ShareChat
click to see wallet page
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 22.11.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== துரியோதனன் செய்த கொடுமைகள் ------------------------------------ நஞ்சைக் கலந்து நல்லதயி ரென்றீந்தான் அஞ்சலென்று மாயன் அதுகாத்தா ரம்மானை பாதாளம் வெட்டிப் பார்வீ மனையோட்டி நீதாள மான நெடியோ னதுகாத்தார் கன்னிதனிற் பாவி கழுநாட்டி ஐவரையும் கொன்றுவிட வைத்ததையும் குன்றெடுத்தார் காத்தனரே அரவதையும் விட்டு அருள்வீம னைவதைத்தான் விரைவுடனே மாயன் விசந்தீர்த்துக் காத்தனரே தண்ணீரில் நஞ்சைவிட்டுச் சதித்தானே ஐவரையும் மண்ணீரேழு மளந்த மாயனது காத்தார் பூதத்தை யேவிப் புல்லிசெய்தான் மாபாவி நீதத் திருமால் நிலைநிறுத்தி யாண்டனரே இப்படியே பாவி இடறுசெய்த தோசமெல்லாம் அப்படியே மாயன்காத்து ஆண்டனரே ஐவரையும் பாவியவன் செய்ததெல்லாம் பலியாம லைபேர்க்கும் சோவிதமாய் மாயன் துணைசெய்தா ரம்மானை . விளக்கம் ========= கானகத்திலிருக்கும் பாண்டவர்களுக்குப் பரிவு காட்டுவது போல் பாசாங்கு செய்த துரியோதனன், தயிரிலே நஞ்சைக் கலந்து பஞ்சவர்க்கென அனுப்பி வைத்தான். . புல்லாங்குழல் நாதன் பூமிபாரம் தீர்ப்பதற்கு, நல்ல துணையாக நாடிப் பிறவி செய்த வல்லவனாம் வீமனை, பாதாளக்கிடங்கைத் தோண்டி அதற்குள் தள்ளி கொல்லத் துணிந்தான். . நீர் நிரம்பிய குளம் ஒன்றில், கூரான கழுமரங்களை நாட்டி வைத்து பஞ்சபாண்டவர்களை அந்தக் குளத்துக்குள் குதித்து விளையாடி வழி வகுத்தான். . வீமனைக் கொல்வதற்கென்றே விஷப்பாம்பை வீமனின் இருப்பிடத்திற்கு அனுப்பிக் கடிக்கச் செய்தான். . குடிக்கும் தண்ணீரில் நஞ்சைக் கலந்து ஐவரையும் குடிக்க வைத்தான். . பாண்டவர்களைப் பழிதீர்க்க பூத தேவதைகளை ஏவி அனுப்பினான். இப்படிப் பற்பல கேடுகளை துரியோதனன் அடுக்கடுக்காகச் செய்து கொண்டேயிருந்தான். மாயக் கண்ணனோ பஞ்சவர்க்குப் பேருபகாரியாக இருந்து கொண்டு பாண்டவர்களைத் தேடி வந்த துன்பங்களையெல்லாம் வழி மாற்றி அனுப்பிவைத்தார். . . அகிலம் ======== பாண்டவர்களுக்காகக் கிருஷ்ணபரமாத்மா துரியோதனனிடம் தூது போகுதல் =================================================== துரியோதனன் பாடு ================== பின்னுமந்தப் பஞ்சவர்க்குப் பெரும்பாவி சொன்னபடி பன்னிரண் டாண்டு பரிவாய்க் கழிந்தபின்பு மாயன் தூதுபோனார் வஞ்சமில்லாப் பஞ்சவர்க்குத் தீயதுரி யோதனனும் திருமாலைப் பாராமல் தாள்போல் புத்தி தானுரைத்துப் பஞ்சவர்க்கு வாழ்வுபெறப் பூமி வாரென்றார் வாமனுமே எள்போ லிடங்கள் ஈயேனென வுரைத்தான் மாயனையும் பாவி வாபோ வெனப்பேசி ஈயேனெனச் சொன்ன இயல்புகேட் டெம்பெருமாள் கன்னன் பிலமும் கடியவிது ரன்பிலமும் மன்னன் சிறுபீஷ்மர் வாழுந்துரோ ணர்பிலமும் தென்னன் துரியோ தனன்பிலமுந் தானழித்து வன்ன விசயனுக்கு வாளி பலகொடுத்து வீமனுக்கு நல்ல விசைதண்டா யுதங்கொடுத்துத் தாமன்சகா தேவனுக்குச் சத்திசூலங் கொடுத்து நகுலனுக்கு ஆயுதமும் நல்லபரி கொடுத்துப் புகலான தர்மருக்குப் பொறுமை அரிகொடுத்து மங்கை துரோபதைக்கு வாய்த்தக் கனல்கொடுத்துச் . விளக்கம் ========= துரியோதனன் பாண்டவர்களுக்கு ஏற்படுத்திய கொடுமைகளையெல்லாம் அகற்றி அருள்பாலித்த கிருஷ்ண பரமாத்மா, பாண்டவர்களின் பன்னிரண்டு ஆண்டு வனவாச காலம் நிறைவேறியதும், பஞ்சபாண்டவர்களின் நாட்டைக் கொடுக்கும்படி துரியோதனனிடம் தூது சென்றார். . கெட்ட எண்ணங்களின் மொத்த உருவமான துரியோதனனோ வந்திருப்பவர் வல்லமை மிக்க கிருஷ்ணன் என்று எள்முனையளவு கூட எண்ணிப்பார்க்கவில்லை. தாழ்வுற்றுப் போகும் காலம் துரியோதனனின் தலைவிதியாய்ப் பிதற்றியது. அவனுடைய கொடிய நாக்குகள் கோபக் கனலைக் கக்கியது. . முடிவை நோக்கிப் பயணிப்பவன் முட்டாள்த்தனமாகத் தான் உளறுவான் என்பதை உணர்ந்த கிருஷ்ண பரமாத்மாவோ, துரியோதனா, பாண்டவர்களுக்கு நீ கொடுத்த கெடு முடிந்து விட்டது. எனவே, அவர்களின் நாட்டைக் கொடு என்றார். மறுத்தான் துரியோதனன். மாயனோ அவர்கள் வாழ்வதற்கு ஐந்து ஊர் கொடுக்க முடியுமா என்றார். துரியோதனன் முடியாது என்றான். சரி ஐந்து வீடாவது கொடுப்பாயா? என்றார் கிருஷ்ணபரமாத்மா. அதுவும் முடியாது என்றான் துரியோதனன். . அவர்கள் ஐவரும் தங்குவதற்கு ஒரே ஒரு வீடாவது கொடு என்றார். கிருஷ்ணபரமாத்மா. துரியோதனனோ, கிருஷ்ணா, பஞ்சபாண்டவர்களுக்கு ஊசிமுனை இடங்கூட தரமாட்டேன் என்று தூது வந்த துவாரகை நாதனைத் தாறுமாறாகப் பேசி அனுப்பிவிட்டான். . துரியோதனனின் துர்புத்தியையும், துரோகச் செயலையும் முடிவுக்குக் கொண்டுவருவதெனத் தீர்மானித்த கிருஷ்ண பரமாத்மா, கர்ணன், விதுரன், பீஷ்மர் துரோணாச்சாரியார் ஆகியோரின் வல்லமைகளையெல்லாம் சூசகமாகக் கவர்ந்தார். அதனால் துரியோதனன் வலுவிழந்தான். . அர்ஜுனனுக்கு அதிசக்தி வாய்ந்த அஸ்திரங்களை அருளினார். வீமனுக்கோ அவனுடைய தண்டாயுதத்திற்கென தனிவேகம் தந்தார். சகாதேவனுக்குச் சக்திமிக்க சூலத்தைக் கொடுத்தார். நகுலனுக்கு பற்பல ஆயுதக் குவியல்களையும், குதிரை முதலான படைக்கலங்களையும் அருளினார். தருமருக்கோ எவ்வகை நிலைப்பாடுகளையும் சமமாகப் பாவிக்கத்தக்க #பொறுமையைச் சற்று அதிகமாகவே கொடுத்தார். துரௌபதிக்கு எதிரிகளைச் சுட்டெரித்தொழிக்கும் கற்புக் கனலை கவசமெனக் கொடுத்து அருள்பாலித்தார். . . தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚
அய்யா வைகுண்டர் - ShareChat

More like this