ShareChat
click to see wallet page
search
தலைவர் பிறந்த நாள்! தமிழர் எழுச்சி நாள்! இந்த உலகத்தின் மூத்த இனமான தமிழர் என்ற தேசிய இனத்திற்கென தனித்துவமான வரலாற்றுப் பெருமிதங்கள் பல இருந்தாலும், இருப்பதிலேயே மாபெரும் பெருமை எம் தலைவர் , என்னுயிர் அண்ணன், மேதகு வே பிரபாகரன் அவர்களை‌ தன் மகனாக தமிழன்னை ஈன்றெடுத்தது தான். காலத்தின் போக்கில் அடிமைப்படுத்தப்பட்டு வீழ்த்தப்பட்ட அன்னைத் தமிழினம், தான் பெற்றெடுத்த மகனால் தலை நிமிர்ந்ததுதான் நம் இனத்தின் வரலாறு. வீழ்த்தப்பட்ட தமிழ்த்தேசிய இனம் மீண்டும் நிமிர்ந்து எழுந்த நன்னாள். நம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் பிறந்த பொன்னாள் இன்று! இந்த உலகம் முழுக்க பரந்து வாழும் 12 கோடி தமிழ்த்தேசிய மக்களின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முகமாக, முகவரியாக விளங்குகிற நமது தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 71 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் எனது உயிருக்கினிய தாய்த்தமிழ்ச் சொந்தங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்.! உலகில் தோன்றிய சில மகத்தானவர்களின் வாழ்க்கை வரலாறே உலக வரலாறு’ என்கிறார் புரட்சியாளர் லெனின்.ஒவ்வொரு தேசிய இனமும் தனது மொழி, நிலம், பண்பாடு, இறையாண்மை ஆகியவற்றைக் காப்பாற்ற தொடர்ந்து போராடி வருகின்றன. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய உலகின் மூத்த குடியான தமிழ்த்தேசியப் பேரினமும் பன்னெடுங்காலமாக தன்னுடைய தனித்துவமிக்க மொழி, நிலம், பண்பாட்டு அடையாளங்களைக் காத்துக்கொள்ள வரலாற்றின் வீதிகளில் நின்று போர் புரிந்து வருகிறது. தமிழினத்தின் இருபெரும் தாய் நிலங்களான தமிழ்நாடும், தமிழீழமும், ஆர்ப்பரிக்கும் அலை கடலால் பிரிந்து இருந்தாலும், அன்னைத் தமிழ் மொழியின் பிள்ளைகள் என்கின்ற உறவால், குருதி முழுவதும் நிறைந்திருக்கின்ற மரபணுக்களின் ஒத்திசைவு உணர்வால், ஒற்றைத்தேசிய இனத்தின் மக்களாகவே தமிழர்கள் நாம் வாழ்கின்றோம். தொன்மை மிக்க பண்பாடு, நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி, எக்காலம் தோன்றியது என அறிய முடியாத இலக்கண, இலக்கியச் செழுமை மிக்கத் தாய்மொழி என்ற அளப்பரிய சிறப்புகள் தமிழினத்திற்கு இருந்தாலும், சகல விதமான உரிமைகள் மற்றும் இறையாண்மையுடன் கூடிய ஒரு தேசம் இல்லையே என்ற பெரும் தவிப்பு ‌ தமிழர் மனதிற்குள் நெருப்பாய் கனன்று கொண்டிருக்கிறது. தமிழர்களின் பூர்வீக நிலங்களில் ஒன்றான ஈழத்தாயகத்தில், வந்து குடியேறிய சிங்கள இனவெறி ஆட்சியாளர்களால் உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு, பூர்வக் குடி தமிழினம் அடிமைப்படுத்தப்பட்டபோது, அறவழியில் போராடிய அரசியல் தலைவர்கள் மீதும் அடக்குமுறைகள் ஏவி, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அக்கொடுமைகளுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்படி போராடத் துணிந்தவர்களும் வல்லாதிக்க நாடுகளின் வட்டார அரசியல் சூழ்ச்சிக்கு இரையாகி விலைபோனபோது, இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்ற லட்சியத்தை தன் ஆன்மாவில் பதித்துக் கொண்டு, தலையே போனாலும் விடுதலை போராட்டத்தை விட்டுத்தரமாட்டேன், உயிரே போனாலும் ,உன்னத இலட்சிய வேட்கையைக் கைவிடமாட்டேன் என்று சமரசமற்று களத்தில் நின்று சாதித்த சரித்திர நாயகர்தான் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அடிமை வாழ்வினும் உரிமைச் சாவு மேலானது என்ற இலட்சிய உறுதியுடன் இனவிடுதலை கனவினை நிறைவேற்றிட காலம் தந்த கரிகாலனாக, மறம் பேசியக் களத்தில், அறம் பேசி நின்ற சான்றோனாக தமிழ்த்தேசியத் தலைவர் அவர்கள் திகழ்கிறார்கள். பெருமைகளும், பெருமிதங்களும் பொங்கி நிறைந்து பூரித்து நிற்கிற தமிழர் இன வரலாற்றில், மாபெரும் வீரத்துடன் வேலெடுத்து பாய்ந்த முருகன் முதலாக, வாளெடுத்து சுழன்ற மூவேந்தர்கள் என காலப் பெருமையின் நீண்டு துலங்கும் பட்டியலில் மிளிர்ந்து சுடர்கின்ற அழல் ஞாயிறாய் இனத்தின் விடுதலை காக்க இன்முகத்தோடு களத்தில் நின்ற மாவீரன் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். ஓங்கி உயர்ந்த உயர் குணத்தால், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறையினால், எவர் உதவியும் இன்றி தன் சொந்த மக்களையே படையாக கட்டி, தான் பிறந்த தாய் மண்ணிலேயே நின்று போராடிய பெருமாவீரன் என்பதால் இதுவரை உலகில் தோன்றிய புரட்சியாளர்களில் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதன்மையானவர். படையின் எண்ணிக்கையில் வெற்றியல்ல; எண்ணத்தில்தான் வெற்றி என்பதை தம் ஈடு இணையற்ற போராட்ட வரலாற்றால் உலகிற்கு எடுத்துச் சொல்லி, எதிரியாலும் குற்றம் சொல்ல முடியாத அப்பழுக்கற்ற, வீரக்காவியமாகத் திகழும் தலைவர் பிரபாகரன் அவர்கள் கட்டமைத்த ஈழ சோசலிசக் குடியரசுதான், இதுவரை தோன்றிய உலக நாடுகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக மது, புகை, ஊழலற்ற, பெண்கள் பாதுகாப்பு, மக்கள் நலன் பேணுகின்ற, மொழி, பண்பாட்டு அடையாளங்களைப் போற்றி வளர்க்கின்ற, சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தத் தீங்கும் செய்யாத, தாய்மைப் பொருளாதாரத்தைப் போற்றி வளர்த்த ஒரு பொதுமை அரசாக வரலாற்றில் திகழ்ந்தது. ஒரு மக்கள் தலைவனின் வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் எளிய வாழ்க்கை வாழ்ந்து, இறுதிவரை மக்களின் விடுதலைக்காகக் களத்திலே நின்று, எதிர்த்து நின்ற எதிரியைக்கூட உளப்பூர்வமாக வென்றுக் காட்டிய பெருந்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். ஈராயிரம் ஆண்டில் எவரும் கண்டிடா போராயிரம் கண்ட பேரினப் பெருமகன், சீராயிரம் கண்ட செந்தமிழ் மரபினன் தேராயிரம் பூட்டி திருவென்று வந்த பெருவீரன், உயிரினும் மேலான நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கரங்களில் இருந்த நம் ஈழத்தாயகத்தின் விடுதலைப் போராட்டம் இன்று உலகத் தமிழர்களின் தோள்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இப்பூமிப்பந்தில் இறுதித்தமிழன் இருக்கும்வரை, தாயக விடுதலைக்காக, இலட்சிய வேட்கையை இறுதிவரை ஏந்தி நிற்க வேண்டும் என்பதே நம் சத்தியத்தலைவரின் சாதனை வாழ்க்கையிலிருந்து நாம் எடுத்துக் கொள்கிற தத்துவமாக இருக்கிறது. என்ன நிகழ்ந்தாலும், எத்தனை காலம் ஆனாலும், மன உறுதி குலையாமல், விடுதலை நோக்கம் சிதையாமல், தமிழீழ விடுதலைப்பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதுதான், நம்முயிர் தலைவர் மீதான நமது ஆழ்ந்த பற்றுறுதியை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரே வழி என்பதை அவர் பிறந்த இந்நாளில், நாம் உணர வேண்டும். தமிழீழம் என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல, அது உலகமெங்கும் வாழக்கூடிய 12 கோடி தேசிய இனத்தின் பெருங்கனவு என்பதை உணர்ந்து அதை வென்றெடுக்க தலைவர் பிறந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும். உலகெங்கும் வாழ்கின்ற எம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு நம் தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 71 ஆவது அகவை நாளில் தமிழர் எழுச்சி நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! #தமிழினத்தலைவர்71 #TamilsLeaderPrabhakaran https://x.com/Seeman4TN/status/1993521562079871346?s=19 #GINGEE_ NTK #gingee-ntk #செஞ்சிக்கோட்டை #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #கோனேரிக்கோன்_கோட்டை #SEEMAN4TN #NTK4TN - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
GINGEE_ NTK #gingee-ntk - ShareChat
00:28