கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 23.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
--------------
போற்றுமட மயிலான சீதைப் பெண்ணின்
பொன்முகம்பார்த் தருள்புரிந்து புகல்வா ராயன்
சாற்றுமெனக் கெதிரிவந்த வாறே தென்று
தானுரைத்தாய் நீயறியத் தண்மை யாகக்
கீர்த்தியுட னானுரைத்தேன் காண்ட மாகக்
கிளிமொழியே யினியெனக்குக் கீழு மேலும்
வேற்றுமொரு எதிரியுண்டோ வென்று கேட்ட
மெல்லியிள மயிலனைய மாதே கேண்மோ
.
விளக்கம்
----------------
இனியும் உமக்கு யாராவது எதிரிகள் உள்ளனரா? என்பது பற்றி என் பெரிய குருவே சொல்லுவீராக என்று கேட்டு தம்மை வணங்கிய மயிலைப் போன்ற இலட்சுமியின் அழகு முகத்தைச் சுவாமி பார்த்து நீ முதலில் எனக்கு எதிரிகள் வந்த வழிகள் எப்படி? என்று தான் கேட்டாய். அதற்கு ஏற்ப நீ அறியும்படியாக அன்புடன் உயர்வுடனும் உனக்கு ஒரு பெரிய நூலாக விளக்கிக் கூறினேன். கிளிமொழியே, இனி எனக்குக் கீழ் உலகங்களிலும் மேல் உலகங்களிலும் என் கருத்துக்கு வேற்றுமையுள்ள எதிரி யாராவது உள்ளனரா? என்று இப்பொழுது கேட்கிறாய். மென்மையான இளம் மயிலைப் போன்ற பெண்ணே, அதற்கும் விடை கூறுகின்றேன். கேட்பாயாக என்றார்
.
அகிலம்
-------------
மாதேநீ கேளுயீ ரேளு பூமி
மண்ணிலுவ ராழிவளர் வரைசூ ழீதுள்
சீதேநீ வரையெனதுள் ளறியா மாயச்
செகவீர சாலமத னேக முண்டு
பூதேயென வெகுண்டுவர முகங்கள் தோறும்
பிறக்கவே நான்கேட்கப் புரிந்தா ரீசர்
வாதேயென் பகைஞ்ஞர்வழிக் குலங்கள் மாய்த்து
மறுமஞ்ஞ ரெதிரியில்லா வண்ணம் வாழ்வோம்
.
விளக்கம்
-----------------
இலட்சுமியே, கேட்பாயாக, கடலும், வளர்ந்த மலையும் சூழ்ந்த பதினான்கு உலகங்களில் உள்ள மக்களும், நீயும் என் உள்மனதின் மாய சக்தியினை அறியமாட்டீர்கள். மிக உயர்வான வீர மாயசாலம் அநேகம் உள்ளன. பூதத்தைப் போன்று மிகக் கோபம் கொண்ட அரக்கர்கள் தோன்றத் தோன்ற நானும் நல்லவனாகப் பிறந்துபிறந்து அவர்களை அழிக்க ஈசரிடம் வரம் கேட்டுத் தந்தருளப் பெற்றேன். என்னை எதிர்க்கின்ற பகைவர் வழிக்குலங்களை எல்லாம் அழித்துவிட்டால் இனி மறுபடியும் தொடர்ந்து உருவாகும் மேகத்தைப் போன்ற வலிமை மிக்க எதிரிகள் யாரும் இல்லாதவண்ணம் வாழ்வோம்.
.
.
அகிலம்
இனிமேலு மெனக்கெதிரி யில்லை மானே
எமதுமக்க ளொடுங்கூடி யிருந்து வாழ்வோம்
மனுவோரு முனிவோரும் வான லோக
மாலோரு மென்வாக்கு வழியே வாழ்வார்
இனிமேலும் பயமேதோ எமக்கு மாதே
இலங்குபதி மீதினுனை யிடமே வைத்து
பனிமாறு காலம்வரை யரசே யாள்வோம்
பதறமனம் வேண்டாமெனப் பகர்ந்தார் மாயன்
.
விளக்கம்
----------------
பெண்ணே இனிமேல் எனக்கு எதிரிகள் இல்லாத்தால் நம்முடைய குழந்தைகளோடு கூடிஇருந்து வாழ்ந்து வருவோம். மனிதர்களும், முனிவர்களும், வானவர்களும், வைகுண்ட லோகத்தோரும் எனது சொல்லின்படியே இனி வாழ்ந்து வருவர். இனி நமக்கு வேறு எந்தப் பயமும் இல்லை பெண்ணே. பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற தர்மபதியில் என்னை என்னுடைய இடதுபுறம் இருத்தி மனதுக்குக் குளுமை கொடுக்கும் தர்மயுகம் மாறும்வரை அரசு செய்து வருவோம். எனவே நீ மனம் பதற வேண்டாம் என்று திருமால் உரைத்தார்.
.
.
அகிலம்
-------------
மாயனுரை மனமதிலே மாது கேட்டு
மகிழ்ந்துமுக மலர்ந்துவாய் புதைத்துச் சொல்வாள்
தீயனெனனு மாகொடிய அரக்கர் சேர்க்கைத்
திரையறுக்க நீர்துணிந்து சென்ற நாளே
நாயநெறி காணாத அடிமை போல
நடுங்கிமன திடைந்துவெகு நாளே தேடி
ஆயருமை நாயடியா ளின்று கண்டேன்
அகமகிழ்ந்தே னெனதுதுய ரிழந்திட் டேனே
.
விளக்கம்
----------------
இலட்சுமிதேவி சந்தேகம் தெளிதல்
---------------------------------------------------------------
இப்படியாக மாயன் உரைத்ததைக் கேட்டு இலட்சுமிதேவி மனதில் தெளிவடைந்து மகிழ்ந்து முகம் மலர்ந்து மறுமொழி பேசாவண்ணம் அமைதியாய் நின்று மீண்டும் திருமாலிடம் பேசலானாள். சுவாமி தீயவன் என்று கூறக் கூடிய கொடிய அரக்கர்களுடைய தோற்றங்களை முழுவதுமாக அறுத்து எறிவதற்காக நீர் மனம் துணிந்து சென்ற நாள் முதலாக நான் நியாய நெறிகளை அறியாத அடிமையைப் போன்று மனம் டுங்கி கலங்கி எல்லாரையும் வழி நடத்தும் ஆயனாகிய உம்மை வெகு நாள்களாகத் தேடினேன். இவ்வாறு தேடி அடியாளாகிய நான் காவலிருந்து இன்று உம்மைக் கண்டு கொண்டேன் என் மனம் மகிழ்ந்தேன். என்னுடைய துன்பம் எல்லாம் நீங்கி மகிழ்வடைந்து விட்டேன் என்றாள்.
.
.
தொடரும்.... அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar
