#⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪️➕புனித அந்தோனியார் பாடல்கள்🎶 03 அக்டோபர் 2025, வெள்ளி
பொதுக்காலம் 26ஆம் வாரம் - வெள்ளி
முதல் வாசகம்
ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை.
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 15-22
நீங்கள் சொல்ல வேண்டியது: நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நீதி உரியது. ஆனால் நமக்கும், யூதாவின் மக்கள், எருசலேமின் குடிகள், நம் அரசர்கள், தலைவர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மூதாதையர்கள் ஆகிய அனைவருக்கும் இன்று போலத் தலைக்குனிவுதான் உரியது. ஏனெனில், ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளின்படி நடக்கவுமில்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த நாளிலிருந்து இன்றுவரை நாம் அவருக்குப் பணிந்து நடக்கவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்ப்பதில் ஈடுபாடு கொள்ளாமல் இருந்துவிட்டோம்.
ஆகவேதான், பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை நமக்குக் கொடுக்கும் பொருட்டு, எகிப்து நாட்டிலிருந்து நம் மூதாதையரை ஆண்டவர் அழைத்து வந்தபொழுது, தம் அடியாரான மோசே வாயிலாக அவர் அறிவித்திருந்த கேடுகளும் சாபங்களும் இன்றுவரை நம்மைத் தொற்றிக் கொண்டுள்ளன. மேலும், நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மிடம் அனுப்பி வைத்த இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய சொற்கள் எவற்றுக்கும் நாம் செவிசாய்க்கவில்லை. மாறாக, நம்மில் ஒவ்வொருவரும் நம் தீய உள்ளத்தின் போக்கில் நடந்தோம்; வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்தோம்; நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீயன புரிந்தோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 79: 1-2. 3-5. 8. 9 (பல்லவி: 9bc)
பல்லவி: உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு கடவுளே, எங்களை விடுவியும்.
1
கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்; உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர். எருசலேமைப் பாழடையச் செய்தனர்.
2
உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள். - பல்லவி
3
அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்; அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை.
4
எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்; எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம்.
5
ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ? - பல்லவி
8
எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். - பல்லவி
9
எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 95: 8b, 7b
அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16
அக்காலத்தில்
இயேசு கூறியது: “கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர். எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய்.
உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪️➕புனித அந்தோனியார் பாடல்கள்🎶 02 அக்டோபர் 2025, வியாழன்
பொதுக்காலம் 26ஆம் வாரம் - வியாழன்
நற்செய்தி வாசகம் தூய காவல் தூதர்கள் நினைவுக்கு உரியது.
முதல் வாசகம்
திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார்.
நெகேமியா நூலிலிருந்து வாசகம் 8: 1-4a, 5-6, 7b-12
அந்நாள்களில்
மக்கள் அனைவரும், ஒரே ஆளென, தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்றுகூடினர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருநூலைக் கொண்டுவருமாறு திருநூல் வல்லுநர் எஸ்ராவை வேண்டினர். அவ்வாறே ஏழாம் மாதம் முதல் நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் காலை முதல் நண்பகல் வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவிகொடுத்தனர்.
திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மரமேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி “ஆமென்!ஆமென்!” என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள். மக்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.
ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்” என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக் கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்று கூறினார்.
எனவே லேவியர் எல்லா மக்களையும் நோக்கி, “அமைதியாய் இருங்கள்; ஏனெனில் இன்று புனித நாள், துயரம் கொள்ளாதீர்கள்” எனச் சொல்லி அழுகையை அமர்த்தினார்கள். எல்லா மக்களும் அவர்களுக்குக் கூறப்பட்ட வார்த்தைகளைப் புரிந்து கொண்டதால், உண்ணவும், குடிக்கவும், உணவு அனுப்பவும், மகிழ்ச்சி கொண்டாடவும் புறப்பட்டுச் சென்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.
7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி
8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி
9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி
10
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 103: 21
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
சிறு பிள்ளைகளுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10
அக்காலத்தில்
சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪️➕புனித அந்தோனியார் பாடல்கள்🎶 01 அக்டோபர் 2025, புதன்
பொதுக்காலம் 26ஆம் வாரம் - புதன்
முதல் வாசகம்
உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்.
நெகேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-8
மன்னர் அர்த்தக்சஸ்தாவின் இருபதாம் ஆட்சி ஆண்டில், நீசான் மாதத்தில் அவரது முன்னிலையில் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நெகேமியாவாகிய நான் திராட்சை இரசத்தை எடுத்து மன்னருக்குக் கொடுத்தேன். அப்பொழுது அவர் முன்னிலையில் நான் துயருற்றவனாய் இருந்தேன்.
மன்னர் என்னைப் பார்த்து, “ஏன் உன் முகம் வாடியுள்ளது? நீ நோயுற்றவனாகத் தெரியவில்லையே! இது மன வேதனையே அன்றி வேறொன்றுமில்லை” என்றார்.
நானோ மிகவும் அஞ்சினேன். நான் மன்னரை நோக்கி, “மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கு இரையாக்கப்பட்டிருக்கும்போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்?” என்றேன்.
அதற்கு மன்னர் என்னை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்?” என்றார். அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன். நான் மன்னரைப் பார்த்து, “நீர் மனம் வைத்தால், உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கொண்டுள்ள யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்” என்று கூறினேன்.
அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, “உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும்? எப்பொழுது நீ திரும்பி வருவாய்?” என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால், திரும்பி வரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன்.
மீண்டும் மன்னரைப் பார்த்து, “உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும் வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும். கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்க இருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும்” என்றேன்.
கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 137: 1-2. 3. 4-5. 6 (பல்லவி: 6ac)
பல்லவி: உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளட்டும்.
1
பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.
2
அங்கிருந்த அலரிச் செடிகள்மீது எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். - பல்லவி
3
ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ‘சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர். - பல்லவி
4
ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
5
எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! - பல்லவி
6
உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக! - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
பிலி 3: 8-9 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62
அக்காலத்தில்
இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.
இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றி வாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.
வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.