தெவிட்டாத விட்டலா - 8
சேட்டு வந்தார்
🌼🌼🌼🌼🌼🌼🌼
ஒருவரது வாழ்க்கை மற்றவர்களால் நினைவு கூறப்படுகிறது என்பது எதனால்? அவரிடம் எல்லோரும் போல் அல்லாது ஏதோ ஒரு சிறப்பு தன்மை இருந்து அது அவரால் வெளிப்படுத்தப் படுவதால் தானே?! அது பணத்தால், அழகால், எளிமையால், த்யாகத்தால் என்றெல்லாம் பலவகைப் படலாம்.
நாமதேவர் வாழ்க்கை நம்மால் சிறப்பாக நினைக்கப் படுவது அவரது எளிமையான, பரிசுத்தமான, சிம்பிள், பக்தியினால் தான். உள்ளத்தை கபடு இன்றி பரிசுத்தமான பீடமாக மாற்றி அதில் விட்டலனை பரிபூர்ணமாக ஏந்தி, தோழனாக, ஆசானாக, சகலமும் நீயே என்ற சரணாகதித்வமுடன் வாழ்ந்த தன்மையால் தான். சரி, கதைக்கு வருவோம்.
நாமதேவர் இப்போது இளைஞர். ராஜாய் அவர் மனைவியானாள். கல்யாணமாகி விட்டதால் அவர் ஒன்றும் மாறிவிடவில்லை. 24 மணி நேரமும் பாண்டுரங்கன்தான், அவன் கோவில் தான், அவன் பக்தர்கள் கூட்டம்தான். நாம சங்கீர்த்தனம் ஒன்றே மூச்சு. அவருக்கு ஒரு மகன். நாராயணன் என்று பேர். வருமானம் ஈட்டிக் கொண்டிருந்த அப்பா தாமாஜி காலமாகி விட்டதால் அம்மா கோனை, மனைவி, குழந்தை ஆகியோரும் நாமதேவரின் வருமானத்தையே நம்பி வாழ்ந்த போதிலும் நாமதேவர் இதெல்லாம் பற்றி ஸ்மரணையே இல்லாமல் இருந்தாரே!! உடுக்க உடையோ ஒருவேளை உணவோ கூட இல்லாத நிலைமை. மனைவி ராஜாய் அவர் தாய் கோனை அனைவரும் வருந்தி
"விட்டலா, நீயாவது எதாவது செய்யேன். நாமதேவரைக் கொஞ்சம் எங்களைப் பற்றியும் நினைக்கச் செய்யேன் வேறே கதியின்றி நிற்கிறோமே" என்று அழுதனர்.
ரெண்டு மூணு நாள் கழித்து பண்டரிபுரத்துக்கு ஒரு வேற்று ஊர்க்காரர் வந்தார். அவர் பெயர் கேஷவ் சேத். பணக்கார சேட்டு. விட்டலன் கோயில் சென்று பார்த்து விட்டு நாமதேவர் வீட்டுக்கு வந்தார். வீட்டில் ராஜாய் மட்டும் தான் இருந்தாள்.
"இது தானே அம்மா நாமதேவர் வீடு?
"ஆம். ஆனால் அவர் இல்லையே" நீங்கள் யார்?
"நான் அவர் நண்பன். கேசவ் சேத். அவரைத்தான் பார்க்க வந்தேன்"
"சாயந்திரமாக வந்தால் அவரை பார்க்கலாம்"
"ஏதாவது சாப்பிட இருக்கிறதா?"
"அய்யா, எங்களுக்கே ஆகாரத்துக்கு வழியில்லை. நாமதேவர் ஊரிலுள்ள சாதுக்களை அழைத்து வந்து உணவு கேட்கும் போது என்ன செய்வது என்பதே கவலையா யிருக்கிறதே"
"அம்மா இது விஷயமாகத்தான் நான் அவரைப் பார்க்க வந்தேன். அவருக்கு ஊரெல்லாம் கடன் இருக்கிறது. கடனுக்கு சாமான் வாங்கி உணவு படைத்து சாதுக்களை திருப்தி படுத்துகிறார் ஆனால் வீட்டிலிருப்பவர்களின் ஞாபகம் கூட கிடையாது என்று கேள்விப்பட்டேன்.
அதனாலேயே அவருக்கு உபயோகமாயிருக்கட்டும் என்று இந்த பை நிறைய தங்கக் காசுகள் கொண்டுவந்தேன். இந்தாருங்கள் இதை அவரிடம் சேர்ப்பியுங்கள்". பை கை மாறியது.
"உள்ளே வாருங்கள் தீர்த்தமாவது சாப்பிடுங்கள்."
"பரவாயில்லை அம்மா. நான் வருகிறேன்" சேட்டு நகர்ந்தார்
நாமதேவரின் தாய் கோனை எங்கோ சென்று கொஞ்சம் அரிசி பருப்பு கடன் வாங்க சென்றவள் அது கிடைக்காமல் வருத்ததோடு விட்டலன் ஆலயம் சென்று கண்களில் நீர் பெருக குமுறினாள்:
"விட்டலா, இன்னும் எத்தனை நாள் எங்களை இப்படி வாட்டி வதைக்கப் போகிறாய்?"
அங்கே அமர்ந்து பக்தர்களோடு பாடிக் களித்துகொண்டிருந்த நாமதேவைச் சபித்து வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தாள்.
வீட்டு வாசலிலேயே உள்ளிருந்து கமகமென்று மணம் மிக்க உணவுப் பண்டங்களின் வாசனை. குழந்தையும் ராஜாயியும் நல்ல உடை அணிந்திருந்தனர். அவர்கள் மேல் நகை ஆபரணங்களும் மின்னிற்று.
இதை கவனித்த நாமதேவர் "எதற்கு இந்த வழக்கமில்லாத பகட்டும் ஆடம்பரமும்'' என்று வருந்தினார்
"ஏது இதெல்லாம்? என்று கேட்டபோது "எனக்கு ஒன்றுமே தெரியவில்லை" என்றாள் தாய்.
ராஜாய் பதிலே பேசவில்லை. அவள் அவரோடு பேசியே எத்தனையோ காலம் ஆச்சே!! . வீட்டில் உதவி செய்துகொண்டிருந்த ஜானி என்ற பணியாளன் விவரம் எல்லாம் சொன்னான்
"விட்டலா, ஏன் என்னை மாற்றிவிட சோதனை செய்கிறாய்? . நீ கொண்டு வந்ததெல்லாம் உன் பக்தர்களுக்கல்லவோ போய் சேரவேண்டும் என்று அனைத்து பொருள்களையும் ஆலயத்துக்கு எடுத்து சென்று எல்லாருக்குமாக தானம் செய்தவர் நாமதேவர்.
இப்படி ஒருவரை நாம் பார்க்கமுடியுமா?
முடியுமே, யார் யார் எல்லாம்? என்று வரும் கதைகளே சொல்லட்டும்.
இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #ஆன்மீக கதைகள் #பக்தி கதைகள் #புராண கதைகள்