#சுதந்திரப் போராட்ட வீரர்கள்
இதே நாளில்,சுதந்திரப் போராட்ட வீரர்
பகத் சிங் செப்டம்பர் 28, 1907ல் பிறந்தார்.
இவர் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார்.
பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார்.
63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.
முன்னதாக,
1919இல், தனக்கு பன்னிரெண்டு அகவையாகும்போது, பகத்சிங் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிட்டார்.தனது பதினான்காம் அகவையில் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 2௦ஆம் தேதியன்று குருத்வாரா நானா சாஹிபில் பல ஆயுதமற்ற மக்கள் கொல்லப்பட்டதை எதிர்க்க போராட்டக்காரர்களை வரவேற்றார்.
பகத்சிங் இளைய புரட்சி இயக்கத்தில் (Young revolutionary movement) இணைந்து அகிம்சைக்கு மாறாக தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முனைந்தார்.
பகத்சிங்கின் தாக்கம் இந்திய இளைஞர்களுக்கு தெம்பேற்றுவதைப் பார்த்து மே 1927இல் பகத்சிங்கை ஆங்கிலேய அரசு முந்தைய ஆண்டு அக்டோபரில் நடந்த குண்டு வெடிப்பில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாற்றி கைது செய்தது. பிறகு அவர் ஐந்து வாரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் ஒர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் ராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928இல் காலமானார். இச்செய்தி ஆங்கிலேய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, ஆங்கிலேய அரசு ராயின் மரணத்தில் எந்த பொறுப்பும் ஏற்கவில்லை.
பகத்சிங் இச்சம்பவத்தை நேரில் காணவில்லை. என்றாலும் பழி வாங்க உறுதி பூண்டு சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரிடம் ஸ்காட்டைக் கொல்லக் கூட்டு சேர்ந்தார். இருந்தபோதிலும் ,
சிங்கிற்கு தவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர்.
மகாத்மா காந்தி இக்கொலைச்சம்பவத்தைக் கண்டனம் செய்தார். ஆனால் நேரு கூறியதாவது,
"பகத்சிங் பிரபலமடைந்தது அவரின் பயங்கரவாதச் செயலுக்காக அல்ல, ஆனால் அவர் லாலா லஜுபது ராயின் மரியாதையை, மேலும் அவர் மூலம் நம் நாட்டின் மரியாதையையும் நிலைநிறுத்த முயற்சித்ததற்காகவே. அவர் செயல் மறக்கப்பட்டது, ஆனால் அவர் ஒரு விடுதலை போராட்ட சின்னமாக உருமாறினார்." சில மாதங்களிலேயே பஞ்சாபின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் மற்றும் சற்று சிறிய வீரியத்துடன் பிற வடக்கு இந்தியப் பகுதிகளிலும் அவரது பெயர் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.
பகத்சிங்கின் தூக்குத்தண்டனை :
பகத்சிங்கின் தூக்குத்தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குத்தண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார்.
"தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங்' என்ற இந்தி திரைப்படத்தில் இந்தத் தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையைப் பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குத்தண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.
