#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
டிசம்பர் 07, 1930*
உலகின் முதல் தொலைக்காட்சி விளம்பரம், அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்த, சோதனை ஒளிபரப்பு நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்ட நாள்.
சிபிஎஸ் வானொலி நிறுவனத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட ஃபாக்ஸ் ட்ராப்பர்ஸ் இசை நிகழ்ச்சியின் ஒளிப்பதிவின் ஒரு பகுதியை ஒளிபரப்பும் செலவினை ஏற்ற (ஸ்பான்சர்) ஐ.ஜே.ஃபாக்ஸ் ஃபர்ரியர்ஸ் என்ற நிறுவனத்தின் இவ்விளம்பரத்தை, சோதனை ஒளிபரப்பில் ஒளிபரப்பியதற்காகவும், வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பியதற்காகவும் இந்நிலையத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்குப் பத்தாண்டுகள் கழித்தே, 1941 ஜூலை 01ல், அரசு அனுமதியுடன் தொலைக்காட்சி விளம்பரம் ஒளிபரப்பப்பட்டதால், அது முதல் விளம்பரமாகக் குறிப்பிடப்படுவதுண்டு.
விளம்பரம் என்பது இன்றைக்குச் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. அக்காலத்திலேயே, எகிப்தியர்கள் விற்பனைக்குப் பொருட்களிருப்பதை பேப்பிரஸ் தாளில் எழுதிவைத்தனர். கி.மு.11ம் நூற்றாண்டுக்கும் முன்னரே, சீனாவில் மிட்டாய் விற்க குழலூதியதே உலகின் முதல் ஒலி விளம்பரமாகும்.


