திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலச்செவல், சொக்கலிங்கபுரம், பிரான்சேரி, கோபாலசமுத்திரம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் கனமழையால் சேதமாகியுள்ளன.
நேற்று (நவம்பர் 22) அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்ததில், அறுவடைக்குத் தயாராக இருந்த வாழைகள் அடியோடு சாய்ந்துள்ளன. கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த வாழைப் பயிர்கள் ஒரே இரவில் சேதமடைந்ததைக் கண்டு விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். லட்சக்கணக்கான வாழைகள் சேதமடைந்துள்ளதால், இந்தப் பகுதிகளில் ஒட்டுமொத்த வாழை விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
விவசாயிகளின் இந்த பேரிழப்பைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு விரைந்து இந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கள ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். இதுவே அந்த விவசாயிகளின் வாழ்வை மீட்டெடுக்க உதவும். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதில், வழக்கம்போல் ஒன்றிய அரசை மட்டும் கை காட்டாமல், இவர்களுக்கு உரிய நிவாரணத்தை, உடனே வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஆளும் திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு விவசாயிகள் அதிக மழைப் பொழிவினால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆளும் திமுக அரசு போர்க்கால அடிப்படையில் அவசரமாக மேற்கொள்ள வேண்டும். நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் முடிவடையாத நிலைமையில், விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். #Thalapathy 🥰