@inctamilnadu
@inctamilnadu

Indian National Congress - Tam

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ விவாத பகிர்வு பக்கம்

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 40 நாட்களாக மக்கள் ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு தமது வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் நோக்கத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி அரசாணை வெளியிட்டிருப்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுகிற செயலாகும். இதனால் பெட்ரோல் விலையில் ரூ.3.25, டீசல் விலையில் ரூ. 2.50 விலை நாளைமுதல் உயர்த்தப்பட இருக்கிறது. இதனால் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டு அனைத்து பொருட்களின் விலையும் உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இது சாதாரண ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடியதாகும். எனவே மதிப்பு கூட்டு வரி உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்பபெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோல 2020 ஜனவரியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 66 டாலராக இருந்தது தற்போது 16 டாலராக குறைந்திருக்கிறது. இந்த விலை சரிவை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு மத்திய பாஜக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக கடந்த 6 ஆண்டில் 12 முறை பெட்ரோல் டீசல் மீதான காலால் வரியை உயர்த்தி ரூ. 20 லட்சம் கோடி வருவாயை பெருக்கியிருக்கிறது. இந்த வகையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை மக்களை பாதிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இதன்மூலம் மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத அரசுகள் என்று கூறுவதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை. - திரு. கே.எஸ். அழகிரி, தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி #📰தமிழ்நாடு அரசியல்
அமெரிக்க இதுவரை 17 லட்சம் சோதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. இதன்மூலம் 10 லட்சம் மக்களில் 5355 பேருக்கு சோதனை செய்கிற வசதிகளை பெற்றிருக்கிறது. அதேபோல 10 லட்சம் மக்களுக்கு நார்வே 19528, சுவிட்சர்லாந்து 18256, இத்தாலி 11436, ஸ்பெயின் 7600 என்கிற வகையில் சோதனைகளை செய்து வருகிறது. ஆனால் இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 93 பேருக்குத்தான் சோதனை செய்கிற வசதிகள் உள்ளன. இந்த வகையில் இதுவரை இந்தியாவில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தான் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் 277 சோதனை ஆய்வகங்களை வைத்துக்கொண்டு கொரோனா நோயை கண்டறிய முடியாமல் மத்திய அரசு விழி பிதுங்கி நிற்கிறது. கொரோனா நோயை கண்டறிய சோதனை செய்யாமலேயே 38 நாட்கள் மக்கள் ஊரடங்கு முடிந்துவிட்டது. இன்னும் எத்தனை நாள்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்போகிறதோ தெரியவில்லை. கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 38 நாட்களாக வேலையை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, உணவுக்கு கையேந்தி ஒவ்வொரு நாளையும் ஒரு யுகமாக கடத்திக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கு, இதுபோன்ற முறைகேடுகள் அநீதி இழைப்பதாக அமையாதா? கை தட்டச் சொன்னீர்கள் தட்டினோம். விளக்கேற்றச் சொன்னீர்கள் ஏற்றினோம். இது போன்ற முறைகேடுகளால், உலகமே கை தட்டி சிரிக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதை வேதனையுடன் வேண்டுகோளாக வைக்கின்றேன்.- திரு. கே.எஸ். அழகிரி, தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி #😷கொரோனா விழிப்புணர்வு
ஊரடங்கால் வேலை இழந்த தொழிலாளர்கள், நிர்வாக பணியாளர்கள் உள்ளிட்ட உழைத்து வாழும் மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. எனவே தொழிலாளர்களின் நிலையை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் சிந்தும் கண்ணீருக்கு விடை தரும் வகையில் மே 1 ஆம் தேதி அமைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். - திரு. கே.எஸ். அழகிரி, தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி #💐வாழ்த்து #INCTamilNadu
ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளின் தவறுகளை சுட்டிக் காட்டவும், விமர்சிக்கவும் அரசியல் சாசனம் நமக்கு கருத்துரிமை, பேச்சுரிமை வழங்கியுள்ளது. சுகாதாரத் துறை செயலாளர் செய்தியாளர் சந்திப்பில் பேசியது அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. அதனை ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவது எப்படி குற்றமாகும் என்பது தெரியவில்லை. கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் தமிழக அரசை விமர்சித்த பலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சைபர் கிரைம் காவல் துறையினரின் செயல் கருத்துச் சுதந்திரத்துக்கும், ஊடகச் சுதந்திரத்துக்கும் எதிரானது. இதுபோன்ற வழக்குகள் மூலம் அரசுக்கு எதிரான சிறு எதிர்ப்புக்குரலைக் கூட அதிமுக அரசு நசுக்க நினைக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. ஊடகச் சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்க புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். - திரு. கே.எஸ். அழகிரி, தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி #😷கொரோனா விழிப்புணர்வு #INCTamilNadu
தமிழ்நாட்டுக்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஐ.சி.எம்.ஆர். வாங்கிய நிறுவனத்திடம் வாங்காமல் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத விநியோகஸ்தரான ஷான் பயோடெக் அண்ட் டயோக்னோஸ்டிக்ஸ் முலம் ஒரு கருவி ரூ. 600 க்கு கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது ஏன்? அதேபோல மேலும் 4 லட்சம் கருவிகளை ரூ. 24 கோடிக்கு வாங்க கொள்முதல் ஒப்பந்தம் போட்டதை அமைச்சரால் மறுக்க முடியுமா? அதில் 50 ஆயிரம் கருவிகளை பெறுவதற்கு முதல்கட்டமாக முயற்சியெடுக்கப்பட்டு 24 ஆயிரம் கருவிகளை தமிழக அரசு பெற்றுள்ளது. இதற்கு நேரடியாக பதில் கூறாமல் மற்ற மாநிலங்களின் விலையை ஒப்பிட்டு பேசுவது மடியில் இருக்கிற கனத்தை மூடி மறைப்பதாகும். மிக மிக சாதாரண சோதனைக்கருவிகளை உரிய ஆய்வு செய்து தகுதியான நிறுவனத்திடம் தரமான கருவிகளை வாங்க முடியாத பொறுப்பற்ற மத்திய, மாநில அரசுகள் கொடிய கொரோனா நோயிலிருந்து 136 கோடி மக்களை எப்படி காப்பாற்றப்போகிறார்கள் என்கிற கவலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு கூடுதல் லாபம் ஈட்ட அனுமதித்திருக்கலாமா என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் பதில் இல்லை. இதைப் பற்றி மத்திய அரசு வாய் திறக்க மறுக்கிறது. இப்படி அமைதியாக இருந்தால், கொள்ளை லாபம் ஈட்டிய நிறுவனங்களுக்கு நீங்கள் ஆதரவு அளித்ததாகவோ அல்லது உதவி செய்ததாகவோ பொருள்படும் என்பதை எவராலும் மறுக்க இயலாது. - திரு. கே.எஸ். அழகிரி, தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி #😷கொரோனா விழிப்புணர்வு #INCTamilNadu
மத்திய அரசு கடந்த ஆறு ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைச்சரிவை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 12 முறை உயர்த்தியுள்ளது. இதன்மூலம் மத்திய அரசுக்கு ஏறக்குறைய ரூபாய் 20 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது. இத்தகைய நிதியாதாரங்களை பயன்படுத்தி கொரோனா நோயை ஒழிக்கவும், பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்றவும் மத்திய பா.ஜ.க. அரசு போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் முதல் கொரோனா தொற்று பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு 84 நாட்கள் ஆகின்றன. இதுவரை கொரோனா தொற்றை சோதனை செய்ய உரிய பரிசோதனைக் கருவிகளை இந்திய அரசு தேடிக்கொண்டிருக்கிறது. இது மோடி ஆட்சியின் பரிதாபகரமான தோல்வியை வெளிப்படுத்துகிறது. இதுதான் ஒரு திறமையான ஆட்சிக்கு இலக்கணமா? எனவே சுதந்திர இந்தியா காணாத சோதனையில் சிக்கியிருக்கும் மக்களை காப்பாற்ற மத்திய அரசிடமிருக்கும் அனைத்து நிதியாதாரங்களையும் பயன்படுத்தி உரிய செயல்திட்டங்களை வகுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். - திரு. கே.எஸ். அழகிரி, தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி #😷கொரோனா விழிப்புணர்வு #INCTamilNadu
சீனநாட்டிலுள்ள குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் மத்திய அரசு வாங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் தரமும் துல்லியத்தன்மையும் மிக்க 75 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சத்தீஸ்கர் மாநில அரசு இந்தியாவிலுள்ள தென்கொரியா நிறுவனத்திடமிருந்து ரூபாய் 337 விலைக்கு கொள்முதல் செய்துள்ளது. அந்த கருவிகளின் துல்லியத்தன்மையில் எந்த குறைபாடும் இல்லை. ஆனால் இந்த நிறுவனத்திடம் கருவிகளை வாங்காமல் ரூபாய் 600 அதிக விலை கொடுத்து சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் தரம் குறைந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன்? இதற்கான விளக்கத்தை நாட்டுமக்களுக்கு வழங்கவேண்டிய பெரும் பொறுப்பு பிரதமர் மோடிக்கும், சுகாதாரத்துறைக்கும் இருக்கிறது. கொரோனா நோயாளிகளை தரம் குறைந்த துல்லியமாக சோதிக்க முடியாத துரித சோதனை கருவிகளை பயன்படுத்துவது குறித்து உரிய ஆலோசனைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும். இந்த உபகரணங்கள் மூலம் நோயாளிகளை துல்லியமாக சோதனை செய்யமுடியுமா என்பதை ஆய்வு செய்ய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண்டும். அத்தகைய ஆய்வுகளின் முடிவுகள் வரும் வரை ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலமாக நோயாளிகளை பரிசோதிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். - திரு. கே.எஸ். அழகிரி, தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி #😷கொரோனா விழிப்புணர்வு #INCTamilNadu