ShareChat
click to see wallet page
search
மார்கழி 11 ஆம் நாள். திருப்பாவை 11 – கற்றுக்கறவை. ஸ்ரீமதே இராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து செற்றார் திறலழிய சென்றுசெருச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே போதராய்! சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்! . இந்த பாசுரத்தில் மற்றொரு கோபிகையை எழுப்ப ஆண்டாள் கோபிகைகளுடன் சேர்ந்து செல்கிறாள். இந்த பெண் மிகுந்த செல்வம் படைத்த ஒரு கோபாலனின் பெண். இவர்கள் வீட்டில் கன்றுடன் கூடிய பசுக்கூட்டங்கள் நிறைய இருக்கிறதாம். பசுக்களை எண்ணி சொல்வதிருக்க இவர்கள் வீட்டில் பசுக்கூட்டங்களையே எண்ணிப்பார்க்க முடியாதாம். அவ்வளவு பசுக்கள். கற்றுக்கறவை என்ற பதத்தில் சிறிய கன்றாக இருக்கும்போதே கன்றை ஈன்று பால் சுரக்க ஆர்ம்பித்துவிட்ட பசுக்கள் என்றும் அர்த்தங்களை பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள். . இந்த பெண்ணின் தகப்பனார் இவ்வளவு பசுக்கள் இருக்கிறதே என்று சிறிதும் ஆயாசப்படாமல், தமக்கு தேவையானது போக, மீதமுள்ள பசுக்களையும் அவைகள் மடியில் பால் கட்டி துன்பப்படாமல் இருப்பதற்காகப் பாலை கறந்து விடுவாராம். அதோடு மட்டும் அல்ல… அவர் இந்த திருவாய்ப்பாடிக்கும் கண்ணனுக்கும் எதிரிகளாயிருப்பவர்களை அவர்கள் பலத்தை அழித்து அவர்களை குன்றிப்போக செய்து விடுவாராம். அத்தகைய எதிரிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களை அடக்கிவிடுவாராம். தானுண்டு தன் வேலையுண்டு என்று பால் கறக்கும் இடையருக்கு ஏது எதிரி என்றால் – கண்ணனுக்கு யார் எதிரியோ அவர்களே இவர்களுக்கும் எதிரிகள். கண்ணனுக்கு என்ன ஒரு எதிரியா.. இரண்டு எதிரியா.. எவ்வளவோ அசுரர்கள் – அதனால் இன்னார் என்று சொல்லாமல் செற்றார் என்று பொதுவாகச் சொல்கிறாள் ஆண்டாள். . இந்த கோபாலர் தம் கடமையில் கர்ம யோகியைப்போல் கண்ணாயிருப்பார். வர்ணாச்ரம தர்மங்களை கடைபிடிப்பவர். நல்ல அனுஷ்டானத்தைக் கொண்டவர். கண்ணனுக்கு எதிரிகள் இருப்பரேல் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று அவர்களுடன் போரிடக்கூடியவாராய் பலமும் தைரியமும் மிகுந்தவர். அதோடு எதிரிகள் திறலழிந்தபின் – அதாவது அவர்கள் கையில் ஆயுதத்தை இழந்து நிராயுதபாணிகளாக நின்றுவிட்டால் அவர்களை எதுவும் செய்வதில்லை. திறன் இருக்கிற எதிரியுடன் மோதி அவன் திறனை அழிக்ககூடிய சாமர்த்தியம் உள்ளவர். ஞான பல ஐஸ்வர்ய சித்திகளை பெற்றவர். அப்படிப்பட்ட குற்றமே இல்லாத கோவலர் – இடையர் வீட்டில் பொற்கொடியாக பிறந்தவளே! என்று அழைக்கிறாள் ஆண்டாள். . அடுத்து புற்றரவல்குல் புனமயிலே! போதராய்! என்கிறாள். ‘எவ்வளவு அழகான பெண் நீ!’. பாம்பு நுழையும் புற்றைப்போல இடையை உடைய பெண்ணே! வியாக்கியானத்தில் ‘புறம்பே புறப்பட்டு புழுதியடைந்த உடம்பன்றிக்கே தன்னிலத்திலே வர்த்திக்கிற ஸர்ப்பத்தினுடைய பணமும் கழுத்தும் போலே ஒளியையும் அகலத்தையும் உடைய நிதம்ப ப்ரதேசத்தை உடையவளே’ என்று பூர்வாசார்யர் அருளியிருக்கிறார். . பூர்வசார்யர்கள் ஸ்வாபதேசமாக சில குறியீடுகளை விளக்கியிருக்கிறார்கள் – அதாவது திருப்பாவையில் இடையை குறிப்பிடும் இடங்கள் வைராக்கியத்தை குறிக்கும் – இடை சிறுத்து இருப்பது போல் ஆசை சிறுத்து வைராக்கியம் வந்த நிலை – மார்பை குறிப்பிடும் போது பக்தியை குறிக்கும் – மார்பகங்கள் பெற்ற குழந்தைகளுக்கு உயிர் ஊட்டவும், கணவனுக்கு இன்பத்தை தருவதாகவும் தனக்கன்றி தன் குழந்தைகளுக்கும், கணவனுக்கும் என இருப்பதால், தனக்கன்றி தெய்வத்துக்காகவே வெளிப்படும் அன்பை – பக்தியை குறிக்கும். சிரசை, கண்களை சொல்லும்போது ஞானத்தை குறிக்கும் என்று விளக்கங்கள் சொல்வர். . இந்த பெண்ணுக்கு மயில் தோகையைப்போன்ற விரிந்த அளகபாரம் – விரிந்த கூந்தல் உண்டாம். இவள் கண்ணனுக்கு மிகவும் அணுக்கமானவள் – ப்ரியமானவள். தேசமுடயாய் என்று வேறொரு கோபிகையை சொன்னாளே அதைப்போல் இவளது பக்தி உள்ளார்ந்த தானே சுடர்விடக்கூடியது என்று குறிப்பால் உணர்த்துகிறாள். பொற்கொடி, புனமயில் என்று சொல்லுவதெல்லாம், இவள் மெல்லிய இயல்பை உடையவள், கொழுகொம்பின்றி கொடி வாடியிருப்பது போலே க்ருஷ்ணன் இல்லாமல் இவள் வாடுகிறாள். க்ருஷ்ணனை அண்டியே உஜ்ஜீவனம் செய்யும் பரதந்த்ரை இவள் என்று உணர்த்துவதற்காக ஆண்டாள் சொல்கிறாள். . அடுத்து, இந்த திருவாய்ப்பாடி முழுவதும் உள்ள கோபிகைகள் அனைவரும் பந்துக்கள் – பாகவத சம்பந்தம் உடையவர்கள். அப்படி உன் சுற்றமான தோழிமார் எல்லாரும் உன் முற்றத்தில் வந்து நின்று முகில் வண்ணனான கண்ணனின் பெயரைப் பாடுகிறோம். உன் வீட்டு முற்றம் கண்ணனுக்கு உகப்பானது. அதனால் எங்களுக்கு வந்து அங்கே நின்று அவன் பேர்பாடுவதில் ஒரு ஆனந்தம். நாங்கள் இங்கே உரக்க அவன் பேரை பாடிக்கொண்டிருக்க, நீ இடத்தை விட்டு நகராமல், பேசாமல், செல்வம் நிறைந்த பிராட்டியாக இருக்கிறாயே! இது பாகவதர்களுக்கான லக்ஷணமா? உன் உறக்கத்திற்கு அர்த்தம் என்ன? என்று கேட்டு அவளை ஆண்டாள் எழுப்ப அவளும் எழுந்து மற்ற பாகவத பெண்பிள்ளைகளுடன் சேர்ந்தாள். ஸ்ரீஆண்டாள் திருவடிகளே ஸரணம். ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம். #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் #திருப்பாவை & திருவெம்பாவை #அ. ம. மு. க #திருப்பாவை
🙏🏻ஆண்டாள் பாடல்கள் - Sri Krishna Anubava Prachar Saba திருப்பாவை 11 UKD தமிழ் கோதை Phplogry)er CounesyAo Aisr கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்றுசெருச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடிய! புற்றர வல்குல் புனமயிலே போதராய்ப SKAPS நின் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டீ b எற்றுக் குறங்கும் பொருளேலோர் எம்பாவாய் Sri Krishna Anubava Prachar Saba திருப்பாவை 11 UKD தமிழ் கோதை Phplogry)er CounesyAo Aisr கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்றுசெருச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடிய! புற்றர வல்குல் புனமயிலே போதராய்ப SKAPS நின் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டீ b எற்றுக் குறங்கும் பொருளேலோர் எம்பாவாய் - ShareChat