மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றப்பட்டு வந்த நிலையில், மலையில் உள்ள நில எல்லைத் தூணில் கார்த்திகைத் தீபம் ஏற்றுவதற்காக சங்கபரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அவர்கள் அதற்கு அனுமதி வழங்கினார்.
இந்தத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய தமிழக அரசு, தனக்குரிய சட்ட வழியின் அடிப்படையில் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. ஏனெனில், இதற்கு முன்பு இரண்டு முறை இரு நீதிபதிகள் அமர்வால் இதே போன்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவு சட்டரீதியாக ஏற்புடையதல்ல என்ற கோணத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கிடையில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் நீதிமன்றப் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட மத்தியப் பாதுகாப்புப் படையினரின் துணையுடன் மனுதாரர்களை அந்த இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
ஏற்கெனவே திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் கோயில் நிர்வாகத்தால் கார்த்திகைத் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களும் அதனைத் தரிசனம் செய்து வழிபட்டுவிட்ட நிலையில், நீதிபதியின் இந்த உத்தரவு அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது நீதித்துறைக்கு ஏற்புடையதல்ல. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய நீதித்துறை, சட்டம் ஒழுங்கு கெடும் வகையில் நடந்துகொள்வது கவலையளிக்கிறது. இவ்விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக காவல்துறையின் நடவடிக்கை, மற்றும் சட்ட ரீதியிலான தமிழக அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் 219-வது பிரிவு மற்றும் மூன்றாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பு உறுதிமொழியை முழுமையாக மீறியுள்ளார். திருப்பரங்குன்றம் மலைகளைச் சுற்றியுள்ள தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவரது தன்னிச்சையான மற்றும் சட்டவிரோத உத்தரவுதான் என்பது வெளிப்படையாகி உள்ளது.
உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பணியில் இருக்கும் சிஐஎஸ்எஃப் பணியாளர்களை வேறு எந்த நோக்கத்திற்கும் பணி ஒதுக்கீடு செய்வது முகாந்திரத்தில் சட்டவிரோதமானது மற்றும் நீதித்துறை அதிகாரத்தின் பகிரங்க துஷ்பிரயோகமாகும்.
ஆகவே, நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் நீதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டு வர வேண்டும். மத்தியப் பாதுகாப்புப் படைகளை அனுப்பி தமிழகத்தின் சுயாட்சியைக் கேள்விக்குள்ளாக்கிய இந்நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-நெல்லை முபாரக் #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📷வாட்ஸப் DP #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴


