#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 21.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
--------------
பாவித்து நித்தம் பரமவை குண்டரையும்
சேவித்துப் போற்றி தினமேவல் செய்திடவே
கன்னியர்க ளோடும் காதலாய்த் தானீன்ற
மன்னதிச் சான்றோர் மக்கள் மனைவியோடும்
ஆதி வைகுண்ட ஆனந்த நாரணரும்
நிதியாய்த் தர்மம் நேரோர் மணிதூக்கிச்
சிங்கா சனத்தில் சிவசூர்ய குடைக்குள்
கங்கா தரனார் கற்பினையை யுள்ளிருத்தி
ஆண்ட பரனும் ஆதி முறைப்படியே
சான்றோர்கள் போற்ற தர்மபதி யாண்டிருந்தார்
.
விளக்கம்
----------------
பரம்பொருளான வைகுண்டமாமணிக்கு நித்தம் சிறப்பான பணிவிடைகள் செய்து அவரைப் போற்றி வந்தனர். வைகுண்டர் தம்மோடு இருக்கின்ற கன்னிகளோடும் அன்புடன் தாம் பெற்றெடுத்த உயர்வான அரசர்களாகிய சான்றோர் மக்களுடனும், மனைவி இலட்சுமியுடனும் அங்கே காட்சி அளித்தார். ஆதி வைகுண்டராகிய ஆனந்த நாராயணர், நீதி தருமத்தைப் போற்றி, நேர் எதிராக ஒரு நீதி மணியை தொங்க விட்டு சிங்காசனத்தில் சிவசூரிய குடைக்குக் கீழ் சிவனாகிய நாராயணரின் எண்ணத்தை மனதில் கொண்டு முந்தைய ஆட்சி முறைப்படியே சான்றோர்கள் போற்றி நிற்க, தருமபதியை ஆண்டு வந்தார்.
.
.
அகிலம்
-------------
ஆண்டிருந் தரசு செய்ய அணிவரை போலே நீதம்
பூண்டிருந் தினிது வாழ பூதல மனுவோர் வாழ
கூண்டிருந் தருளாய்ச் செல்வம் குணமுடன் மகிழ்ச்சை கூர்ந்து
வேண்டிருஞ் செல்வ மோங்க வேற்றுமை யில்லா வாழ்ந்தார்
.
விளக்கம்
----------------
இவ்வாறு தருமபூமியை வைகுண்ட மாமணி அரசாளவும், ஒழுங்காக அணி வகுத்து நிற்கும் மலைகளைப் போன்று தருமநீதம், தெய்வநீதம், மனுநீதம் ஆகிய மூன்று நீதங்களும் இனிதாக சேர்ந்து வாழ்ந்து வரவும், இப்பூமியிலுள்ள மக்கள் எல்லாரும் இனிதாக வாழவும், மக்கள் கூடி இருந்து இறை அருளாகிய செல்வத்தை மன நிறைவோடு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளவும், தேவையான செல்வங்கள் எல்லாம் சிறந்து ஓங்கும்படியாகவும் எல்லாம் பெற்று எல்லாரும் எந்தவித வேற்றுமையுமின்றி அங்கே வாழ்ந்தனர்.
.
.
அகிலம்
-------------
தருமமாய்ப் புவியி லுள்ள சனங்களும் பலது செந்தும்
பொறுமையாய் வாழும் போது புரந்தர வானோர் விண்ணோர்
நன்மையா யவருங் கூட நாடொன்றாய் மேவி வாழ
வன்மமே யில்லா வண்ணம் வைந்தரும் புவியை யாண்டார்
.
விளக்கம்
-----------------
இப்படியாகத் தரும சிந்தனையோடு பூமியில் உள்ள மக்களும் பல சீவ செந்துக்களும் பொறுமைக் குணத்தை உடையவராகி வாழ்ந்து வருகின்ற பொழுது இந்திரனும், வானோரும் மிகுந்த நன்மைகளை அவர்களுக்குச் செய்து எல்லாரும் ஒரு நாட்டு மக்களாகி அங்கே வாழ்ந்தனர். எந்தவிதத் துன்பமும் இல்லாதவாறு வைகுண்டமாமணி தருமபூமியை ஆண்டு வந்தார்.
.
.
அகிலம்
-------------
ஆண்டனர் புவிதிரி மூன்றினு மோரினம்
கூண்டநற் குலமெனக் குலாவி வைந்தரும்
தாண்டிய வோர்குடைத் தாங்கு குவலயம்
மூன்றினு மோர்மொழி முகுந்தன் வாழ்ந்தனர்
.
விளக்கம்
----------------
பூலோகம், பரலோகம், பாதாளலோகம் ஆகிய மூவுலகங்களிலும் திரிகின்ற உயிரினங்கள் எல்லாம் ஒரே இனம் போன்று வாழ்ந்து வர அவர்களுடன் சேர்ந்து வைகுண்டமாமணியும் கூடிக் குலாவி ஆட்சி புரிந்து வந்தார். எல்லாவற்றையும் கடந்த பொருளான முகுந்தனான வைகுண்ட மாமணி தாம் தாங்குகின்ற மூன்று உலக மக்களையும் தமது ஒரே ஆட்சியின் கீழ் ஒரே சொல்லின் கீழ் அடக்கி ஆட்சி புரிந்து வாழ்ந்து வந்தார்.
.
.
அகிலம்
-------------
பருதியு மதியெனப் பவந்து சேவனர்
கருதியு முகமனும் கமழ்ந்து கைமலர்
அருதியு மலர்மகள் அணிந்து பூவினர்
கருதியு முறைவழி தூக்கி வாழ்ந்தனர்
.
விளக்கம்
----------------
சூரியனும், சந்திரனும் எல்லா இடங்களும் நிறைந்து ஒளிமயமாகச் செய்தன. பணிவிடைக்கார்கள் அருகிலிருந்து மதிப்பும், மரியாதையும் செய்து வாழ்த்துக்கள் கூறி நின்றனர். மணம் வீசும் மலர்களைக் கையில் எடுத்து மலர் மகளிரான இலட்சுமியும், சரசுவதியும் தூவினர். பூவுலகச் சான்றோர் மக்கள் வேத முறை தவறாவண்ணம் அவரைப் புகழ்ந்து பாடினர். இவ்வாறாக எல்லாரும் இன்பமுடன் வாழ்ந்து வந்தனர்.
.
.
அகிலம்
--------------
பொன்முக வருளது பொதுமி யாவியே
அன்முக மதிலு மமர்ந்து புகுந்திரு
இன்முக மதிலு மிருந்து லாவியே
பொன்முக வைந்தர் புயத்தில் வாழ்ந்தனர்
.
விளக்கம்
----------------
பொன் போன்ற அழகு முக வைகுண்டமாமணி மகிழ்ச்சியினால் அழுது சான்றோர்களை அணைத்து, துன்பத்தினால் முகம் சோர்ந்து இருப்பவரின் உள்ளத்திலும் இன்பத்தினால் முகம் மலர்ச்சியுடன் இருப்பவரின் உள்ளத்திலும் புகுந்து உலாவியபடி இருந்த அவரது பக்கத்தில் சான்றோர்கள் வாழ்ந்தனர்.
.
.
அகிலம்
--------------
முதமுக வானவர் மூன்றென வொன்றினர்
சதயித காலெனச் சமைந்து வாழ்ந்தனர்
உதவென மனமு முவந்து லாவியே
நிதம்நினை வளர்வறா நிரந்து வாழ்ந்தனர்
.
விளக்கம்
-----------------
மகிழ்வுடன் வானவர்கள் வைகுண்டமாமணியை முப்பொருளானவன் என்று மனம் ஒன்றித்துத் துதித்தனர். நூற்றுக்கணக்கான வழிகளும் ஒன்றாய் அமைத்தவர் இவ்வைகுண்டர் என அவர்கள் உணர்ந்து இன்பமுடன் வாழ்ந்தனர். அதற்காக ஒருவருக்கு ஒருவர் துணை என எல்லாரும் சேர்ந்து மகிழ்ந்து உலாவி தினந்தோறும் வளரும் இறைவன் நினைவு மாறாதவண்ணம் வாழ்ந்தனர்.
.
.
தொடரும்.... அய்யா உண்டு.
