கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.11.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
துவாபர யுகம் தொடர்ச்சி
===========================
போக்கு வரத்துப் புகுந்துரண்டு கால்வீட்டில்
நாக்குரண் டுபேசி நடுநின்ற நாரணரே
அல்லாய்ப் பகலாய் ஆணாகிப் பெண்ணாகி
எல்லார்க்குஞ் சீவன் ஈயுகின்ற பெம்மானே
பட்சிப் பறவை பலசீவ செந்துமுதல்
இச்சையுடன் செய்நடப்பு இயல்கணக்குச் சேர்ப்போனே
ஒருபிறப்பி லும்மை உட்கொள்ளாப் பேர்களையும்
கருவினமா யேழு பிறப்பிலுங் கைகேட்போனே
ஆறு பிறப்பில் அரியேவுன்னைப் போற்றாமல்
தூறு மிகப்பேசித் தொழாதபே ரானாலும்
ஏழாம் பிறப்பிலும்மை எள்ளளவுதா னினைத்தால்
வாழலா மென்றவர்க்கு வைகுண்ட மீந்தோனே
.
விளக்கம்
==========
உடலாகிய ஆலயத்துள் சூரியகலை, சந்திரகலை என்னும் இருவகை சுவாசக் கால்களாகி உடலுள் போக்குவரத்துப் புரிவதோடு, சுழிமுனை என்னும் சுவாசக் கலையாக நிலைநின்று நல்லது, கெட்டதைத் தீர்மானித்தருளுகின்ற பரம்பொருளே ! உம்மையே நீர் இரவாகவும், பகலாகவும் ஆக்கிக்கொள்வதுபோல் அனைத்து உயிரினத்திலும் ஆணாகவும், பெண்ணாகவும் ஆகி எல்லா உடலிலும் உயிராகவும் இருக்கின்ற பெருமானே !
.
பட்சி, பறவை முதலான எண்பத்து நான்கு லட்சம் யோனிபேத உயிரினங்களுக்கும் அவைகளின் அஞ்ஞான ஆசையினால் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் சஞ்சாரஞ்செய்து சகலத்தையும் உணர்ந்து அந்தந்த செயல்களுக்கெல்லாம் அளவு போலிட்டு அதற்கான பலனை கணக்கிட்டு இயல்பாக அருளுகின்ற இறையோனே ! உம்முடைய உபாயங்களை, ஒரு கருணையினால் அவர்களுக்கு அடுத்தடுத்து இன்னும் ஆறு பிறப்பினைக் கொடுத்து, உம்முடைய அனுக்கிரகத்தை அறிந்துணர்வதற்கான ஆற்றலையும், அவற்றை ஈடேற்றுவதற்கான வாய்ப்பினையும் ஈந்து, அதன் பிறகு நடுத்தீர்ப்பு வழங்குகின்ற நாயகமே !
.
ஆறு முறை பிறந்து வாழந்த பின்னும் அரிய செயலோனான உன்னைப் பற்றி உணராமல், போற்றாமல், புகழாமல் துதிக்காமல் அகம்பாவத்தோடு அவதூறாக இகழ்ந்து பேசுகின்ற இழிவான குணமுடையோருக்குக் கூட ஏழாம் பிறப்பை அருளி, அந்த ஏழாவது பிறப்பில் உம்மை எள்ளளவு நினைத்து விட்டால் அவரக்கு அழிவே இல்லாமல் வாழ்வாய் என வாழ்த்தி பிறவிப் பிணியகற்றி, வைகுண்ட வீட்டில் வைத்தாளவோனே !
.
.
அகிலம்
========
இப்படியே ஏழு பிறப்பதிலும் உம்மையுந்தான்
அப்படியே ஓரணுவும் அவர்நினையா தேயிருந்தால்
குட்டங் குறைநோய் கொடியகன்னப் புற்றுடனே
கட்டம் வந்து சாக கழுத்திற்கண்ட மாலையுடன்
தீராக் கருவங்கும் தீன்செல்லா வாய்வுகளும்
காதா னதுகேளார் கண்ணே குருடாகும்
புத்தியற்று வித்தையற்றுப் பேருறுப்பு மில்லாமல்
முத்திகெட்ட புத்தி முழுக்கிரிகை தான்பிடித்துப்
பிள்ளையற்று வாழ்வுமற்றுப் பெண்சாதி தானுமற்றுத்
தள்ளையற்று வீடுமற்று சப்பாணி போலாகி
மாநிலத்தோ ரெல்லாம் மாபாவி யென்றுசொல்லி
வானிழுத்து மாண்டு மறலியுயிர் கொள்கையிலே
நாய்நரிகள் சென்று நாதியற்றான் தன்னுடலைத்
தேயமது காணத் திசைநாலும் பிச்செறிந்து
காக்கை விடக்கைக் கண்டவிடங் கொண்டுதின்னப்
போக்கடித்துப் பின்னும் பொல்லாதான் தன்னுயிரை
மறலி கொடுவரச்சே வலியதண் டாலடித்துக்
குறளி மிகக்காட்டிக் கொடும்பாவி தன்னுயிரை
நரகக் குழிதனிலே நல்மறலி தள்ளிடவே
இரைநமக் கென்று எட்டிப் புழுப்பிடித்து
அச்சுத ரைநினையான் அய்யாவைத் தானினையான்
கச்சி மனதுடைய காமாட்சியை நினையான்
வள்ளிக்குந் தேவ மாலவருக் காகாமல்
கொள்ளிக்குப் பிள்ளையில்லாக் கொடும்பாவி யென்றுசொல்லி
எவ்வியே அட்டை எழுவாய் முதலைகளும்
கவ்வியே சென்று கடித்துப் புழுப்பொசிக்கும்
என்றுநீ ரேழு இராச்சியமுந் தானறிய
அன்று பறைசாற்றி அருளிவைத்த அச்சுதரே
.
விளக்கம்
==========
இறைவா உம்மை ஏழு பிறப்பிலும் அணுவளவு கூட நினையாமல் நிந்திப்போர்களை, குஷடம், கன்னப்புற்று, கண்டமாலை, கருவங்கு, உணவு உட்கொள்ள முடியாத அளவிலான வாயு உபாதை, காது கேளாமை கண்தெரியாமை, அறிவு வளர்ச்சியற்ற நிலை, கல்வியோ, ஏனைய வித்தைகளையோ என்னவென்று தெரிந்துகொள்ள முடியாமை, மற்றும் உடலில் முக்கியமான உறுப்புகளற்று முக்தி அடைவதற்கான புத்தியுமற்று உணவை மட்டுமே உள்நோக்காகக் கொண்டு அலைவர்.
.
மனைவி மக்களற்று, மற்றும் கிளைகளற்று, தாயின் அரவணைப்பின்றி, வீடுவாசலற்று வெறுமையாக, மகிழ்ச்சியற்று முடவன்போல் வாழ்வர். உலகத்தோரெல்லாம் அவ்வகையோரைப் பார்த்து பாவியென்று பகர்வர். எமன், அவன் உயிரை எடுத்ததும் நாதியற்ற அந்த பிணத்தை நாய்களும், நரிகளும் நான்கு திசைகளிலும் இழுத்துச் சென்று பிடுங்கிப் பிடுங்கி எறியும். காக்கையும், நரியும், அந்தச் சதைகளைச் சந்து பொந்துகளில் கொண்டு வைத்துக் கொத்திக் கொத்தித் தின்னும்.
.
அந்தப் பொல்லாதவன் உயிரை, உரிய இடத்திற்கு எமன் கொண்டு வந்ததுமே மிகப்பெரிய தண்டாயுதத்தால் அடித்து அலறவைத்து, அந்தக் கொடும்பாவியின் உயிர் நரகக் குழியிலே தள்ளப்படும். நரகத்தில் கிடக்கின்ற நரகப் புழுக்களோ நமக்கு ஏற்ற இரை கிடைத்ததென எட்டிப்பிடித்து உண்டு மகிழும் என்று நீர் அன்று எழுதி அவனியோர் அறிய பறை சாற்றி அருளிய அச்சுதரே சரணம்!
.
.
தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர்

