#மக்கள் தலைவர்கள்
கர்மவீரர் காமராஜரின் நினைவுநாள் இன்று!
காந்தி பிறந்தநாளில் மறைந்தார், தென்னாட்டுக் "காலா காந்தி"!
கிங் மேக்கராக திகழ்ந்த “கர்மவீரர்” காமராசரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு!
தன்னுடைய உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் காமராசர்.. பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை என்றெல்லாம் அழைக்கப்பட்ட அவர், இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கியவர். இன்றைய நாட்குறிப்பில் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரை பற்றி தற்போது பார்க்கலாம்.
காமராசரின் வாழ்க்கை வரலாறு:
● 1903-ம் ஆண்டு விருதுநகரில் குமாரசாமி மற்றும் சிவகாமியம்மாளுக்கு மகனாக பிறந்தவர் பெருந்தலைவர் காமராசர்.
● 1908ம் ஆண்டு ஏனாதி நாராயண வித்யா சாலையில், ஆரம்பக்கல்வியை தொடங்கினார். 6 வயதில், தனது தந்தை இறந்ததால், பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலைக்கு ஆளான காமராசர், சிறு வயதிலேயே துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
● 1920ம் ஆண்டு தனது 16 வயதில், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரான காமராசர், ஆங்கிலேயருக்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று 6 முறை சிறைக்கு சென்று 9 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்.
● காங்கிரஸ் தலைவர் தீரர் சத்திய மூர்த்தியை அரசியல் குருவாக மதித்த காமராசர், 1953-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
● ராஜாஜியால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6,000 பள்ளிகளை திறந்தார். மேலும், 17 ஆயிரம் பள்ளிகளை திறந்ததோடு, பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை, எளிய மக்களின் கல்விக்கு அடித்தளமிட்டார். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்வி கற்போரின் எண்ணிக்கை, காமராசர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.
● கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார் காமராஜர்.
● 1963ம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
● 1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரியையும் அவரது மரணத்திற்கு பின், இந்திராகாந்தியையும் பிரதமராக்கி கிங் மேக்கராக விளங்கினார்.
● தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு ஆற்றுவதிலேயே அர்ப்பணித்துக்கொண்ட காமராஜர், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தனது 72 வது வயதில் காலமானார்.
● அவரது இறப்புக்கு பின் இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி காமராசரை கவுரவித்தது.
● சமூகத் தொண்டையே பெரிதாக கருதிய காமராசர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார்.
● முதலமைச்சராக இருந்தபோதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டும் தான் அவர் சேர்த்து வைத்த சொத்து.
வணங்குவதற்குத் தகுந்த மகான் இவரே!
