குவைத்தில் நண்பனின் உடலை மருத்துவமனை வாசலில் விட்டுவிட்டு ஓடிய இரண்டு இந்தியர்கள் கைதாகியுள்ளனர்:
குவைத்தில் இரண்டு இந்தியர்கள் தங்கள் நண்பரின் உடலை சிகிச்சைக்காக என்ற போர்வையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து பின்னர் தலைமறைவான வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று(16/01/26) வெள்ளிக்கிழமை முபாரக் அல் கபீர் மருத்துவமனையில் நடந்தது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் அடையாளம் தெரியாத ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்த மற்றொரு நபருடன் மருத்துவமனைக்கு வந்தார். சக்கர நாற்காலியில் இருந்த நபரை வார்டு உதவியாளரிடம் ஒப்படைத்த பிறகு, அடையாளம் தெரியாத நபர் உடனடியாக நோயாளியை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு நைசாக மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியே சென்றார். இதை தொடர்ந்து மருத்துவர் நடத்திய பரிசோதனையில் சக்கர நாற்காலியில் இருந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதை கண்டறிந்தனர்.
இவருடைய மரணத்தை உறுதி செய்த பிறகு, மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறைக்குத் தகவல் அளித்து, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உடலை தடயவியல் பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். பின்னர், உடலை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து வெளியே சென்ற நபரை அடையாளம் காண பாதுகாப்புத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது. மருத்துவமனையின் உள்ளேயும் அதைச் சுற்றியும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் காரில் வந்த இருவரில் ஒருவர் காரில் இருக்க இன்னொரு நபர் இறந்த நபரை சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததை உறுதி செய்தனர்.
பின்னர் தலைமறைவான இரண்டு இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இறந்தவரும் இந்தியர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான சூழ்நிலைகள் மற்றும் உடலை மருத்துவமனையில் விட்டுச் சென்றதற்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இறந்த நபர் விசா காலாவதியான நிலையில் சட்டவிரோதமாக இவர்களுடைய அறையில் தங்கியிருந்த நிலையில் திடீரென உயிரிழந்தார் என்றும், இவருடைய உடலை என்ன செய்வது என்று தெரியாமல், இது தொடர்பாக காவல்நிலையம் செல்லவும் பயந்தும் உடலை தங்களுடைய காரில் எடுத்து வந்து இப்படி செய்ததாக தெரியவந்துள்ளது. இவர்களுடைய இந்த செயல் காரணமாக இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மருத்துவ அறிக்கையில் மரணம் இயற்கையாக நடந்தது என்ற விபரங்களும் வெளியாகியுள்ளன. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️


