கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 12.11.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
துவாபர யுகம் தொடர்ச்சி
===========================
அதுகேட்டு ஈசர் அச்சுதருக் கேதுரைப்பார்
இதுநானுங் கேட்டு இருக்குதுகா ணிம்முறையம்
ஆனதால் கஞ்சன் அவனைமுதல் கொல்வதற்கு
ஏனமது பாருமென்று எடுத்துரைத்தா ரீசுரரும்
பாருமென்று ஈசர் பச்சைமா லோடுரைக்க
ஆருமிக வொவ்வாத அச்சுதரு மேதுரைப்பார்
மேருதனில் முன்னாள் வியாசர் மொழிந்தபடி
பாருபா ரதமுதலாய்ப் பாரதப்போர் தான்வரையும்
நாரா யணராய் நாட்டில் மிகப்பிறந்து
வீரான பார்த்தன் மிகுதேரை ஓட்டுவித்துச்
சத்தபல முள்ள சராசந் தன்வரையும்
மற்றவ னோராறு வலியபலக் காரரையும்
கொல்லவகை கூறி குருநிலையைத் தான்பார்த்து
வெல்லப்பிறப் பாரெனவே வியாசர் மொழிந்தபடி
அல்லாமற் பின்னும் ஆனதெய்வ ரோகணியும்
நல்ல மகவான நாரா யணர்நமக்கு
மகவா யுதிப்பாரென மகாபரனார் சொன்னபடி
தவமா யிருந்து தவிக்கிறாள் தேவகியும்
இப்படியே யுள்ள எழுத்தின் படியாலே
அப்படியே யென்னை அனுப்புமென்றா ரம்மானை
.
விளக்கம்
=========
தேவர்களும், பூமாதேவியும் புலம்பித் தவிக்கிறார்கள். அவர்களுடைய அபயம் பொறுக்கமுடியாமல் தங்களைக் காண இங்கே விரைந்து வந்தேனென்று வேதமுதல்வனாகிய மகாவிஷ்ணு வெற்றிப் பெருமிதத்தோடு எடுத்துரைத்தைக் கேட்ட சிவபெருமான் மகாவிஷ்ணுவைப் பார்த்து, அச்சுததே ! அவர்களிடும் முறையத்தை நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆகவே, முதல்முதலாகக் கம்சனைக் கொல்லுவதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள் என்றார்.
.
அவ்வகையாக சிவபெருமான் சொன்னதும். எவர் ஒருவரோடும் ஒப்பிடுவதற்கரியோனாகி மகாவிஷ்ணு சிவபெருமானைப் பார்த்து, ஈஷ்வரரே, முன்பொருகால் கைலையங்கிரியில் நாமெல்லாம் இருக்கும்போது நம்மிடம் துவாபரயுகத்தைப் பற்றி வியாசர் உரைத்தபடி பாரத பூமியில் மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்து, மாவீரனாகிய தன்னை எதிர்த்தவன் பலத்தில் பாதியைக் கவர்ந்துகொள்ளும் வலிமையமுள்ள பகாசூரன், இடும்பாசூரன், மணிமாலன், கீஷகன், சராசந்தன், துரியோதனன், ஆகிய சந்தபலக்காரர்கள் ஆறு பேரையும் அவர்களைப் போன்று சத்த பலமுடைய வீமனின் கையால் கொல்வதற்கு வழிகூறும் குருவாக இருந்து துவாபரயுகத்தை வெல்ல மகாவிஷ்ணு பிறப்பார் என்று முக்கால நிகழ்வுகளையும் முறையே உணர்ந்து கூறுகின்ற வியாசமுனிவர் அன்று சொன்னபடி, நான் கிருஷ்ண அவதாரம் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது.
.
அதற்கு அணுகூலமாக, அன்றொருநாள் தெய்வகி, ரோகிணி, ஆகிய இருவரிடமும் தாங்கள் சொன்னீர்களே, மகாவிஷ்ணுவை நீங்கள் மகவாக நினைத்துப் பாலூட்டி மகிழ்ந்ததால், நீங்கள் பூலோகத்தில் பிறந்திருக்கும்போது, உங்களுக்கு மகனாக மகாவிஷ்ணு பிறப்பார் என்று அதையே நினைத்த வண்ணமாக அவ்விரு மாதர்களும் தாரணியில் தவமாய் இருந்து தவிக்கிறார்கள். ஆகவே, இவ்வகை விதிப் பயனால் அதன் படியே என்னைப் பூலோகத்திற்கு அனுப்புமென்று மகாவிஷ்ணு சிவபெருமானிடம் கூறினார்.
.
.
அகிலம்
========
விருத்தம்
==========
முன்னே வியாசர் மொழிந்தபடி முறைநூல் தவறிப் போகாமல்
தன்னை மதலை யெனஎடுக்கத் தவமா யிருந்த தெய்வகிக்குச்
சொன்ன மொழியுந் தவறாமல் துயர மறவே தேவருக்கும்
என்னைப் பிறவி செய்தனுப்பும் இறவா திருக்கும் பெம்மானே
.
விளக்கம்
==========
என்றென்றும் இருக்கின்ற முடிவில்லா முதற்பொருளே ! அன்று வியாசமுனிவர் சொன்னதுபோலான ஆகமக்கூற்றுப் பிரகாரம் என்னை மகனாகப் பெறுவதற்கு மாதவம் இருக்கும் தெய்வகிக்குத் தாங்கள் கொடுத்த வாக்கும் தவறாமல் தேவர்களெல்லாம் என்னுடைய அவதார வரவால் துயரம் தீர்த்து சுகம் பெறும் வகையில் என்னைப் பூலோகத்தில் பிறவிசெய்து அனுப்பும் பெம்மானே என்று சிவபெருமானிடம் மகாவிஷ்ணு எடுத்துக் கூறினார்.
.
.
அகிலம்
=======
முன்னே வியாசர் மொழிந்தமொழி மாறாமல்
என்னையந்தப் பூமியிலே இப்போ பிறவிசெய்யும்
செந்தமிழ்சேர் மாயன் சிவனாரை யும்பணிந்து
எந்தனக்கு ஏற்ற ஈரஞ்சாயிர மடவை
கன்னியரா யென்றனக்கு கவரியிட நீர்படையும்
பன்னீர்க் குணம்போல் பைம்பொன் னிறத்தவராய்
ஆயர் குலத்தில் அநேக மடவாரை
பாயமுற வாடிருக்கப் படைப்பீர்கா ணீசுரரே
உருப்பிணியாய் இலட்சுமியை உலகிற்பிறவி செய்யும்
கரும்பினிய தெய்வக் கயிலாச மாமணியே
சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும்
மெத்தவரம் பெற்ற மிகுவசுரர் தங்களையும்
எல்லோரையு மிப்பிறவி இதிலே வதைத்திடவே
அல்லோரை யும்பிறவி ஆக்கிவைய்யு மென்றுரைத்தார்
என்றனக்கு நல்ல ஏற்ற கிளைபோலே
விந்து வழிக்குலம்போல் மிகுவாய்ப் படையுமென்றார்
.
விளக்கம்
=========
அன்று வியாசர் சொன்ன உபாயப்படி என்னை பூலோகத்தில் பிறப்பிக்கும் நிலையில், ஆங்கே நான் நேசிக்கத்தக்க பத்தாயிரம் கன்னியர்களை எனக்குக் கவரி வீசும்படியாகப் படைத்து, அவர்களுக்கெல்லாம் பன்னீருக்கு ஒப்பான உயரிய குணத்தையும் கொடுத்து அனுப்பும்.
.
ஆயர் குலத்திலே பிறக்கும் அம்மங்கையர்கள், என்னுடைய உபாயங்களை உயர்ந்து உறவாடும்படியாகப் படையுங்கள் ஈஸ்வரரே. மகாலட்சுமியை ருக்குமணியாக உலகில் பிறவி செய்யுங்கள். காண்பதற்கு இனிய கற்கண்டு போன்று காட்சியளிக்கும் கைலாச மலையில் அமர்ந்திருக்கும் மாமணியாகிய மாணிக்கமே ! தத்துவத்திற்குள்ளான சத்த பலக்காரர்களையம், வரவரிமை பெற்ற அரக்கர்களையும் இந்த அவதாரத்திலேயே இல்லாதொழித்திடும்படியாக எல்லாரையும் பிறவி செய்யுங்கள். ஆனால், அவர்கள் எனக்கு அன்னியர் போலாகாமல் எல்லாரையும் என்னை உறவுமுறை கூறி உரிமையோடு அழைக்கும் விதமாக ஒரு விந்து வழிக் குலம்போல் ஒருவருக்கொருவரை உறவினராயப் படையுமென்று மகாவிஷ்ணு தன் விருப்பத்தைச் சிவபெருமானிடம் விண்ணப்பித்தார்.
.
.
அகிலம்
========
இப்படியே மாயன் இசையஅந்த ஈசுரரும்
அப்படியே பிறவி அமைக்கத் துணிந்தனராம்
துணிந்தாரே மாயன் தொகுத்ததெல்லா மாராய்ந்து
வணிந்தார மார்பன் வகைப்படியே செய்யலுற்றார்
.
விளக்கம்
=========
துவாவர யுகத்தில் தம்முடைய கிருஷ்ண அவதாரம் இன்னின்ன விதமாக அமைய வேண்டுமென்று மகாவிஷ்ணு கூறியதை மனமகிழ்ச்சியோடு உற்று நோக்கிய சிவபெருமான், மகாவிஷ்ணுவின் விருப்பத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாத வகையில் கிருஷ்ண அவதாரத்தைக் கீர்த்தியுடன் ஏற்படுத்த எண்ணமுற்றார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚

