#ஜீவானந்தம்
#நினைவு_நாள்
#ஜனவரி_18
ஜீவா என்கிற தோழர் ப. ஜீவானந்தம் நினைவு நாள் - ஜனவரி 18, 1963. பொதுவுடமை போராளி தோழர் ஜீவா, பொது வாழ்வில் நாற்பது வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைகளையும், சோதனைகளையும் தாங்கிய தியாகி. தன்னுடைய ஆயுள் காலத்தில் பத்து வருடங்கள் சிறையில் கழித்த இவர், காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க பற்றாளராக, பொதுவுடமை இயக்க தலைவராக செயலாற்றியவர். பெரியாரோடு இணைந்து வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு தீண்டாமைக்கு எதிராக போராடியவர் ஜீவா.
எதிரணியில் இருந்தாலும் அனைத்து தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர் ஜீவா. காமராஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நகைச்சுவை மேதை கலைவாணரின் பெருமதிப்பிற்குரியவராக ஜீவா இருந்தார். தலைமறைவு வாழ்க்கையில் ஜீவாவின் பெரும்பகுதி நேரம் கலைவாணரின் பாதுகாப்பில் கழிந்தது.
இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி 'தாமரை' இலக்கிய இதழை தொடங்கினார். 'ஜனசக்தி' நாளிதழையும் தொடங்கினார்.
ஜீவா கலாச்சார அரசியலை பரவலாகப் பிரச்சாரம் செய்தார். தமிழிலக்கியத்தின் அறிஞராக இருந்தார். நல்ல சொற்பொழிவாளராக இருந்தார். அவர் பொதுமக்களுக்காக கதைகள், கட்டுரைகள், கவிதைகள் பெரிய எண்ணிக்கையில் எழுதி இருக்கிறார். ஜீவா கலை இலக்கியப் பெருமன்றத்தினைத் தோற்றுவித்தார். இந்த அமைப்பை முற்போக்கு இலக்கியவாதிகளின் மேடை ஆக்கினார்.
ஜீவாவிற்கு விடுதலைப் போராட்ட வீரர் ஒதுக்கீட்டில் அரசு வீட்டை ஒதுக்கும்படி காமராஜர் உத்தரவிட்டார். ஆனால் ஜீவா அதை ஏற்க மறுத்தார். மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்கு பிடித்தமானவராக இருந்தாலும், துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா. #life #lifes


