#🙏ஆன்மீகம் #பத்தி கண்டு பயம் வேண்டாம்,*விதியை வெல்வது எப்படி?*🌹
நவகிரகங்கள் நமது வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதும். நமது வினைப் பயனுக்கு ஏற்ப அவை நன்மை தீமைகளை நமக்குத் தருகின்றன என்பதும் யாவரும் அறிந்ததே
என்றாலும் நவகிரகங்கள் என்பவர்கள் யார் ?
இறைவனுடைய ஏவலர்கள் ,இறைவன் வகுத்துள்ள சட்டத்தின்படி நமது வினைப்பயனாகிய பிரார்த்துவம் என்னும் கன்மப் பயனை இறைவனது ஆணைவழி ஊட்டுவதே நவகிரக நாயகர்களின் பணி, என்றாலும் தனது
அதிகார எல்லைக்குட்பட்ட சில அனுசரனைகளை இந்த நவகிரகங்களும் செய்துகொள்ளவும் முடியும்,
இது ஒரு நிறுவனத்தின் அதிகாரி தனக்கு கீழ் வேலை பார்க்கும் ஒரு ஊழியரது பணிக்குத் தக்க ஊதிய உயர்வு அல்லது ஊதிய குறைப்பு அல்லது தண்டனை வழங்குவதற்கு ஒப்பாகும், ஆனால் அந்த அதிகாரி அவரை நிரந்தரமாக வேலையை விட்டு நீக்க முடியாது, அதற்கு அந்நிறுவனத்தின் முதலாளியின் அனுமதி வேண்டும்,
அதுபோலவே நவகிரகங்களும் தனது எல்லைக்குட்பட்டே செயல்பட முடியும்,
சரி அப்படியானால் நமக்கு விதிக்கப்பட்டுள்ள தீவினைகளை நாம் அனுபவித்தே தான் ஆக வேண்டுமா ?
இதிலிருந்து விடுபட வாய்ப்பே இல்லையா ?
ஒரு சாரர் பரிகாரத்தினால் விதியை மாற்றலாம் என்றும், ஒரு சாரர் என்ன செய்தாலும் விதியை அனுபவித்தே ஆகவேண்டும் என்றும் இருவிதமாக வேறுபடுகிறார்கள்,
விதித்ததை விதித்தபடியே தான் அனுபவித்தாக வேண்டும் என்றால் - கடவுள் என்ற ஒருவர் தேவையே இல்லையே ?
விதியை ஊட்டுவது இறைவன் அதை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பது நவகிரகங்கள் எனலாம்
யாவருக்கும் மேலான பரம்பொருளே நமது வினைப்பயனை ( ஊழை ) நமக்கு ஊட்டுவதால் அதை வெல்ல முடியாது என்பது பொருள்,
இன்னும் இதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டுமானால். நாம் செய்யும் நல்வினை தீவினை ஆகிய வினைகள் ( ஊழ் ) இரண்டுமே ஜடப் பொருள்கள். எனவே அதை ஆன்மாக்களுக்கு ( உயிர்களுக்கு ) எடுத்து ஊட்ட இறைவன் தேவை,
நாம் செய்யும் வினைகளை நமக்கு ஊட்டுபவன் இறைவனே என்பதே
சரி ஊட்டுபவன் இறைவன் என்னும்போது - அவன் நமக்கு நன்மையை மட்டும்
ஊட்டக்கூடாதா? ஏன் தீமையையும் ஊட்ட வேண்டும்?
அதற்கு காரணம் - நம் மீது உள்ள கருணைதான்
ஆம் இன்பத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தால் நமக்கு இந்த வாழ்வின் மீது ஒரு விருப்பம் ஏற்பட்டு மீண்டும் மீண்டும் பிறக்கவே ஆசைப் படுவோம்,
ஆனால் ஒவ்வொரு உயிரும் முத்தி என்ற ஒன்றை அடையவேண்டியது அவசியமில்லையா?
எனவேதான் இறைவன் நன்மை தீமை இரண்டையும் உயிர்களுக்குத் தந்து அதனாலாகிய அனுபவத்தையும் தந்து இந்த உலகின் நிலையாமையை உணர்த்தி பிறவியின் கொடுமையையும் உணர்த்தி நமக்கு தெளிவை தருகிறான்.
ஒரு எடுத்துக்காட்டு கதை
ஒரு மரண தண்டனை கைதி தனது தவறை உணர்ந்து ஜெயிலரிடம் கருணை மனு கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
ஜெயிலர் என்ன பண்ண முடியும்?
ஐயா இது என்னால் முடியாது ,, விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவதே எனது வேலை. வேண்டுமானால் உங்களுக்கு வலிக்காமல் இருக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்,
இங்கு ஜெயிலரை - நவகிரகமாக நினைத்துக் கொள்ளுங்கள் அவற்றால் இயன்ற தீர்வை அவை நல்க முடியும் என நம்புங்கள்
இப்போது ஜெயிலரால் கைவிடப்பட்ட அல்லது அறிவுறுத்தப்பட்ட அதே கைதி இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புகிறார் என்று வைத்துக் கொள்வோம்
அப்படி அந்த கைதி அனுப்பிய கருணை மனுவை பரிசீலித்த ஜனாதிபதி விரும்பினால் அந்த கைதியை மன்னிக்கலாம் அல்லவா?
இங்கு ஜெயிலராக - நவகிரகங்களையும் ஜனாதிபதியாக - இறைவரையும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அப்படியானால் சாதரணமான ஒரு நாட்டின் ஜனாதிபதியாலேயே அதிகபட்ச தண்டனை எனப்பட்ட மரண தண்டனையையே மாற்ற முடியும் என்றால்...
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகராய் அண்ட சராசரங்களுக்கும் தலைவராய் ( ஜனாதிபதியாய் ) இருக்கும் இறைவன் நினைத்தால் விதியை மாற்ற முடியாதா?
முடியும் என்பதை நாம் உணரலாமே!
வாழ்வில் செய்த தவறை உணர்ந்து திருந்த விரும்பும் ஒவ்வொருவரையும் இறைவன் மன்னித்து அருள் செய்கிறான் என்பது நமது அருள் சுட்டும் உண்மையாகும்,
அப்படியானால் நாம் செய்த தவறுக்கு உண்மையாக வருந்தினால் இறைவன் நம்மை மன்னிப்பார்.
ஆம் உண்மையாக வருந்த வேண்டும் , இனிமேல் இந்த தவறை செய்யமாட்டேன். என்ற உறுதியோடு இறைவனை சரணடைய வேண்டும்.
இவ்வுண்மையை நமது காரைக்கால் அம்மையார் - பதினொன்றாம் திருமுறையில்,
அறியாமலேனும் அறிந்தேனும் செய்து
செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறி நின்று
நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து
பொன்முகலி ஆடுதலும் போம்,
என்று குறிப்பிடுவதால் உணரலாம்.
அம்மையார் மீண்டும் ஒரு பாடலில் மிக அருமையாக கூறியிருக்கிறார்..
இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
எந்தாய் என இரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான்
என்றும் காரைக்கால் அம்மையார் கூறுவதை காணலாம் ,
எவ்வளவு அற்புதமான வரிகள் பாருங்கள் ,
இறைவனே எந்தாய் - என்பார்க்கு வரும் வெந்துயரை அவன் மாற்றுவான் என்பது எவ்வளவு நம்பிக்கையான வரிகள் - அருள் மொழிகள்,
எனவே இதுகாறும் பார்த்தவற்றால் இறைவனது கருணை இருந்தால் ( நவகோள்களை ) விதியை வெல்ல முடியும் என்பதை அறியலாம்.
ஆனால் எல்லோருமே அப்படி வென்று விட முடியுமா?
யாருக்கு நவகோள்கள் தீங்கு செய்யாது? அல்லது யாரால் விதியை வெல்ல முடியும் ?
யார் ஒருவர் எந்த சமயத்திலும் - அதாவது தனது வாழ்நாளில் சந்திக்கும் நன்மை தீமை யாவிலும் இறைவனையே சார்ந்திருக்கிறார்களோ? யார் ஒருவர் பிறருக்கு தீங்கிழைக்கக் கூடாது என திருந்தி நல்லோராக வாழ்கிறார்களோ - அவர்களாலேயே விதியை வெல்ல முடியும்
இக்கருத்தை நமது திருஞானசம்பந்தப் பெருமான்.
இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே என்பதாலும்
பெற்றபோழ்தும் பெறாத போழ்தும்
பேணி உம் கழல் ஏத்துவார்கள்
மற்றோர் பற்றிலர் என இரங்கி
மதியுடையோர் செய்கை செய்யீர்
என சுந்தரமுர்த்தி நாயனார் குறிப்பிடுவதாலும் உணரலாம்
ஆக சோதிட உலகில் - மிக மோசமான ஜாதக அமைப்பை உடையவர்களும் கூட இறைவனேயே நம்பி நின்றால் நவகோள்கள் பாதிக்காது என்பதை எம்பிரான் திருஞானசம்பந்தர் கோளறு பதிகம் மூலம் நமக்கு மிக அழகாக எடுத்துரைத்திருக்கிறார்.
வேயுறுதோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே,
என்று அருளியிருப்பதால் - நல்ல நல்ல அடியாராக மாறுவோம் விதியை வெல்வோம்..
அண்டசராசரம்தையும் ஆளக்கூடிய எம்பெருமான் சிவபெருமானை வணங்குவோருக்கு நவ கிரகங்களால் வரும் தீங்குகள் போக்கக் கூடிய வல்லமை கொண்ட இறைவன் உடன் இருக்கும்போது பயம் வேண்டாம் விதியை வெல்வோம் இறைவனை முழுமையாக நம்ப வேண்டும்.
🙏🏻ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻
🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻

