ShareChat
click to see wallet page
சிரஞ்சீவி கட்சி சீரழிந்த கதை 2 அப்துல் கலாம்தான் உந்து சக்தி! ஆந்திரா சினிமாவில் உச்சத்தில் இருந்த சிரஞ்சீவிக்கு முதல்வர் நாற்காலி மீது ஆசை இருந்தது. ஆனால், அதனை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தனியாகக் கட்சி ஆரம்பித்து அரசியலில் நுழையும் எண்ணம் இருந்தது. அவருடைய அரசியல் வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அரசியல் வருகை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதெல்லாம் ’’அரசியலுக்கு வர விரும்பவில்லை’’ என்றே பதில் அளித்துக் கொண்டிருந்தார் சிரஞ்சீவி. ஆந்திராவில் ’தெலுங்கு தேசம்’ என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் என்.டி.ராமாராவ், 'தல்லி தெலங்கானா' என்ற கட்சியை ஆரம்பித்த நடிகை விஜயசாந்தி ஆகியோரின் வரிசையில் புதிய கட்சியைத் தொடங்குமாறு சிரஞ்சீவியை அவருடைய ரசிகர்கள் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். அதே நேரத்தில் கண்தானம், ரத்ததானம் போன்ற சமூக சேவையில் சிரஞ்சீவி பெரிதும் ஆர்வம் காட்டி வந்தார். 1992-ஆம் ஆண்டு குண்டூர் பிரம்மானந்த ரெட்டி மைதானத்தில் நடைபெற்ற ’கரானா மொகுடு’ படத்தின் வெற்றி விழாவில், சிரஞ்சீவி அரசியலில் நுழைந்தால் என்ன மாற்றம் ஏற்படும்? என்ற விவாதம் தொடங்கியது. இதனால், அவருடைய அரசியல் பிரவேசம் எதிர்பார்ப்பைக் கூட்டியது. சிரஞ்சீவி கட்சி தொடங்கும் முன்பே, அவருடன் இணைவதற்கு ஏராளமான அரசியல் பிரபலங்கள் தயாராக இருந்தார்கள். சிரஞ்சீவியுடன் கூட்டணி அமைக்கவும் கட்சிகள் ஆர்வம் காட்டின. ஆனாலும் தன்னுடைய அரசியல் வருகை பற்றி சிரஞ்சீவி அதிகாரப்பூர்வமாக எதுவும் பேசாமல் இருந்தார். ரஜினி ஸ்டைலில், 'வருவேன், வரமாட்டேன்' என்று அரசியல் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார் 2009-ம் ஆண்டு ஆந்திரா சட்டமன்றத்திற்குத் தேர்தல். இதுதான் சரியான நேரம் என நினைத்து என்.டி.ஆர். பாணியில் 2008-ஆம் ஆண்டு வந்தேவிட்டார் சிரஞ்சீவி. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஆகியோர் கட்சி ஆரம்பித்த போது எதிர்க் கட்சிகளின் உணர்வு என்னவோ, அதேதான் ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளிடமும் இருந்தது. 2008 ஆகஸ்ட் 5-ம் தேதி சிரஞ்சீவி கட்சி ஆரம்பிப்பதற்கான அறிவிப்பு ஒன்று திடீரென வெளியானது. ஆந்திர மாநில சிரஞ்சீவி ரசிகர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் அசோக் சாம்ராட் யாதவ் திருப்பதியில் பத்திரிகையாளர்களை அழைத்து, ’’ஆகஸ்ட் 26-ஆம் தேதி திருப்பதியில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் சிரஞ்சீவி தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் ஆகியவற்றைத் தெரிவிக்கிறார். லட்சக்கணக்கான ரசிகர்கள் சிரஞ்சீவி மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். பல அரசியல் பிரமுகர்களும் சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிரஞ்சீவியின் அரசியல் கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடனேயே ஒவ்வொருவராகக் கட்சியில் வந்து சேருவார்கள்’’ என்று சொன்னார். இதன் பிறகு சிரஞ்சீவியின் மைத்துனரும், பிரபலப் படத் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், பொதுக் கூட்டம் நடக்க இருக்கும் திருப்பதி சில்பாராமம் மைதானத்தைப் பார்வையிட்டார். 2008 ஆகஸ்ட் 17-ம் தேதி ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் சிரஞ்சீவியின் புதிய கட்சிக்கு அலுவலகம் திறக்கப்பட்டது. அதற்காகப் பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டனர். அன்றைக்குத்தான் கட்சி தொடங்குவதைப் பற்றி அதிகாரப்பூர்வமாகப் பேசினார் சிரஞ்சீவி. அரசியல்வாதிகளுக்கே உரிய வெள்ளை நிற உடையில் கம்பீரமாக வந்த சிரஞ்சீவி, போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார். ‘’என்னை அரசியலுக்கு வரத் தூண்டிய அனைவருக்கும் முதலில் நன்றி. கோடானுகோடி தெலுங்கு மக்கள், என்னுடைய ரசிகர்கள், ஆதரவாளர்களின் ஆசை, கனவு இது. அதை நிறைவேற்றப் போகிறேன். இன்று எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். எனது அரசியல் பிரவேசம் குறித்துப் பேச விரும்புகிறேன். கடந்த 30 ஆண்டுகளாக நான் திரையுலகில் இருந்தாலும் பொதுமக்களின் தேவைகள் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்திருக்கிறது. என் அரசியல் எதிர்காலத்தை மக்கள்தான் நிர்ணயிக்கப் போகிறார்கள். எனது வாழ்க்கையும் சேவையும் ஆந்திர மக்களுக்காகவே. கடவுள் எனக்குக் கொடுத்துள்ள வாய்ப்பு இது. சமூக பிரச்னைகளை தீர்க்கக் கடவுள் மனிதர்களைப் பயன்படுத்துவார். அப்படித்தான் என்னை அரசியலுக்கு அனுப்பி, சமூகத்திற்குச் சேவை செய்ய அனுப்பியிருப்பதாகக் கருதுகிறேன். அதனால், இது கடவுளிடமிருந்து வந்த அழைப்பு. நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் பேரணிகள், கூட்டங்களை என்னுடைய ஆதரவாளர்கள், அன்புக்குரியவர்கள் நடத்தினார்கள். அதற்கு இப்போது நான் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆந்திர மாநில அரசியலில் ஒரு வெற்றிடம் உள்ளது. இளைஞர்கள், பெண்கள் எனப் பல தரப்பட்ட மக்களும் என்னை அரசியலில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார்கள். அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். நான் அரசியலில் ஈடுபடாவிட்டால், அது ஒரு வரலாற்றுப் பிழையாகிவிடும். அதனால், சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசியலில் ஈடுபடப் போகிறேன். முதல்வர் ராஜசேகர ரெட்டியோ, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவோ எனக்கு எதிரிகள் அல்ல. வறுமை, பசி, பட்டினி போன்றவையே என்னுடைய எதிரிகள். அவற்றுக்கு எதிராகப் போரிடுவேன். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து வந்தேன். எனது உணர்வுகளை அவர்களிடம் தெரிவித்தேன். அப்படி நான் சந்தித்தவர்களில் ஒருவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அவர் என்னிடம் பேசுகையில், ’நான் சண்டிகரில் ஒரு மாணவர் சந்திப்பில் பங்கேற்ற போது, மாணவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டேன். அவர்களில் பலர், நான் என்ஜீனியர் ஆவேன், வக்கீல் ஆவேன், டாக்டர் ஆவேன் என்றார்கள். மிகச் சிலரே அரசியல்வாதி ஆவேன் எனச் சொன்னார்கள். அந்த அளவுக்கு மக்கள் மனதில் அரசியல் குறித்த பயம், அவமதிப்பு இருக்கிறது. அந்த நிலையை உங்களைப் போன்றவர்கள்தான் போக்க வேண்டும். உங்களுக்கு உங்களைப் பற்றித் தெரியாது. நீங்கள் நடிகரை விட மேலானவர்’ என்று சொன்னார். அப்துல் கலாம் சொன்ன வார்த்தைகள்தான் என்னுடைய மன மாற்றத்திற்கு முக்கிய காரணம். எனது எல்லாச் சந்தேகங்களும் தீர்ந்தன. அரசியல் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல செய்ய வேண்டும் என்ற எண்ணமும் பிறந்தது. அரசியலில் இறங்க முடிவு செய்தேன். மறைந்த என்.டி.ஆர். ஆந்திர மாநில சமூக அமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர். திரைக் கலைஞர்களால் அரசியலிலும், சமூகத்திலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம். முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர்தான் நான் அரசியலுக்கு வருவதற்கான உந்துசக்தி . நான் அரசியலில் நுழைய மறுத்திருந்தால் அது வரலாற்றுப் பிழையாக மாறியிருக்கும். கம்மம் மாவட்டத்தில் ஓர் ஊர்க்காவல் படை வீரர் எனக்காகத் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ’சிரஞ்சீவியை முதல்வராகக் காண முடியவில்லையே’ என்று எழுதியிருந்தார். இது என்னை நெகிழ வைத்தது. அதேபோல ஐடி வேலையில் இருந்த ஒரு தம்பதியினரும் இதே காரணத்திற்காகத் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்தச் சம்பவங்கள் என்னை நிறையச் சிந்திக்க வைத்துவிட்டது. இனிமேலும் அரசியலுக்கு வராமல் இருக்கும் பிழையைச் செய்யக் கூடாது என்ற முடிவை எடுத்தேன். அரசியல் எனக்குப் புதிது. அரசியல் பற்றி எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், மக்கள் பிரச்னைகளை களைவதற்கான வழி என்ன? என்று எனக்குத் தெரியும். சினிமாவில் நடித்து, ஏராளமாகச் சம்பாதித்து விட்டேன். எனவே, மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வருகிறேன். மக்கள்தான் என்னுடைய அரசியல் குரு. நான் அரசியல்வாதியாக நடிக்க மாட்டேன். அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மனத் திருப்தியுடன் அரசியலுக்கு வருகிறேன். எனக்குக் கடவுள் புகழையும், பணத்தையும் கொடுத்திருக்கிறார். எனது ரத்த வங்கிகள் மூலம் ஏராளமான மக்கள் பலனடைந்திருக்கிறார்கள். 30 வருடங்களாக நடித்து விட்டேன். இனிமேல் ஓர் அரசியல்வாதியாகச் செயல்படப் போகிறேன். இங்கு நடிப்பு எடுபடாது. இதை நான் உண்மையாகவும், நிஜமாகவும் செய்தாக வேண்டும். அதை கௌரவத்துடனும் களங்கமில்லாமலும் செய்யப் போகிறேன். ஆந்திராவைச் சந்தோஷம் மிக்க மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஒரே லட்சியம். ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய நான் விரும்பவில்லை. அரசியலில் இறங்கியதால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க மாட்டேன். எனினும், மக்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு செல்ல உருவாகும் திரைப்படமாக இருந்தால் அதில் நடிப்பது குறித்துப் பரிசீலிப்பேன்’’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார் சிரஞ்சீவி. ஆந்திராவில் நக்சலைட்டுகள் வன்முறை, தெலங்கானா மாநில கோரிக்கை போன்ற பிரச்னைகள் அன்றைக்குப் பிரதானமாக இருந்தது. அதுபற்றி சிரஞ்சீவியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "முக்கியமான பிரச்னைகளில் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்" என்றார். அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த போது சிரஞ்சீவியின் பின்னணியில் மகாத்மா காந்தி, அன்னை தெரசா, அம்பேத்கர் ஆகியோரின் பெரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிவிக்கும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி முக்கியமான நாள். ஆம். அன்னை தெரசாவின் பிறந்தநாள் அது. அவருடைய சேவையைக் குறிப்பது போல அன்றைத் தினத்தைச் சிரஞ்சீவி தேர்வு செய்ததுடன் அவரின் புகைப்படத்தையும் கட்சி அலுவலகத்தில் வைத்திருந்தார். சிரஞ்சீவி அரசியலில் குதித்ததை ஆந்திரா முழுவதும் அவருடைய ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஆந்திராவின் பல நகரங்களில் பொது இடங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்தும், பெரிய திரைகள் அமைத்தும் சிரஞ்சீவியின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். இந்தக் காட்சிகளையும் சிரஞ்சீவியின் பேட்டியையும் பார்க்க முடியாதவர்கள், அப்படியே நம்ம ஊரு நடிகர் விஜய் 2023-ல் அரசியல் என்ட்ரி கொடுத்ததையும் அவர் அரசியலுக்கு வந்த போது சொன்ன காரணத்தையும் அசைப்போடு கொள்ளுங்கள். அரசியலுக்கு வரச் சிரஞ்சீவி என்வெல்லம் சொன்னாரோ அதையெல்லாம் விஜய்யும் சொன்னார். சிரஞ்சீவியின் ரசிகர்கள் எப்படி அன்றைக்குக் கொண்டாடி மகிழ்ந்தார்களோ அதே போல விஜய் ரசிகர்களும் வெளிப்படுத்தினார்கள். தொடரும் - எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி #அரசியல் #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ்
அரசியல் - ShareChat

More like this