ஒரு ஆணுக்குப் பெண்ணால் எதையெல்லாம் கொடுக்க முடியும்?
ஒரு ஆணுக்குப் பெண்ணால் எதையெல்லாம் கொடுக்க முடியும்?
இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி என்றால் அது மிகையில்லை.
ஏனெனில், இந்தக் கேள்வியின் விடை எண்களில் அளவிட முடியாதது.
வரலாற்றில் பெண்கள் ஆண்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்திருக்கிறார்கள்.
கிளியோபாட்ரா ஜூலியஸ் சீசருக்கு எதை அளித்தாள்? அது ஒரு பேரரசின் வரைபடத்தை மாற்றிய ஒரு கவர்ச்சி, ஒரு புத்தி, ஒரு நம்பிக்கை.
குந்தவை, ராஜராஜ சோழனுக்குக் கொடுத்தது வெறும் அன்போ அல்லது உறவோ அல்ல - ஆளுமை, அறிவு, அரசியல் நுணுக்கம் ஆகியவை அதில் அடங்கும்.
மராட்டிய மாமன்னன் சிவாஜிக்கு அவரது தாயார் ஜீஜாபாய் கொடுத்தது வீரத்தை விட உயர்ந்த ஒன்று — ஆண்மையின் அர்த்தத்தை கற்றுத் தந்த தாய்ப்பாசத்தின் சக்தி.
ஔவையார் கூறிய "இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்" என்ற வாக்கு ஈகையின் மாண்பை உயர்வு நவிற்சியாக சொல்வதாக இருந்தாலும், அந்த ஈகையின் வடிவம் பெண்மையில் முழுமையாக பிரதிபலிக்கிறது.
பெண் தன்னால் மட்டுமல்ல, தன்னுள் இருந்து பிறக்கும் உயிராலும் உலகை வளப்படுத்துகிறாள்.
அவள் ஈகை அளவற்றது — அன்பில், பரிவில், அறிவில், பொறுமையில், வலிமையில்.
“சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை” என்பது வெறும் தத்துவம் இல்லை. அதில் ஆழமான உண்மை ஒன்று உண்டு — பெண் இல்லையேல் பிறப்பும் இல்லை, வளர்ச்சியும் இல்லை.
மூலப் பொருட்கள் இருப்பது ஒரு பக்கம்; ஆனால் உற்பத்தி கேந்திரங்கள் இல்லாமல் மூலப்பொருட்களால் என்ன நன்மை? மூலப்பொருட்களுக்கு உலகில் பஞ்சமில்லை. ஆனால், உற்பத்தி மையங்கள் சில இடங்களில்தான் உயிர்ப்புடன் இருக்கின்றன.
அந்த உயிர் மையம்தான் பெண்.
பெண்மையின் பங்கு உற்பத்திக்கு மட்டுமல்ல; வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும், நாகரிகத்தின் தொடர்ச்சிக்கும் அவளே அடித்தளம்.
அவள் தாயாக, தங்கையாக, மனைவியாக, மகளாக, ஆசானாக, தோழியாக — ஒவ்வொரு நிலைகளிலும் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறாள்.
தாய் உயிர் கொடுப்பாள்; மனைவி உற்சாகம் கொடுப்பாள்; மகள் மகிழ்ச்சி கொடுப்பாள்; ஆசிரியை அறிவு கொடுப்பாள்; தோழி ஆறுதல் கொடுப்பாள்.
பெண்மையின் எந்த ஒரு வடிவம் ஒளியிழந்தாலும் உலகம் இருண்டுவிடும். “தாய்நாடு”, “தாய்மொழி”, “தாய்ப்பாசம்” — இவையெல்லாம் பெண்மையின் வலிமையிலிருந்து பிறந்த சொற்கள்.
ஒரு நாட்டில் பெண்மையை மதிக்கவில்லை என்றால் அந்த நாட்டில் அமைதி நிலை நிற்பதில்லை. ஒரு வீட்டில் பெண்ணின் மதிப்பு குறைந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி குறையும்.
அதேபோல, ஒரு சமுதாயம் பெண்களைப் புறக்கணித்தால் அந்த சமுதாயம் பின் தங்கிவிடும்.
இன்று பல நாடுகள் பெண்ணுரிமையை மதித்து, சமுதாயத்தில் பெண்ஙளை முன்னிறுத்தி வருகின்றன.
அதன் விளைவாக உலகம் முழுவதும் புதிய ஆற்றல் வெளிப்படுகிறது.
பெண்கள் கல்வியிலும், அரசியலிலும், தொழில்துறையிலும், அறிவியலிலும் தங்களின் திறமையை நிரூபித்து வருகின்றனர். பெண்ணின் உயர்வு என்பது ஆணின் வீழ்ச்சி அல்ல — அது மனித குலத்தின் முழுமையான உயர்வாகும்.
ஆக, ஒரு ஆணுக்குப் பெண்ணால் எதையெல்லாம் கொடுக்க முடியும்?
அவள் அவனுக்கு உயிர் கொடுக்கிறாள், அர்த்தம் கொடுக்கிறாள், நேயம் கொடுக்கிறாள், ஒளி கொடுக்கிறாள்.
அவள் அவனுக்கு பின்னால் அல்ல, கீழாக அல்ல — சம அந்தஸ்துடன் இருப்பவள்.
அவளது ஈகை உலகை இயக்கும் சக்தி. அதை உணர்ந்தால்தான் மனிதன் உண்மையில் மனிதன் ஆகிறான்.
"களம் தேடும் கவிதைகள்"
https://www.amazon.in/dp/B0DZ9MSR9J
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
00:10
