#⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪️➕புனித அந்தோனியார் பாடல்கள்🎶 *சனவரி 15 : நற்செய்தி வாசகம்*
தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.
*✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45*
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.
பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பிவிட்டார்.
ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்துகொண்டிருந்தார்கள்.
*ஆண்டவரின் அருள்வாக்கு.*
-----------------------------------------------------------------
பொதுக்காலத்தின் முதல் வாரம் வியாழக்கிழமை
I 1சாமுவேல் 4:1-11
II மாற்கு 1:40-45
*“தொழுநோயாளரைத் தொட்ட இயேசு”*
இயேசுவால் மட்டுமே உங்களைத் தொட முடியும்:
ஒரு பங்கில் மிக ஆர்வமாய்ச் செயல்பட்டு வந்த சில இளைஞர்கள், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைப் பக்கத்து ஊரில் இருந்த தொழுநோயாளர்களோடு கொண்டாட விரும்பினார்கள். இந்த இளைஞர்கள் தொழுநோயார்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், அவர்களை நேரில் பார்ப்பத்தில்லை. அதனால் இவர்கள் தங்களோடு புத்தாடைகள், தின்பண்டங்கள் கூடவே இசைக்கருவிகளை எடுத்துக்கொண்டு, தொழுநோயாளர் இருந்த இடத்திற்குச் சென்றார்கள்.
இளைஞர்கள் தொழுநோயாளர்கள் இருந்த இடத்திற்குச் சென்று, அவர்களைப் பார்த்தபோது அதிர்ந்துபோனார்கள். காரணம், அவர்களுக்குக் கைகள் இருந்தாலும், அவற்றில் விரல்கள் இல்லை. முகம் இருந்தாலும், அது முழுமையாக இல்லை. பலர் இரண்டு காதுகளுக்குப் பதிலாக, ஒரு காதுடன் தான் இருந்தார்கள். ‘தொழுநோய் வந்தால் ஒருவருடைய உடல் இப்படியெல்லாம் சிதைந்து போய்விடுமோ?’ என்று அதிர்ச்சியடைந்தவர்களாய் அவர்கள், தாங்கள் கொண்டு வந்த புத்தாடைகள், தின்பண்டங்கள் போன்றவற்றை தொழுநோயாளர்களிடம் கொடுத்துவிட்டு, கிறிஸ்து பிறப்புப் பாடல் பாடினார்கள்.
தொழுநோயாளர்களால் பாடல்களைக் கேட்க முடிந்ததே அன்றி, அதற்குக் கைகளைத் தட்டி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியவில்லை. நிகழ்ச்சியின் நிறைவில் இளைஞர்களின் தலைவன் பேசித் தொடங்கினான். “இந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை உங்களோடு சேர்ந்து கொண்டாடியதில் மிக்க மகிழ்ச்சி. எங்களால் உங்களை மகிழ்விக்க பாடல்கள்தான் பாட முடியும்! இயேசு ஒருவராலேயே உங்களைத் தொட்டு உங்களுக்கு நலமளிக்க முடியும். அத்தகைய நலமளிக்கும் இயேசுவிடம் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். நாங்களும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறோம்.”
இந்த இளையோர் மன்றத் தலைவன் இறுதியாகச் சொன்னது போன்று, இயேசுவாலேயே தொழுநோயாளர்களைத் தொட்டு நலமளிக்க முடியும். ஆம், இன்றைய நற்செய்தியில் இயேசு தொழுநோயாளர்மீது பரிவுகொண்டு, அவரைத் தொட்டு, அவருக்கு நலமளிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
*திருவிவிலியப் பின்னணி:*
தொழுநோயாளர்களைப் பற்றிய பார்வையில் இன்றைக்கு நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்; ஆனால், அவர்களுக்கு அனுபவிக்கும் உடல், உள்ள வேதனையில் எந்தவொரு மாற்றம் இல்லை!
யூதச் சமூகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தீட்டுப்பட்டவராகக் கருதப்பட்டார் (லேவி 13:11). அதனால் அவர் ஊருக்கு வெளியே மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைக்கப்பட்டார். இவ்வாறு ஊருக்கு வெளியே வைக்கப்பட்ட தொழுநோயாளர் ஒருபக்கம் உடல் ரீதியான துன்பத்தை அனுபவித்தலும், மறுபக்கம் மக்களால் புறக்கணிக்கப்பட்டுவிட்டோம் என மனரீதியான துன்பத்தை அனுபவித்தார். இப்படி உடல் மன ரீதியினால் துன்பத்தை அனுபவித்துவந்த தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று வேண்டுகின்றார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு, “நான் விரும்புகின்றேன்” என்று சொல்லிவிட்டு, அவரைத் தொட்டு நலமாக்குகின்றார்.
தொழுநோயாளர் இயேசுவைக் கட்டாயப்படுத்தாமல், அவரது விருப்பத்தை நாடினார் என்பது கவனிக்கத்தக்கது. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேலர் உடன்படிக்கைப் பேழை தங்களோடு இருந்தால், பெலிஸ்தியரை வெற்றி கொண்டுவிடலாம் என்ற நினைத்துக்கொண்டு, கடவுளின் விருப்பத்தை அறிந்துகொள்ள விரும்பாமல், சீலோவில் இருந்த உடன்படிக்கைப் பேழைக்கொண்டு வருகின்றார்கள். அப்படியிருந்தும் அவர்கள் பெலிஸ்தியரிடம் தோற்கின்றார்கள். இஸ்ரயேல் மக்கள், நற்செய்தியில் வரும் தொழுநோயாளரைப் போன்று கடவுளின் விருப்பத்தை அறிந்திருக்கலாம். அவர்கள் அவ்வாறு செய்யாமல், கடவுளைத் தங்களுடைய விருப்பத்திற்கு வளைத்ததால் போரில் தோல்வியைத் தழுவுகின்றார்கள்.
ஆதலால், கடவுள் பரிவுமிக்கவராகவே இருந்தாலும், அவரது விருப்பத்தை நாடி, அவருக்கு உகந்த வழியில் நடப்பது சிறந்தது.
*சிந்தனைக்கு:*
நாம் கடவுளின் விருப்பத்திற்கு வளைந்து போகவேண்டுமே அன்றி, கடவுளை நம் விருப்பத்திற்கு வளைக்கக் கூடாது.
ஆண்டவர் தம் மக்கள்மீது பரிவு கொண்டிருப்பது போல, நாமும் ஒருவர் மற்றவரிடம் பரிவு கொண்டு வாழ்வோம்.
ஆண்டவரே நமது வலிமை. ஆகவே, அவரை நாம் இறுகப் பற்றிக்கொள்வோம்.
*ஆன்றோர் வாக்கு:*
‘இன்றைய காலகட்டத்தில் கொடிய நோய் தொழுநோயோ, புற்றுநோயோ அல்ல. சக மனிதனைக் கண்டுகொள்ளாததே!’ என்பார் கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா. எனவே, நாம் இயேசுவைப் போன்று எல்லார்மீதும் பரிவுகொண்டு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


