்து
கொன்னா லேவிடுவேன் கிரேதா யுகம்வயது
திகைந்தல்லோ போச்சு திரேதா யுகம்பிறந்தால்
பகையுந் தானப்போ பார்மீதி லுண்டாகும்
முப்பிறவித் துண்டம் உயிர்ப்பிறவி செய்கையிலே
இப்பிறவி தன்னில் இசைந்தமொழி கேட்பேனான்
என்று இரணியனை இரணசங் காரமிட்டு
அன்று கிரேதா யுகமழித்தா ரம்மானை
அந்தக் கிரேதா யுகமழித்த அந்நாளில்
கந்தத் திருவேசம் கலந்திருந்த மாயவனார்
செந்தூர்ப் பதியில் சேர்ந்திருந்தா ரம்மானை
.
விளக்கம்
========
பத்து பெரிய மலைகளை உன் விரல்களின் நகமாகப் பதித்து வைத்துக்கொண்டு இந்த இடத்தில் என்னைக் கொன்றுவிட்டாய். இந்த நகங்கள் இல்லையென்றால் உன்னால் என்னைக் கொல்ல ஏலாது. வீணாக இரணியனைக் கொன்றுவிட்டதாக நினைத்து மகிழாதே என்றான் இரணியன்.
.
இரணியனின் இந்த குதர்க்கமான கூற்று மகாவிஷ்ணுவுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது. என்றாலும் சொல்கிறார், இரணியா, இன்னும் ஒரு முறை இதே யுகத்தில் உன்னைப் பிறப்பித்து உனக்குமேல் ஒரு சக்தி இருப்பதாக உனக்கு உணர வைத்து உன்னைக் கொன்றிருப்பேன். ஆனால் கிரேதாயுகத்தின் வயது முடிந்துவிட்டது.
.
அடுத்து திரேதாயுகம் பிறக்கப் போகிறது. அதில் குறோணியின் உடலில் உள்ள நான்காவது துண்டத்தல் வழக்கம்போல் உன் உயிரை இணைத்து பிறப்பித்து, உன்னைக் கொல்லுவேனே அப்போது, இப்பிறவியில் நீ மரண வாக்கு மூலமாக மொழிந்த இந்த வார்த்தைகளை அன்றுனக்கு நினைவுபடுத்துவேன் என்று சொல்லி இரணியன் உயிரைக் கவர்ந்து அத்துடன் கிரேதாயுகத்தை நிறைவு செய்தார்.
.
கிரேதாயுகம் நிறைவு பெற்றதும், ஆறுமுகனாக வடிவெடுத்திருந்த மகாவிஷ்ணு திருச்செந்தூர் பதியில் பள்ளி கொண்டார்.
.
.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 1ஆம் நாள் வாசிப்பு நிறைவு பெற்றது.
அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩

