#ஜனவரி_14, வரலாற்றில் இன்று.
சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்ற நாள் இன்று.
தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். ஜீவானந்தம் போன்ற பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள், தி.மு.க நிறுவனர் அண்ணா, தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. உள்ளிட்டோர் சங்கரலிங்கனாரின் உயர்ந்த நோக்கத்தை ஆதரித்த அதே வேளையில், சாகும்வரை உண்ணாவிரதம் என்பதை கைவிட வலியுறுத்தினர். எனினும், தனது கொள்கையில் உறுதியாக இருந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த சங்கரலிங்கனார் அக்டோபர் 31ல் உயிர்நீத்தார்.
1957ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க முதல்முறையாக வெற்றி பெற்று, பேரவையில் நுழைந்தபோது தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தியது. பெயர் மாற்றம் செய்வதால், சர்வதேச அளவில் சிக்கல்கள் ஏற்படும் எனக் காரணம் தெரிவித்த,அப்போதைய ஒன்றிய காங்கிரஸ் அரசு அதனை நிறைவேற்றவில்லை. 1967ல் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகுதான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த மண்ணின் பண்பாட்டு அடையாளத்தை உலகெங்கும் உரத்துச் சொல்லும் வகையில்தான் நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. பெயரைக் காப்பாற்றியதுபோலவே மாநிலத்தின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். தமிழகம் என சுருக்கமாகக் குறிப்பிடுவதை இயன்றவரையில் தவிர்த்து, தமிழ்நாடு எனப் பெருமிதத்துடன் குறிப்பிட வேண்டிய கடமையும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது.
தோழர் jp jayaraman பதிவு #lifes #life


