@joshuajerin
@joshuajerin

JOSHUA JOHNSON

நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.

#

இயேசுகிறிஸ்து

காரிருளில் நம் தீபம் இயேசு காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன், வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்; நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்; ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன் . மேற் கண்ட வரிகள் ஜான் ஹென்றி நியுமென் (Henry Newman) என்ற தேவ மனிதர் எழுதிய பாடலின் முதற்கவி ஆகும். இந்த நான்கு வரிகளை மீண்டுமொருமுறை கருத்தாய் வாசியுங்கள். உன்னத கிறிஸ்தவ வாழ்விற்கான ஒரு அற்புத சத்தியம் இதில் அடங்கியுள்ளது. காரிருள்போல தோன்றும் வாழ்க்கையின் பாதைகளிலே கர்த்தர் கூட இருக்கும்போது தூர காட்சி வேண்டாமென்றும், ஒரு அடி மட்டும் காண்பியும் என்றும் பக்தர் இங்கே பாடுகிறார். இன்றைய நாட்களில் விசுவாசிகள் அநேகர் தீர்க்கதரிசனமுள்ளவர் என யாரையாவது குறித்து கேள்விபட்டால் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலம் எப்படியிருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இது அநேக நேரங்களில் அஞ்ஞானிகள் குறி கேட்பது போல ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த பாடலின் கருத்து நம் வாழ்க்கைக்கு மிகமிக அவசியாமானது. நாளைய தினத்தை கர்த்தர் பார்த்து கொள்வார் என்றும், இன்றைய தினத்திற்கான கிருபையை மட்டும் சார்ந்து வாழ நாம் கற்று கொள்வது அவசியம். நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். நம் வாழ்வில் என்ன நடந்தாலும், அவருடைய கரத்தில் நமது காலங்களும் நமது வாழ்க்கையும் இருப்பதால், அவருடைய சித்தமில்லாமல் நமக்கு ஒன்றும் நேரிடாது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கும்போது, நம்மை யாரும், எதுவும் நிச்சயமாக அசைக்க முடியாது. இந்த பாடலை எந்த சூழ்நிலையில் ஜான் ஹென்றி எழுதினார் என்று சுவாரசிய தகவலை காண்போம். 1801-ல் பிறந்த இவர் தனது 15 ஆவது வயதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டு தன் வாழ்வை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். சுமார் 10 ஆண்டுகள் தீவிரமாக ஊழியம் செய்தார். பின் ஓரு சரீர வியாதி அவரை தாக்கியது. இத்தாலியிலிருந்து தனது தாய்நாடான இங்கிலாந்தை நோக்கி கப்பலில் செல்ல வேண்டியதாயிற்று. அப்போது அவருக்கு இருந்த காய்ச்சலும் அதிகரித்தது. கடலில் மூடுபனி ஏற்பட்டு கப்பலில் இருள் சூழ்ந்தது. வெளிச்சமில்லாத அந்த குளிரில் மிகவும அவதிப்பட்டார். அப்பொழுதுதான் இந்த பாடலை இயற்றினார். அப்பாடலை பாடிக் கொண்டிருந்தபோதே பனி மூட்டம் குறைந்து வெளிச்சம் வர ஆரம்பித்தது, அந்த நாள் அவரது வாழ்வில் மறக்க முடியாத ஆவிக்குரிய அனுபவத்தை தந்தது. அன்று அவர் எழுதிய இப்பாடல் இன்றுவரை அநேகருக்கு ஆசீர்வாதமாக உள்ளது. பின்பு 57 வருஷம் அவர் ஊழியம் செய்து தனது 89வது வயதில் கர்த்தருக்குள் நித்திரையானார். இப்பாமாலை பாடலின் மூலம் ஒவ்வொரு நாளும் இன்னுமதிகமாய் கர்த்தரை சார்ந்து கொள்ள நம்மை அர்ப்பணிப்போம். *🙏GLORY TO JESUS🙏*
198 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

இயேசுகிறிஸ்து

தாறுமாறாக்கப்பட்ட பாஷை நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். - (ஆதியாகமம் 11:7-9) . நீங்கள் என்றாவது உலகில் எத்தனை பாஷைகள் உண்டென்று யோசித்திருக்கிறீர்களா? அவைகள் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? மொழி ஆராய்ச்சியாளர்கள் மொழிகள் எப்படி வந்தது என்று இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், ஒரு மொழி பேசும் குடும்பத்திலிருந்து தான் மற்ற மொழிகள் வந்திருக்க வேண்டும் என்று. அவர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கட்டும். ஆனால், வேதத்தில் நமக்கு தெளிவாக பாஷைகள் எப்படி வந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது. அதையே நாம் விசுவாசிப்போம். பூமியெங்கும் வழங்கின பாஷையை கர்த்தர் தாறுமாறாக்கினார் என்று வசனம் சொல்கிறது. அதற்கு முன் பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது (வசனம் 1). தேவன் ஏன் அதை தாறுமாறாக்கினார்? ஏனென்றால் மனிதன் கர்த்தருக்கு விரோதமாக எழும்பினபடியால், தேவன் அந்த காரியத்தை செய்தார். மனிதர்கள் ஒன்று சேர்ந்து தேவனுக்கு விரோதமாக கலகம் செய்து, செய்ய ஆரம்பித்த முதல் முரண்பாடான காரியமும் அதுதான். அவர்கள் ஒரு கோபுரத்தை மாத்திரம் கட்ட திட்டமிடவில்லை, அதற்கு மேலான ஒன்றை செய்ய ஆரம்பித்தார்கள். நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள் (வசனம் 4). இங்கு கர்த்தர் எங்கே? அவரை குறித்து அவர்கள் பயப்படாதபடி, அவர்களுடைய திட்டங்களில் அவர் இல்லாதபடி செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவேளை அவர்கள் நினைத்திருக்கலாம், திரும்பவும் தேவ கோபாக்கினை வந்து, ஒரு வெள்ளம் வந்தால், வானளாவும் இந்த கோபுரத்தின்மேல் ஏறி தப்பித்து கொள்ளலாம் என்று. எப்படியாயினும், அவர்கள் தேவனில்லாதபடி தங்களுக்கென்று ஒரு ராஜய்த்தையும், தங்கள் பெயருக்கென்று ஒரு கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்தனர். ஆகவே தேவன் இறங்கி வந்தார். அவர் அப்படி வந்து செய்திருக்காவிட்டால், அந்த மனிதர்கள், நோவாவின் காலத்தில் இருந்த பாவத்தைவிட அதிக பாவத்தை செய்து, தேவன் வேறு முறையில் உலகத்தை அழிக்கும்படியான நியாயத்தீர்ப்பை பெற்றிருப்பார்கள். கர்த்தர் அவர்கள் பாஷையை தாறுமாறாக்கினபடியால், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, புரிந்து கொள்ள கூடாதிருந்தது. அப்போது அவர்கள் அந்த கோபுரத்தை கட்டுவதை விட்டுவிட்டார்கள். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். ஆனால், தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. அவருடைய திட்டத்தை நாம் பெந்தேகோஸ்தே நாளில் பார்க்கிறோம். 'அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்' (அப்போஸ்தலர் 2:3-6). வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்த வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அந்த இடத்திலே கூடி வந்திருந்தார்கள். அப்போது பரிசுத்த ஆவியானவரால் மேல்வீட்டறையிலே கூடியிருந்த 120 பேரும் வெவ்வேறு பாஷையிலே பேசினபோது, அங்கு வந்திருந்து அனைத்து மக்களும் எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள் (வசனம்7). அவர்கள் தங்கள் மொழியில் அவர்கள் தேவனுடைய மகத்துவங்களை பேசினதை கேட்டபோது, ஆச்சரியப்பட்டார்கள். ஆம், தேவன், குழப்பத்தின் இடமாகிய பாபேலில் அவர்கள் ஒரே பாஷையை பேசினபோது, அதை தாறுமாறாக்கினவர், அவர்கள் தேவனை பற்றிக்கொள்ளாமல், தேவனுக்கு முதலிடத்தை கொடாமல், தங்களுக்கு பெயர் உண்டாக்கும்படி அவர்கள் செய்தபடியால், அந்த இடத்தில் பாஷையை தாறுமாறாக்கினவர், பெந்தேகோஸ்தே நாளில், அவர்கள் பேசின வார்த்தைகள் மற்றவர்கள் விளங்கி கொள்ளும்படி செய்தார். உலகில் உள்ள ஜனம் இரட்சிப்பை பெற்றுகொள்ளும்படி, அவர் அந்த நாளில் வெவ்வேறு பாஷைகளை பேச வைத்தார். அந்த நாளில் இரட்சிப்பின் செய்தியை பேதுரு எழுந்து நின்று அறிவித்தபோது, மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அல்லேலூயா! பரலோகத்தின் பாஷை குழப்ப பாஷையல்ல, இரட்சிக்கும் பாஷையே! கர்த்தருடைய இரட்சிப்பு எல்லா மொழி பேசும் மக்களுக்கும் உரியது. 'தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்' (வெளிப்படுத்தின விசேஷம் 5:9-10). ஆம் பரலோகத்தில் சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து வந்த ஜனங்கள் அல்லேலூயா என்று பாட்டுக்களை பாடுவார்கள். ஒவ்வொரு மொழிகளிலுமிருந்து தேவனுக்கு துதிகள் செலுத்தப்படும். ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
212 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

இயேசுகிறிஸ்து

பாரதம் நமது பாரதம் என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன். - 2 நாளாகமம் 7: 14. . புகழ்பெற்ற தமிழ்நாட்டு பேச்சாளர் ஒருவர் வெளிநாட்டில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இறுதி நாளில் பணம் செலுத்துவதற்காக கௌண்டரில் வந்து நின்றார். அப்போது மற்ற வெவ்வேறு வெளிநாட்டவரும் தத்தம் கட்டணங்களாக முறையே டாலர், பௌண்ட், யூரோ பணங்களையும் கட்டினர். இவரும் ஹோட்டல் ஊழியரிடம் நம் நாட்டு பணத்தைக் கொடுத்தபோது அவர் Indian Rupees என்று கூறி இளக்காரமாக பார்த்ததாகவும் கூறினார். இந்த நிலைக்கு காரணம் என்ன? அனைத்து வளங்களையும் தன்னகத்தே பெற்றுள்ள நம் தேசம் ஏன் இன்னும் முன்னேறாமல் இருக்கிறது? அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கம்பியூட்டர் மற்றும் விண்வெளித் துறைகளில் இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும் இந்நிலைக்கு காரணம் என்ன? முதலாவது நம் தேசம் படைத்த தேவனை இன்னும் அறியாத தேசமாகவே உள்ளது. விசுவாசிகளாகிய நாம் இந்த சூழ்நிலையை மாற்ற ஏதாவது செய்ய முடியுமா? நிச்சயமாகவே முடியும். நாம் தனிநபராகவோ, குழுவாகவோ, சபையாகவோ தேசத்திற்காக விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது நிச்சயமாக மாற்றம் ஏற்படும். நம்மையல்லாமல் தேசத்திற்கு யார் உப்பாக இருக்க முடியும்? முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் K.F. கென்னடி ஒரு முறை தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் 'நாடு உங்களுக்கு என்ன செய்ததென்று கேட்குமுன், நீங்கள் நாட்டிற்காக என்ன செய்தீர்கள் என்று யோசியுங்கள்' என்று பேசினார். கிறிஸ்தவர்களாகிய நாம் தேசத்திற்காக ஜெபிப்பதோடு நின்றுவிடாமல் செயல்படுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். அரசாங்கத்திடமிருந்து குறைந்த விலை அரிசி, இலவச தொலைக்காட்சி என்று சலுகைகளை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிராமல் தேசத்தின் முன்னேற்றத்திற்காக நான் எப்படியெல்லாம் உதவலாம் என்று யோசிக்க வேண்டும். வருமான வரிகளை ஏமாற்றாமல் கட்டுகிறோமா? சாலை விதிகளை கடைபிடிக்கிறோமா? பொது சொத்துக்களை பாதுகாக்கிறோமா? மற்றவர்கள் சரியாக இல்லை நான் மட்டும் ஏன் சரியாக வாழ வேண்டும் என்று யோசித்தால் நாடு இன்னும் மோசமாகும். நண்பர்களே! கிரிக்கெட் பார்க்கும் போதும், வந்தே மாதரம் பாடும்போதும் மட்டும் வருவது தேசபக்தியல்ல. நாம் அன்றாடம் செய்யும் எல்லா செயல்களிலும் தேச பற்றை காட்டுவோம். ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
187 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

இயேசுகிறிஸ்து

வேதத்தை அந்நியமாக எண்ணாதிருப்போம் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு. - (எசேக்கியேல் 33:11). கிரீஸ் நாட்டை ஆண்ட மன்னர்களில் அர்கியஸ் என்ற மன்னரும் ஒருவர். அவர் உலகில் என்னென்ன சிற்றின்பங்கள் உண்டோ அவை எல்லாவற்றையும் அனுபவித்து வாழ்ந்து வந்தவர். நாட்டின் மக்களின் நலனில் சிறிதேனும அக்கரையின்றி, தன் வாழ்வை சிற்றின்பத்திலும், கேளிக்கைளிலும் செலவழித்து வந்தார். அதனால் அவரது அரண்மனையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சீர்கேடுகள் நிறைந்தது. இவற்றைக் கண்டு, ஒழுக்கமுள்ளவர்கள் யாரும் சுகமாக வாழ முடியாத நிலைமையினால், இந்த ராஜாவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஒரு கூட்ட மக்கள் கூடி தீர்மானித்தனர். அதற்கான சரியான வேளையையும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். மக்களில் பெரும்பான்மையோர் தனக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அறியாத ராஜா, வழக்கம் போல கேளிக்கைகளில் மூழ்கி இருந்தார். ஏதென்ஸ் நகரில் மன்னருக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். மன்னருக்கு விரோதமான சதித்திட்டத்தைக் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. உடனே மன்னருக்கு விரோதமான சதித்திட்டத்தைக் குறித்தும், அதிலிருந்த தப்பித்துக் கொள்ளும் வழிவகைகளையும் குறித்து விரிவாக ஒரு கடிதத்தை எழுதி, தனது நம்பகமான உதவியாளர் மூலமாக இராஜாவுக்கு அனுப்பி வைத்தார். நண்பரின் உதவியாளர் அரண்மனை வந்தபோது, அன்றும் மன்னர் பெரிய விருந்தில் ஈடுபட்டிருந்தார். மன்னரிடம், 'ஏதென்ஸ் நாட்டிலுள்ள உமது நண்பர் ஒரு கடிதத்தை கொடுத்தனுப்பியிருக்கிறார். இதை உடனே வாசிக்கும்படியாக உங்களிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஏதோ அபாயம் வரப்போகிறதாம்' என்று கடிதத்தை அவரிடம் கொடுத்தனர். மன்னரோ, மதுமயக்கத்தில் 'அபாயமா? என் நாட்டிலா?' என்று ஏளனமாக சிரித்து, 'வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று அந்த கடிதத்தை வாசிக்கவும் இல்லை, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. அந்தக் கடிதம் தரையில் வீசப்பட்டு, கால்களால் மிதிப்பட்டது. விருந்தின் உச்சக்கட்டத்தை நெருங்கியபோது, சதிகாரர்கள் உணவு பறிமாறும் பணியாளர்களைப் போல உடையணிந்து, மன்னரின் மீது பாய்ந்து, அதே இடத்தில் குத்தி கொன்றனர். மன்னர் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். நண்பரின் கடிதம் இரத்தத்தில் நனைந்தது. வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மன்னருக்கு பார்த்துக் கொள்ள நேரம் கூட கிடைக்கவில்லை. பிரியமானவர்களே, கர்த்தர் நம் மீது கொண்ட அளவற்ற அன்பினால் நமக்கு வேதத்தை எழுதி கொடுத்திருக்கிறார். 'என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்' (ஓசியா 8:12) என்று கர்த்தர் நம்மைக் குறித்து சொல்லாதபடி, அந்த அற்புத வேதத்தை எடுத்து வாசிப்போம். வேதத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அநேக ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. 'பாவம் செய்கிற ஆத்துமா சாகும்' என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. பாவத்திலிருந்த விடுதலையாகும் வழிகள் சொல்லப்பட்டிருக்கிறது. கடைசி காலத்தில் நடைபெற இருக்கும் சம்பவங்கள், ஏற்படப் போகும் அழிவுகள், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழி என்று எல்லாமே எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை நமக்கு சொந்தமாக எடுத்துக் கொள்ளாமல், வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கவலையற்று இருந்து விட்டால் அந்த நாள் வரும்போது, அந்த இராஜாவைப் போல எச்சரிப்புக் கொடுக்கப்பட்டும், அதைக் குறித்து பயமில்லாமல், தன்னிச்சையாக வாழ்ந்து, கெட்டதுப்போல காரியங்கள் நேரிடலாம். 'கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு' என்ற வார்த்தைகளின்படி, நம்முடைய பொல்லாத வழிகளை விட்டு, திரும்பி, கர்த்தரைப்பற்றிக் கொள்வோம். கர்த்தர் நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிற மகத்துவமான வேதத்தை வாசித்து, வரும் அழிவுக்கு தப்பித்துக் கொள்வோம். ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
180 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

இயேசுகிறிஸ்து

ரெகொபோத் – Rehoboth பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான். - (ஆதியாகமம் 26:22). . ஈசாக்கு துரவை வெட்டியபோது அங்கு அவனுக்கும் அங்கிருந்த மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்த காலத்தில் ஈசாக்குக்கு இருந்த ஆட்டு மந்தைகளுக்கும் மாட்டு மந்தைகளுக்கும் நீர் கொடுக்க அவனுக்கு அந்த நேரத்தில் நல்ல தண்ணீர் சுரக்கும் துரவு மிகவும் அத்தியாவசிய தேவையாயிருந்தது. அது இல்லாதபடிக்கு அவனுடைய மந்தைகள் மரித்து போகும். அதனால் அவன் மூன்று துரவுகளை (கிணறுகளை) தொடர்ந்து தோண்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 'தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்' (வசனம் - 18). ஈசாக்கு பெலிஸ்தர் தூர்த்து போட்ட தன் தகப்பனுடைய துரவுகளை மீண்டும் தோண்டியபோது, பெலிஸ்தர்கள் அதை குறித்து வாக்குவாதம் பண்ணவில்லை. பெலிஸ்தர்கள் நினைத்திருப்பார்கள், ஆபிரகாம் இறந்த பிறகு இந்த துரவுகளுக்கு யார் சொந்தம் பாராட்டி வருவார்கள் என்று. ஆனால், ஈசாக்கு அவைகளை மீண்டும் தோண்டி அவைகளை பயன்படுத்த ஆரம்பித்தான். ஒரு நல்ல ஊழியக்காரரின் தரிசனங்களும் செயல்பாடுகளும் கூட அவர் மரித்தப்பின் அப்படியே போய் விடக்கூடாது. அது தொடர்ந்து செயல்பட வேண்டும். மோசேயின் தலைமைத்துவத்துவத்தை யோசுவா தொடர்ந்ததுப்போல, எலியாவின் தரிசனத்தை எலிசா தொடர்ந்தது போல, நல்ல ஊழியரின் தரிசனங்கள் அவர்கள் மரிக்கும்போது, அவர்களோடு மண்ணோடு மண்ணாக போய் விடாமல் அவை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். ஆனால், தன் தகப்பனின் துரவுகளை ஈசாக்கு தோண்டியபோது, அதை குறித்து வாக்குவாதம் செய்யாதவர்கள், அவன் புதிய துரவுகளை தோண்ட ஆரம்பித்த போது வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். பழைய ஊழியரின் தரிசனங்கள் நல்லதுதான், ஆனால் தேவன் புதிய தரிசனங்களோடு கூட நாம் செயல் பட வேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கிறார். அப்போது எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அவைகளையும் மீறி நாம் செயலாற்ற வேண்டும். ஐயோ, எதிர்ப்புகள் வருகிறதே என்று ஒன்றுமே செய்யாமல் இருக்கும்போது, அதினால் எந்த பயனுமில்லை. நீங்கள் செயலாற்றி செல்லும்போதுதான் தேவனும் ஆசீர்வதிகக ஆரம்பிக்கிறார். 'பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்' என்று பார்க்கிறோம். அவன் எதிர்ப்புகளை கண்டு சோர்ந்து போகாமல், முன்னோக்கி சென்று துரவை வெட்டினபோது, அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை. அப்போது தேவன் அவனை ஆசீர்வதிக்க ஆரம்பிக்கிறார். அவன் மகிழ்ந்து தேவன் அவர்களுக்கு இடம் உண்டாக்கினார் என்று அந்த துரவிற்கு ரெகொபோத் என்று பெயரிட்டான். கர்த்தருக்காக காரியங்களை புதிய தரிசனத்தோடு செய்யும் போது எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அந்த எதிர்ப்புகளின் மத்தியிலும் மனம் தளராமல் கர்த்தருக்காக காரியங்களை செய்யும்போது, ஒரு நாள் வரும், எதிர்ப்பவர்கள் வாயடைத்து போவார்கள். தேவன் உங்களை பலுக செய்வார். அப்போது நீங்களும் ஆனந்தமாக ரெகொபோத் என்று ஆண்டவரை துதிக்க முடியும். ஆமென் அல்லேலூயா! *🙏GLORY TO JESUS🙏*
158 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்