ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மீது வெறுப்பை உமிழும் செயல் கண்டிக்கத்தக்கது! - எஸ்டிபிஐ
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் ஆஸ்கர் விருதாளருமான ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் பிபிசி ஏசியன் நெட்வொர்க்கிற்கு அளித்த நேர்காணலில், பாலிவுட் திரைத்துறையில் கடந்த எட்டு ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகார மாற்றம் காரணமாக தனக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும், சில படங்கள் பிரிவினை உணர்வுகளைத் தூண்டும் வகையில் உருவாக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த யதார்த்தமான கருத்து, திரைத்துறையிலும் வெறுப்பு அரசியல் நுழைந்துள்ளதை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.
இத்தகைய கருத்தை வெளியிட்டதற்காக, வலதுசாரி அமைப்புகளும், வட இந்திய ஊடகங்களும், கங்கனா ரணாவத் போன்ற வலதுசாரி திரைத்துறையினரும் அவருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். நாட்டை அவமதித்துவிட்டதாகக் கூறி, வன்மத்தோடு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது.
ஏ.ஆர். ரஹ்மான் இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, உலக இசைக்கான ஒரு அடையாளம். அவரது இசை எல்லைகளைத் தாண்டியது; அரசியல் சுவர்களுக்குள் அடங்காதது. தனது படைப்புகள் மூலம் உலக அளவில் இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையைப் பரப்பியவர் அவர். இத்தகைய மகத்தான கலைஞர் மீது அரசியல் நோக்கங்களால் அழுத்தம் கொடுப்பதும், கருத்து வெளிப்பாட்டில் கட்டுப்படுத்த முயல்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.
நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அனைத்துத் துறைகளிலும் வெறுப்பு அரசியல் வளர்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கள ஆய்வுகளும், புள்ளிவிவரங்களும் அதனை உறுதிப்படுத்துகின்றன. சர்வதேச சமூகமும் இதனை கவலையுடன் வெளிப்படுத்தி வருகிறது. அதனை வெளிப்படுத்தியதற்காக ஏ.ஆர். ரஹ்மான் அவர்களை மதச்சார்பு அடிப்படையில் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவரது இசை இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது; அன்பையும் ஒற்றுமையையும் பரப்புகிறது. இசைத்துறையில் அவரது பங்களிப்புகள் அழியாதவை.
ஒரு கலைஞனின் சுதந்திரத்தைப் பாதிப்பது என்பது நாட்டின் கலாச்சார சுதந்திரத்தையே பாதிப்பதற்குச் சமம். ஏ.ஆர். ரஹ்மான் எந்த ஒரு மதம், இனம் அல்லது மொழிக்கு சொந்தமானவர் அல்ல; அவர் இந்திய மக்களுக்குச் சொந்தமானவர். அவரது மௌனமும் இசையும் கூட நேர்மையான, ஒற்றுமையை வலியுறுத்தும் குரலாக இருந்து வருகிறது.
ஜனநாயகத்தை விரும்பும் இத்தகைய கலைஞர்களை பயமுறுத்தி அடக்க முயலும் மனப்பான்மையை உடனடியாக நிறுத்த வேண்டும். ஜனநாயக நாட்டில் கலைஞர்களுக்கு முழு கருத்து சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். ஆகவே, ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் மீதான வன்மங்களுக்கு எதிராக அவருக்கு ஆதரவாகத் தமிழ் திரை உலகத்தினர் மட்டுமின்றி, அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#📺வைரல் தகவல்🤩 #📷வாட்ஸப் DP #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


