பில்கிஸ் பானுவுக்கும் உஷாராணிக்கும்
கரூர் நெரிசல் மரணத்திற்கும் என்ன தொடர்பு?
கரூர் நெரிசல் மரணத்தின் விசாரணையில் குஜராத்திற்கும் மதுரைக்கும் பங்கு இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? பில்கிஸ் பானுவும் உஷாராணியும் ஏன் கரூர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? பில்கிஸ் பானுவும் உஷாராணியும் யார்? கரூர் வழக்கை விசாரித்த அஸ்ரா கார்க்குக்கும் சிபிஐ விசாரணையைக் கண்காணிக்கும் அஜய் ரஸ்தோகிக்கும் என்ன தொடர்பு?
முதலில் நாம் குஜராத்திற்குப் போவோம்.
2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து, குஜராத்தில் மிகப் பெரியளவில் வன்முறை, கலவரம் ஏற்பட்டது. இந்துத்துவ அமைப்பினர் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொடூரத் தாக்குதல்களை நடத்தினர். பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தில் இருந்த 3 வயதுக் குழந்தை உட்பட 14 பேர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். 3 மணி நேரம் மயங்கிக்கிடந்த பில்கிஸ் பானு ஆதிவாசிப் பெண்களிடம் ஆடை வாங்கி அணிந்து கொண்டு போலீஸில் புகார் கொடுத்தார்.
வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. ஆனாலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடவடிக்கைகள் அமைந்தன. சாட்சியங்களை அழித்ததாகச் சொல்லி வழக்கை மகாராஷ்டிராவுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம். குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் 2008-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை 2018-ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் உறுதியும் செய்தது.
குற்றவாளிகள் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்ததாலும் நன்னடத்தையைக் காரணம் காட்டியும் குஜராத் அரசு அவர்களை 2022 ஆகஸ்ட்டில் சிறையிலிருந்து விடுவித்தது. குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட போது, அவர்களை ஆரத்தி எடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா, 15 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளதால், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் குஜராத் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் 2022-ஆம் ஆண்டு மனு செய்தார். அதனை விசாரித்த நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் விக்ரம் நாத் அமர்வு, ’குஜராத்தில் குற்றம் நடந்துள்ளதால் தண்டனையைக் குறைப்பது அல்லது முன்கூட்டியே விடுதலை செய்வது என்பது குஜராத் அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதுபற்றி குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்து இவர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்கலாம். 11 பேரை விடுவிக்கக் குஜராத் அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பிறகுதான் பில்கிஸ் பானு வழக்கிலிருந்து குற்றவாளிகள் தண்டனைக் காலம் முடியும் முன்பே நன்னடத்தையைக் காரணம் காட்டி விடுவிக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் கொண்ட அமர்வு, குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை 2024 ஜனவரியில் ரத்து செய்தது. அப்போது உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகள் முக்கியமானவை.
’பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக் குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு விசாரணை மகாராஷ்டிராவில்தான் நடைபெற்று குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனால், 11 பேரை விடுவிப்பது குறித்த முடிவை வழக்கு விசாரணை நடந்த மகாராஷ்டிர அரசே எடுக்க முடியும்’ என உச்ச நீதிமன்றம் சொன்னது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலையாக முறையீடு செய்யலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி அமர்வு 2022 மே 13-ம் தேதி சொன்னது. இந்தத் தீர்ப்பை வைத்தே குற்றவாளிகள் முறையீடு செய்தனர். இதுபற்றியும் உச்ச நீதிமன்றம் கருத்துகளைச் சொன்னது. ’2022-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு என்பது உண்மைகளை மறைத்து, தவறான கருத்துகளை உருவாக்கி குஜராத் அரசு குற்றவாளிகள் விடுதலையைப் பரிசீலிக்கும் உத்தரவு பெறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விடுதலை குறித்து குஜராத் பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது ஒரு மோசடி செயல்’ என்று நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் தெரிவித்தனர்.
அடுத்து நாம் மதுரைக்குப் போவோம்!
காவல்துறை வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு புரட்சி மதுரையில் நடந்தது. மதுரையை அடுத்துள்ள திருப்பாலையில் 2012 பிப்ரவரி 9-ஆம் தேதி மாலை ஒரு கொலை நடக்கிறது. கணவர் வீரணனை கொலை செய்கிறார் மனைவி உஷாராணி.
நான்கு பிள்ளைகள் பிறந்த பிறகும்கூட, குடித்துவிட்டு வருவதும், கொடுமைப்படுத்தி அடிப்பதையும் வீரணன் நிறுத்தவே இல்லை. ஒரு சமயம் உஷாராணியைக் கட்டிப்போட்டு, அரிவாளால் காலை வெட்டி, துடிப்பதைப் பார்த்து இன்பம் காணும் வக்கிர மன நிலைக்குப் போனார். பொறுக்க முடியாத உஷாராணி காவல் நிலையத்துக்குப் போனார். வீரணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் மகளிடமே தகாத முறையில் வீரணன் நடந்து கொள்ள, தடுக்க முயன்றார் மனைவி உஷாராணி. கடும் சண்டைக்கு பிறகு மகளைப் பாதுகாக்கக் கணவர் வீரணனை உஷாராணி கிரிக்கெட் பேட்டால் தாக்கினார். சம்பவ இடத்திலேயே வீரணன் இறந்தார்.
’வீரணன் மரணத்தில் மர்மம் இருக்கிறது. உஷாராணிக்கு வேறு ஒருவர் கொலை செய்ய உதவியிருக்கிறார்’ எனச் சொல்லி வீரணன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். விவகாரம், பூதாகரமானது.
அப்போது மதுரை மாவட்ட எஸ்.பி-யாக இருந்தவர் அஸ்ரா கார்க். அவர் நேரடியாக விசாரணையில் இறங்கினார். கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், உஷாராணி கைது செய்யப்பட்டார். மறுநாள் உஷாராணியிடமும் கொலை நடந்தபோது வீட்டில் இருந்த அவரது இரண்டாவது மகள் கோகிலப்பிரியாவையும் தனியாக அழைத்து விசாரணை நடத்தினார்.
''வழக்கம் போல குடிபோதையில் தகராறு செஞ்ச மனுஷன், திடீர்னு வெறிபிடிச்ச மிருகமா மாறிட்டார். எதிர்ல நிக்கிறது தான் பெத்த மகள்னுகூட பாக்காம அவளைப் பலாத்காரம் பண்ண ஆரம்பிச்சிட்டார். எம் புள்ளயும் நானும் கையில கால்ல விழுந்து எம்புட்டோ கெஞ்சிப் பார்த்தோம்; கேக்கல. இதுக்கு மேலயும் தாமதிச்சா, புள்ளய நாசம் பண்ணினாலும் பண்ணிருவான்னு தோணுச்சு. பக்கத்துல கெடந்த கிரிக்கெட் மட்டையால மண்டையில ஓங்கி அடிச்சுட்டேன். அந்தாளு செத்துப்போகணும்னு நெனச்சு நான் அடிக்கலை. ஆனா, அந்த நேரத்துல அதைத்தவிர எனக்கு வேற வழி தெரியலை சார்'' என்று எஸ்.பி-யிடம் கதறி இருக்கிறார் உஷாராணி. கோகிலப் பிரியாவும் தன் தகப்பனின் அரக்கத்தனத்தை திக்கித்திக்கி விவரித்து இருக்கிறார். இருவரின் வாக்குமூலங்களிலும் கண்ணீரிலும் உண்மை இருந்தது.
உஷாராணி அளித்த வாக்குமூலத்தை உறுதி செய்யும் வகையில் அவருடைய மகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பெண்ணின் மீது கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அதனை அவரது தந்தை வீரணன்தான் ஏற்படுத்தினார் எனத் தெரியவந்தது. உஷாராணியை வீரணன் பல வருடங்களாகக் கொடுமைப்படுத்தியதற்குச் சாட்சியங்கள் காவல்துறையிடமே இருந்தது. இதன்பிறகுதான் அஸ்ரா கார்க், அந்த முடிவை எடுத்தார். ’’உஷாராணி மேல எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம்; வீட்டுக்கு அனுப்பிடுங்க'' என்று தடாலடியாய் சொன்னார்.
வழக்கமாக இது போன்ற வழக்குகளில் கொலைக் குற்றவாளி என்ற முறையில், கொலையாளி கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்தியத் தண்டனை சட்டம் 100, 120 பிரிவுகளின் படி, பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளக் கொலை செய்தால், அது கொலையாகாது. அந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி கொலை வழக்கிலிருந்து உஷாராணியை விடுவித்தார் அஸ்ரா கார்க். ‛‛பெண்களின் தற்காப்புக்காக அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமை இது. குற்றத்திற்கான முகாந்தரம் உறுதியாகத் தெரிந்ததால், இந்த முடிவுக்கு வந்தோம். சட்டத்தின் படிதான் அவர் விடுதலை செய்யப்பட்டார்’’ என்று அன்றைக்குச் சொன்னார் அஸ்ரா கார்க். அதன்பிறகுதான் இப்படி ஒரு சட்டம் இருப்பதும், போலீஸாரே கொலையாளியை விடுவிக்கலாம் என்பது தெரியவந்தது.
’மகளைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற கணவனைக் கொலை செய்தாலும் குற்றம் இல்லை’ என சொன்ன அஸ்ரா கார்க்கும், பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகளை முன்விடுதலை செய்ய முறையிடலாம் எனச் சொன்ன அஜய் ரஸ்தோகியும் கரூர் என்ற ஒரு புள்ளியில் இணைந்தார்கள்.
தவெக தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பரப்புரை செய்தபோது, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு முதலில் விசாரித்தது. அந்த விசாரணைக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் அஸ்ரா கார்க். அவரும் விசாரணையைத் தொடங்கிய நிலையில் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அஸ்ரா கார்க் சிறப்பு விசாரணைக் குழு கலைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழுவை அமைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்தக் குழுவில் இவருடன் இரண்டு அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். அவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் குழுவை வழிநடத்தப் போகும் நீதிபதி அஜய் ரஸ்தோகி யார்? என்பதை பில்கிஸ் பானு வழக்கில் பார்த்தோம். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 67 வயதாகும் இவர், 1982-ம் ஆண்டு வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். 2018-ல் திரிபுரா மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்ந்தார். அதே ஆண்டு நவம்பரில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நான்கரை ஆண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்தவர், 506 அமர்வுகளில் கலந்துகொண்டு 158 தீர்ப்புகளை எழுதியிருக்கிறார். தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் அஜய் ரஸ்தோகியும் ஒருவர்.
கலைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக இருந்த அஸ்ரா கார்க் யார் என்பதை உஷாராணி வழக்கில் தெரிந்து கொண்டோம். நெல்லை மாவட்ட எஸ்.பி-யாக இரண்டு வருடங்கள் பணியாற்றி, 2010-ல் மதுரை மாவட்ட எஸ்.பி-யாகப் பொறுப்பேற்றார். இடையில் சி.பி.ஐ பணிக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஐ.ஜி-யாகப் பதவி உயர்வுபெற்று தமிழகப் பணிக்கு வந்தார்.
பில்கிஸ் பானுவுக்கும் உஷாராணிக்கும் நடந்த விஷயங்களைப் பார்த்தோம். அஜய் ரஸ்தோகியும் அஸ்ரா கார்க்கின் கதைகளையும் கேட்டோம். இந்த இரண்டும் கரூர் நெரிசல் மரணங்கள் விவகாரத்தின் ஒன்றிணைந்தன.
வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும் விஜய்யும் அவரது ரசிகர்களும் ’நீதி வெல்லும்’ என்று கோரஸ் பாடினார்கள்.
கடந்த ஜனவரியில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தவில்லை? கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவ நீதி விசாரணைக்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஹர்ஷ்குமார் தலைமையில் விசாரணை கமிஷனை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார். ஆனால், கரூருக்கு அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தைகூட உச்ச நீதிமன்றம் கலைத்துவிட்டது.
2024 ஜூலையில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்வின் போது நெரிசலில் சிக்கி உத்தரப்பிரதேசத்தில் 116 பேர் உயிரிழந்தார்கள். இதற்கும் சிபிஐ விசாரணை நடைபெறவில்லை.
நீதி வெல்லும் என்கிறார் விஜய். நீதி வெல்லுமா?
- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி #🙋♂️தமிழக வெற்றி கழகம் #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல்
