கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை 2ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 11.11.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
துவாபர யுகம் தொடர்ச்சி
===========================
பாவமாய்க் கஞ்சன் பலநாளா யெங்களையும்
ஏவல்தான் கொண்ட இடுக்கமதை மாற்றுமையா
ஊழியங்கள் செய்து உடலெல்லாம் நோகுதையா
ஆழி யடைத்த அச்சுதரே யென்றுரைத்தார்
வாண னென்றகஞ்சன் மாபாவி யேதுவினால்
நாணமது கெட்டு நாடுவிட்டுப் போறோங்காண்
நரபால னென்ற நன்றிகெட்ட கஞ்சனினால்
வரம்பா னதுகுளறி மானிபங்கள் கெட்டோமே
இத்தனையுங் காத்து இரட்சிக்க வேணுமையா
முத்தியுள்ள தேவர் முறையம் அபயமிட
பூமா தேவி புலம்பி முறையமிட
நாமாது லட்சுமியும் நன்றா யபயமிட
நாரா யணர்பதத்தை நாயகியுந் தெண்டனிட்டுச்
சீரான லட்சுமியும் செப்பினள்கா ணம்மானை
என்னைப்போல் பெண்ணல்லவோ இவள்தா னிடுமுறையம்
வன்னமுள்ள மாலே மனதிரங்கிக் காருமையா
.
விளக்கம்
=========
பாசாங்குபுரிவதில் பலசாலியாகிய கம்சன் நீண்ட நெடுங்காலமாக எங்களையெல்லாம் கட்டளையிட்டுத் துன்புறுத்தும் கஷ்டங்களை மாற்றித் தாருமையா ! அவனுக்கு ஊழியங்கள் செய்து, செய்து எங்கள் உடலெல்லாம் வலிக்குதையா ! கடலானது நாட்டிற்குள் புகுந்துவிடலாகாதென்று கரையிட்டு வைத்த கருணாகரத்தோனே, அரசனாகிய அந்த கம்சன் என்ற அரக்கனின் அட்டூழியங்களால் எங்களுடைய மானம், மரியாதை, சூடு, சொரணை அத்தனையும் விட்டு இந்த உவகை விட்டே போக வேண்டியதாயிற்றையா !
.
மனித உருகொண்ட அந்த மாபாவி கம்சனோ, நன்றி சற்றும் இல்லாத நய வஞ்சகன், அவனால் நாங்கள் எங்களுக்கே உரித்தான் தன்மான வரம்புகள் தவறிக் கெட்டு அலைகிறோம். இந்த இன்னல்களை இறையோனே நீர்தான் தீர்த்து வைத்து எங்களைக் காத்தருள வேண்டும் என்று அந்தப் பேறு பெற்ற தேவர்களெல்லாம் பெரியோனிடம் முறையிட்டார்கள்.
.
தேவர்களின் இந்நிலையுணர்ந்த பூமாதேவியும் புலம்பி முறையிட்டாள். அந்த மண்மகளின் மனக்குமுறலை உணர்ந்த மகாலட்சுமியோ, மாயோனாகிய மகாவிஷ்ணுவின் பாதத்தில் விழுந்து வணங்கி பணிவோடு சொல்கிறாள். சுவாமி ! தேவர்கள் முறையத்தைக் கேட்டுப் பூமாதேவியே புலம்பித் தவிக்கிறாள். அவள் என்னைப் போன்ற பெண்ணல்லவா? வர்ணனைகளுக்குள் அடங்காத வலிமை பொருந்திய மாலே ! அந்த மண்மகளின் மனக்குமுறலை மாற்றும், மனமிரங்கி தேவர்களைக் காத்தருள எழுந்தருளும் மாயோனே என்று மன்றாடினாள்.
.
அகிலம்
========
தேவர்களுக்காக மகாவிஷ்ணு மனயிரங்குதல்
============================================
உடனேதா னாதி ஓலமிட்டுத் தேவருக்கும்
திடமான பூமா தேவிக்குஞ் சொல்லலுற்றார்
வந்து பிறப்போங்காண் மாபாரத முடிக்க
நந்தி குலம்வளர நாம்பிறப்போங் கண்டீரே
சாரமில்லாக் கஞ்சன் தனைவதைத்துப் பூமியுட
பாரமது தீர்ப்போம் பாரத முடித்துவைப்போம்
துவாபர யுகத்தில் துரியோ தனன்முதலாய்த்
தவறாத வம்பன் சராசந் தன்வரையும்
அவ்வுகத் திலுள்ள அநியாயமு மடக்கிச்
செவ்வுகத்த மன்னவர்க்குச் சிநேகமது செய்வதற்கும்
உங்களுக்கும் நல்ல உதவிமிகச் செய்வதற்கும்
அங்குவந்து தோன்றி ஆய ருடன்வளர்வோன்
போங்களென்று பூமா தேவியையுந் தேவரையும்
சங்குவண்ண மாலோன் தானே விடைகொடுத்தார்
.
விளக்கம்
----------------
உடனே. ஆதிப் பரம்பொருளாய் அமர்ந்திருந்த மகாவிஷ்ணு, புலம்பிப் புழுங்கிய பூமாதேவியையும், தேற்றுவாரற்று தவித்த தேவர்களையும், அருகே அழைத்து அரவணைத்து, தேவர்களே ! பூமகளே ! பூவுலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் துவாபரயுகத்தை நிறைவு செய்யவும் அங்கே சிவகுலம் தழைத்து அவர்களைச் சிறப்பாக வாழவைக்கவும் நான் மண்ணுலகில் மீண்டும் பிறக்கப்போகிறேன்.
.
பிறந்து உலகத்தையே துச்சமாகக் கருதிக்கொண்டிருக்கிற துஷ்டனாகிய கம்சனை அழித்து, நடந்தேற வேண்டிய மகாபாரதப் போரையும் நடத்தி நிறைவேற்றி, பூமி பாரத்தை தீர்த்து வைப்பேன்.
.
துவாபர யுகத்தின் கெடுமதியாளர்களான துரியோதனன் முதலான சராசந்தன் வரை அழித்து, அந்த யுகத்தில் நிகழுகின்ற அநியாயங்கள் அத்தனையையும் அழித்து, உகந்த மன்னர்களுக்கு மகிமை கொடுப்பதற்கும், அங்கே உங்களுக்கெல்லாம் உன்னதமான உதவிகள் செய்வதற்கும் பூலோகத்தில் அவதரிக்கப் போகிறேன்.
.
மண்ணகத்தில் மனிதனைப்போல் அவதாரம் செய்யப் போகும் நான் ஆயர்குலத்திலே வளர்வேன். ஆகவே, நீங்களெல்லாம் அமைதியாகச் சென்று அங்கே ஆறுதலுடன் இருங்கள் என்று மகாவிஷ்ணு மண்மகளையும், மற்றுமுள்ள தேவர்களையும் அனுப்பி வைத்தார்.
.
.
அகிலம்
========
கண்ணன் அவதாரம்
=====================
விடைவேண்டித் தேவர் மேதினியில் தாம்போகப்
படைவீர ரான பச்சைமால் தானெழுந்து
ஆதி கயிலை அரனிடத்தில் வந்திருந்து
சோதி மணிநாதன் சொல்லுவா ரம்மானை
வாணநர பாலனென்ற மாபாவிக் கஞ்சனினால்
நாணமது கெட்டோமென நாடிமிகத் தேவரெல்லாம்
பூமா தேவிமுதல் பொறுக்கமிகக் கூடாமல்
ஆமா அரியே ஆதி முறையமென்றார்
முறையம் பொறுக்காமல் முடுகியிங்கே வந்தேனென்று
மறைவேத மாமணியும் மகிழ்ந்துரைத்தா ரம்மானை
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணுவிடம் விடைபெற்ற தேவர்கள் பூலோகம் சென்றார்கள். அதர்மத்தை எதிர்த்துப் படைநடத்தி வெற்றிக்காணும் அவதாரதாரியாகிய மகாவிஷ்ணுவோ அங்கிருந்து எழுந்தருளி கைலைக்கு ஏகி, சிவபெருமானோடு அமர்ந்து செய்தியைப் பரிமாறுகிறார்.
.
ஈஸ்வரா ! ஈவு, இரக்கமே இல்லாத நரபாலனாகிய கம்சன் என்ற அரக்கனின் கொடுமையால் வேதனையுற்று வெட்கங்கெட்டு வாழவேண்டியதாயிற்றே என்று தேவர்களும், பூமாதேவியும் புலம்பித் தவிக்கிறார்கள். அவர்களுடைய அபயம் பொறுக்கமுடியாமல் தங்களைக் காண இங்கே விரைந்து வந்தேனென்று வேதமுதல்வனாகிய மகாவிஷ்ணு வெற்றிப் பெருமிதத்தோடு எடுத்துரைத்தார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩

