நிறங்கள் ஓர் ஐந்து உடைய (அதாவது தனக்கென்று ஒரு தனி வர்ணமோ, வண்ணமோ இல்லாதவன்), தேவர்கள் துதித்தும் அவர்களுக்கு புலப்படாமல் மறைந்திருந்த பெருமான், ஆனால், நமக்கு எளியவனான உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் (சிவபுராணத்தில் வரும் நிறங்கள் ஓர் ஐந்துடையாய் இந்த கோவில் சிவபெருமானைத் தான் குறிக்கிறது என்று நினைக்கிறேன்!!😄) கோவிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அப்போது ஒருவர் வந்து அன்னதானத்திற்கு நன்கொடை தரமுடியுமா என்று கேட்டார். நான் அவரிடம் "நானே பல வருடங்களாக வேலைக்கு செல்லாமல் ஆன்மீக வாழ்வில் இருக்கிறேன்; என்னிடம் அதிகம் பணம் இல்லை" என்றேன். பிறகு ஒரு 50 ரூபாய் கொடுத்தேன். அதனால் மகிழ்ந்த அவர், "வேலை கிடைக்கும் உபாயம் நான் கூறுகிறேன்; அதை அப்படியே செய்தால் வேலை கண்டிப்பாக கிடைக்கும்" என்றார். இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனாலும் சரி, சொல்லுங்கள் என்றேன். முதல் விஷயம் - நிலக்கடலை வாங்கி வேக வைத்து அதை ஆடுகளுக்கு கொடுக்க வேண்டும் என்றார். சரி, அடுத்தது? வீட்டில் ஊத்தப்பம் செய்து ஆனியன் சட்னி வைத்து அதை அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று தானம் கொடுக்க வேண்டும் என்றார்!! நான் சற்று யோசித்ததை பார்த்த அவர், "இதையெல்லாம் நான் சொல்லவில்லை; அந்த சிவனே என்னை அனுப்பி கூறச் சொல்லி இருக்கிறார்" என்றார். பிறகு, மூன்றாவதாக, ரவையை வேக வைத்து, சக்கரை சேர்த்து கோவிலிலோ மற்ற இடங்களிலோ உள்ள மரத்தில் வைத்து விட வேண்டும்; சித்தர்கள் எறும்பு ரூபத்தில் வந்து சாப்பிடுவார்கள் என்றார். பிறகு, சந்தனக் கட்டை வாங்கி சந்தனத்தை அரைத்து நாச்சியார் கோவில் தூணில் உள்ள ஆஞ்சனேயர் நெற்றியில் இட வேண்டும் என்றார். பிறகு, "எங்கே, எல்லாவற்றையும் கூறு" என்றார்!! நான் "எல்லாம் ஓகே, ஆனால், இந்த ஊத்தப்பம் வெங்காய சட்னி விஷயம் தான் சற்று.." என்றேன். "நான் மிகவும் கஷ்டப்பட்டு ஆட்டோ பிடித்து இங்கே வந்தது இதை உனக்கு சொல்லத்தான் சிவபெருமான் அனுப்பி இருக்கிறார்" என்றார்!! நானும் கூட சீரியஸாக கேட்டுக் கொண்டிருந்தேன். பிறகு, வேர்கடலை வாங்கி வேக வைத்து ஆடுகளுக்கு கூட கொடுத்தேன். வேலை கிடைப்பதற்காக அல்ல; அதில் ஒரு சந்தோஷம் அதனால்!! ஆனால், பிறகு யோசித்தேன்; அவர் சீரியஸாக சொன்னாரா? அல்லது வெறும் கிண்டலா!! என்னை நன்றாக கிண்டல் செய்திருக்கிறார் என்று பிறகு தான் தோன்றியது!! 😄😄😂 ***************************************************** அது சரி, ஆடுகளுக்கு நிலக்கடலை கொடுத்த போது, அப்படி ஒரு சந்தோஷமாக அவை சாப்பிட்ட போது, எனக்கும் சந்தோஷமாக இருந்தது. ஏன்? பிற உயிர்களுக்கு நன்மை செய்தால் ஏன் சந்தோஷம் வருகிறது?! நமக்கு ஐந்து புலன்கள் தான் உள்ளன. எவ்வளவு கோடி பணம் இருந்தாலும், ஒரு வயிறு அளவுக்கு தான் சாப்பிட முடியும்; நாம் சாப்பிடும் காபிக்கோ, அரிசி, கோதுமைக்கோ பணக்காரர்கள் சாப்பிடுவதற்கோ மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. ஆகையால், பணம் எவ்வளவு இருந்தாலும் புலன் இன்பங்களுக்கு ஓரளவிற்கு தான். ஆனால், நாம் சாப்பிடும் உணவையோ, மற்ற தானங்களையோ பிற உயிர்களுக்கு செய்வதின் மூலம் நாம் மேலும் சந்தோஷத்தை அதிகப் படுத்தி கொள்ளலாம். நமக்கு இருக்கும் புலன்கள் ஐந்தை பல மடங்காக உயர்த்தி மேலும் மகிழ்ச்சி பெறும் ஆன்மீக வழி, பிற உயிர்களை மகிழ்ச்சியுற செய்வது தான்!! ஆனால், அவை அடையும் மகிழ்ச்சி நம்மையும் வந்து சேர்வதற்கு காரணம் என்ன தெரியுமா? அத்வைதம் கூறும் நாம் அனைவரும் ஒன்றே என்ற தத்துவம் அல்ல. அவற்றின் புலன்களும் உணர்ச்சிகளும் நம் புலன்களும் தொடர்புடையவை அல்ல. ஆனால், எல்லா உயிர்களையும் இணைக்கும் பாலம் இறைவன். அவற்றின் மகிழ்ச்சி இறைவனின் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி நம்மையும் வந்து சேர்கிறது!! இதைத் தான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றனர்!! ஆகையால், நம் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியுற, மேன்மையடைய பிற உயிர்களையும் மகிழ்ச்சியடைய வைப்பதே சிறந்த ஆன்மீக வழி!! *****************************************************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம