ShareChat
click to see wallet page
search
அறிக்கை: *முதுநிலை ஆசிரியர் தேர்வெழுதிய 85000 பேர் தமிழ் மொழிப் பாடத்தில் 20 மதிப்பெண்கூட எடுக்க முடியாமல் தோல்வி அடைந்திருப்பதுதான், 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழை வளர்த்த முறையா? - சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் கடந்த 12.10.2025 அன்று 1,996 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நடத்திய பணித்தேர்வில் கலந்துகொண்டு தேர்வெழுதிய 2,36,000 பேரில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கின்றது. தேர்வு எழுதிய மூன்றில் இரண்டு பங்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தாய்த்தமிழ் சரிவர தெரியாமலே பட்டம் பெற்றுள்ளனர் என்பதுதான் மிகப்பெரும் கொடுமையாகும். தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் தமிழ்மொழி தெரியாத பிற மாநிலத்தவர் பல்லாயிரக் கணக்கில் பணியில் சேர்ந்ததால் எளிய தமிழ் மக்கள் தங்கள் வாழ்வாதார சிக்கல்களை முறையிட்டு தீர்க்க முடியாத மிக மோசமான அவலநிலை பல ஆண்டுகளாக நிலவியது. அதனை மாற்றும் விதமாக கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அரசுப்பணியில் சேர்பவர்களுக்கு கட்டாயம் தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ் மொழித் தேர்வில் உள்ள மொத்தம் 50 மதிப்பெண்களில், குறைந்தப்பட்சம் 20 மதிப்பெண்கள் எடுத்து வெற்றிப்பெற்றால் மட்டுமே அவர்களின் பாடம் சார்ந்த விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அவ்விதியின் மூலம் தமிழ்நாட்டில் தாய்த்தமிழ் மொழி எந்த அளவிற்கு தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு தலைமுறையினர் தாய்த்தமிழ் மொழி தெரியாமலே பட்டம் பெற முடியும் என்ற மோசமான நிலையை உருவாக்கியதுதான் 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியின் சாதனையாகும். உயிரினும் மேலான தாய்த்தமிழ் மொழியைகூட முறையாக கற்பிக்க முடியாத கல்விமுறை திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து திணிக்கப்பட்டு வருவது பெருங்கொடுமையாகும். இதுதான் திராவிடம் தமிழை வளர்த்த முறையா? தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் அன்னை தமிழ்மொழி வழிபாட்டு மொழியாகவும் இல்லை. வழக்காடு மொழியாகவும் இல்லை. பண்பாட்டு மொழியாகவும் இல்லை. பயன்பாட்டு மொழியாகவும் இல்லை. ஆட்சி மொழியாகவும் இல்லை. பேச்சு மொழியாகவும் இல்லை. தாய் தமிழ் மொழியானது தமிழ்த்தெருக்களில் மட்டுமல்ல கல்வி நிலையங்களில், வழிபாட்டுத்தலங்களில், அரசு அலுவலகங்களில், வணிக நிறுவன பெயர்ப்பலகைகளில், நீதிமன்றங்களில் என எங்கும் தமிழ் மொழிக்கு இடமில்லை. அதன் உச்சமாக இளைய தலைமுறை பிள்ளைகளின் இதய சுவரிலிருந்தும், அறிவுத் திறனிலிருந்தும் அன்னைத் தமிழ்மொழி முற்றாக அகற்றப்பட்டுள்ளது பெருங்கொடுமையாகும். தமிழர்களின் பெருத்த தாய்நிலமான தமிழ்நாட்டிலேயே உயிருக்கும் மேலான நம் தாய்மொழிக்கு இடமில்லாத நிலை என்பது வரலாற்றுப் பெருந்துயரமாகும். தமிழ், தமிழர் எனக் கூறி ஆட்சி அதிகாரத்தை அடைந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சி காலங்களில்தான் தமிழ்மொழி முற்று முழுதாகச் சிதைத்து அழிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுதான் முதுநிலை ஆசிரியர் தேர்வெழுதிய 85000 பேர் தற்போது தோல்வி அடைந்திருப்பதாகும். இதன் மூலம் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற வசனங்கள் எல்லாம் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்லப்படும் திமுகவின் தேர்தல் கால வெற்று முழக்கங்கள் என்பது மீண்டும் உறுதியாகிறது. ‘ஒரு இனத்தை அழிப்பதற்கு, அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதுமானது’ என்கிறார் மொழியியல் ஆய்வறிஞர் ஐயா தேவநேய பாவாணர் அவர்கள். அப்படி நம் தாய்மொழியான தமிழ்மொழியை சிறிது சிறிதாக திட்டமிட்டு அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் தமிழ்நாட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் தமிழ் மொழிக்கான இடம் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டதும், அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டதும் ஆகும். அதன் மூலம் தமிழ்மொழியை கற்காமலேயே கல்லூரி கல்வி முடித்து பட்டம் பெறமுடியும் என்ற அவலநிலையை உருவாக்கியுள்ளது அக்கொடுமைகளின் உச்சமாகும். இது முழுக்க முழுக்க திராவிட கட்சிகள் கடந்த அரை நூற்றாண்டாக மேற்கொண்ட மறைமுக தமிழின அழிப்பாகும். ஆகவே, ‘தமிழ் வாழ்க’ என்று அரசு கட்டிடங்களில் எழுதி வைத்தால் மட்டும் தமிழ்மொழி வாழாது, வளராது என்பதை தமிழ்நாடு அரசு இனியாவது உணர்ந்து, தமிழ்நாட்டில் தாய்த் தமிழ்மொழியை வளர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக தாய்மொழி வழிக்கல்விக்கு முதன்மையான முக்கியத்துவம் அளிப்பதோடு, தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அது எவ்வகை பாடத்திட்டம் என்றாலும் தமிழ்மொழி பாடம் கட்டாயம் கற்பிக்கப்படுவதையும், தமிழ் மொழித்தேர்வில் மாணவச்செல்வங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிப்பெறுவதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் தமிழர்கள் தாய் தமிழ்மொழியில் முறையாக எழுதவோ, படிக்கவோ தெரியாமல் பட்டம் பெற முடியும் என்ற அவல நிலையை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாக இல்லாதொழிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். https://x.com/Seeman4TN/status/1995485816500687318?s=20 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #செஞ்சிக்கோட்டை #கோனேரிக்கோன்_கோட்டை #GINGEE_ NTK #gingee-ntk #SEEMAN4TN #NTK4TN - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat