ShareChat
click to see wallet page
*திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்* எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் இன்று (நவ,19) திருச்சியில் நடைபெற்றது. மாநில பொருளாளர் முஸ்தபா வரவேற்புரையாற்ற, மாநில செயலாளர் ஹமீத் ஃப்ரோஜ் நன்றியுரையாற்றினார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெகலான் பாகவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் அச.உமர் பாரூக், அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபூபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் நஸ்ருதீன், மாநிலச் செயலாளர்கள் ஷபீக் அஹம்மது, நஜ்மா பேகம், அப்துல்லா ஹஸ்ஸான், பாஸ்டர் மார்க் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் பணிகள், தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் எஸ்ஐஆர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்: 1.‘களத்தைத் தயார் செய்வோம்! 2026-இல் வெல்வோம்!’ என்ற முழக்கத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் தழுவிய அளவில் எஸ்டிபிஐ கட்சியின் பூத்-வாரியான கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. திட்டமிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம் முடிவடைந்துவிட்டது. இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் பொறுப்பாளர்கள்-முகவர்கள் மாநாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. நவம்பர்-டிசம்பர் இலக்குக் காலக்கெடுவிற்குள் அனைத்து மாவட்டங்களிலும் இம்மாநாடுகள் நிறைவுபெறும். இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் பூத் பொறுப்பாளர்கள் மற்றும் முகவர்கள் மாநாடும், திருவாரூரில் தஞ்சை மண்டல பூத் பொறுப்பாளர்கள் மாநாடும் நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் திராவிட முதன்மைக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக, அதிக எண்ணிக்கையிலான பூத் கமிட்டி பொறுப்பாளர்களையும் உறுப்பினர்களையும் கொண்ட கட்சியாக எஸ்டிபிஐ தன்னை வேகமாக உருவாக்கி வருகிறது. இந்த மாநாடுகள் அதற்கான தெளிவான சான்று. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இம்மாநாடுகள் மூலம் கட்சியின் அடிமட்ட அமைப்பு மேலும் வலுப்பெறும்; 2026-இல் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை பெறும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. இந்த மாபெரும் பணியை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி வரும் அனைத்து மண்டல் பொறுப்பாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் இந்த செயற்குழு பாராட்டுகளைத் தெரிவிக்கிறது. நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள ஒவ்வொரு தகுதிவாய்ந்த வாக்காளரும் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தத்தில் விடுபடாத வகையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இந்தப் பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டுமென மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. 2.தமிழகத்தில் சுமார் 6.5 கோடி வாக்காளர்களை மையப்படுத்தி இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் தொடர்ந்து குழப்பங்களும், குளறுபடிகளும் நீடித்து வருகின்றன. வாக்காளர்கள் ஒருபுறம் பரிதவிக்கும் நிலையில், பணிச்சுமை காரணமாக பூத் நிலை பணியாளர்களும் பாதிக்கப்பட்டு போராடும் நிலைக்கு சென்றுள்ளனர். வாக்காளர்களுக்கு விண்ணப்பங்கள் நிரப்புவதில் மாறுபட்ட, தவறான தகவல்கள் பூத் நிலை பணியாளர்களால் வழங்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். மிகமுக்கியமாக பெயர் மாற்றம் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்கிற வழிக்காட்டுதல் இல்லாததால் அவர்களும் குழப்பத்தில் உள்ளனர். மட்டுமின்றி, 2002-க்கு முன்பு பல தேர்தல்களில் வாக்களித்தவர்களின் பெயர்கள் 2002 இறுதிப் பட்டியலில் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக இப்போது ஆவணங்கள் கோருவது நியாயமற்றது. புலம்பெயர்வு, இடமாற்றம், விழிப்புணர்வின்மை போன்ற காரணங்களால் அன்றைய பட்டியலில் பெயர்கள் தவறியிருக்கலாம்; பின்னர் வந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் உள்ள பட்டியல்களில் அவர்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். அப்படியிருக்கையில், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஆவணங்கள் கேட்பது ஏற்புடையதல்ல. தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின்படி சில தொகுதிகளில் 2002 இறுதிப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்; அதே சமயம் வேறு சில தொகுதிகளில் 2005 இறுதிப் பட்டியலில் உள்ளவர்கள் தகுதியானவர்களாக ஏற்கப்படுகிறார்கள். 2002-ல் தகுதியாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் 2003, 2004-ல் சேர்க்கப்பட்டவர்கள் இப்போது தகுதியற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்றால், 2005-ல் சேர்க்கப்பட்டவர்கள் மட்டும் தகுதியானவர்களாக ஆவது வெளிப்படையான பாரபட்சமாகும். இது ஒரே மாநிலத்தில், ஒரே தேர்தல் ஆணையத்தின் கீழ் இரு வேறு நியமங்களைப் பின்பற்றும் பாரபட்சமாகும். மேலும், பீகாரில் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் அங்கு பெயர் இருப்பவர்கள் அதைக்காட்டி இங்கு வாக்காளர்களாக தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்பதும், போதிய கால அவகாசம் அளித்து செய்ய வேண்டிய பணியை அவசர அவசரமாக முடிக்க முனைப்புக் காட்டுவதும் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகவே தெரிகிறது. ஆகவே, அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் எதிரான இந்த நடைமுறையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. 3.தமிழ்நாட்டில் தெரு நாய்க்கடி தொல்லைகள், அதனால் ஏற்படும் ரேபிஸ் தொற்று மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது மிகுந்த கவலைகளை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் இந்தாண்டு மட்டும் நாய்க்கடியால் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஆகவே, இப்பிரச்சினைகளை எதிர்கொள்ள, தமிழக அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் தடுப்பூசி திட்டங்களை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ARV மற்றும் ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) கையிருப்பு எப்போதும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ரேபிஸ் தொற்று குறித்து பொதுமக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும். சாலை மற்றும் தெருக்களில் கொட்டப்படும் குப்பை மற்றும் உணவுக் கழிவுகளை முறையாக அகற்றுவதன் மூலம் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம், தமிழ்நாட்டில் தெரு நாய் தாக்குதல்கள் மற்றும் ரேபிஸ் மரணங்களை குறைத்து, மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. 4.தமிழ்நாட்டில் தற்போது டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட விசக்காய்ச்சல்கள் மிக வேகமாகப் பரவி வருகின்றன. வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட நீர்த்தேக்கம், சுகாதாரமற்ற சூழல், கொசுக்களின் இனப்பெருக்கம் ஆகியவை இப்பரவலுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. குறிப்பாகக் குழந்தைகளும் முதியோரும் இந்நோய்களால் பெரிதும் பாதிக்கப்படுவதால், பொது மக்களிடையே பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகவே, டெங்கு மற்றும் பிற விசக்காய்ச்சல்களின் பரவலை உடனடியாகக் கட்டுப்படுத்த தமிழக அரசு மிகத் தீவிரமான, உறுதியான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு முகாம்களை ஏற்படுத்துதல், உடனடி சோதனை மற்றும் சிகிச்சை வசதிகள் ஆகியவற்றை துரிதமாக செயல்படுத்தி இந்த அச்சுறுத்தலை முறியடிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. 5.தமிழ்நாடு குறுவைப் பருவத்தில் நெல் உற்பத்தி மற்றும் கொள்முதல் துறையில் சாதனை படைத்துள்ள நிலையில், காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையால் ஈரமான நெல் அதிக அளவில் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை தற்போதைய 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நியாயமான, விவசாயிகளுக்கு மிகவும் தேவையான கோரிக்கையை உடனடியாக ஏற்று, அதற்கான ஆணையை ஒன்றிய அரசு விரைந்து பிறப்பிக்க வேண்டுமென ஒன்றிய அரசை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. 6.கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக அரசு தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்த கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான அறிக்கையை, ஒன்றிய பாஜக அரசு கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது 2011-ஆம் ஆண்டு பழைய மக்கள் தொகை தரவின் அடிப்படையில் குறைந்த மக்கள் தொகை என்கிற காரணத்தைக் காட்டி நிராகரித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது வெறும் நிர்வாகத் தவறு அல்ல – தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான திட்டமிட்ட புறக்கணிப்பும், அரசியல் பழிவாங்கலும்தான் என எஸ்டிபிஐ கட்சி கருதுகிறது. குறைந்த மக்கள் தொகை கொண்ட ஆக்ரா, லக்னோ போன்ற நகரங்களுக்கு மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த அதே ஒன்றிய அரசு, கோவை, மதுரை போன்ற வேகமாக வளர்ந்து வரும் தொழில்-கல்வி மையங்களுக்கு மட்டும் தொடர்ந்து மறுப்பது தமிழகத்தின் மீதான வெளிப்படையான புறக்கணிப்பையே காட்டுகிறது. வேகமான நகரமயமாக்கல் மற்றும் வளர்ச்சியை அவதானிக்காமல், பழைய தரவுகளைப் பிடித்து, வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கும் இந்த அணுகுமுறை, தமிழகத்தின் உண்மையான தேவைகளைப் புறக்கணிக்கிறது. வளர்ந்து வரும் மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கு மெட்ரோ போக்குவரத்து என்பது ஆடம்பரம் அல்ல – அத்தியாவசியத் தேவையாகும். போக்குவரத்துத் திறன் தான் ஒரு நகரத்தின் வளர்ச்சியையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் தீர்மானிக்கும் முதன்மையான காரணி. ஆகவே தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையையும், மாநில அரசின் முயற்சியையும் மதித்து, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. 7.பாபரி மஸ்ஜித் இடிப்புத் தினமான டிசம்பர் 6 அன்று, தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. #📷வாட்ஸப் DP #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴
📷வாட்ஸப் DP - SDPIகட்சி ப SDPIகட்சி ப - ShareChat

More like this