#aanmeegam
🛕
*_புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாதா? ஏன்?_*
_புரட்டாசி மாதமானது ஆன்மீகம் மற்றும் அறிவியல் கலந்த பாரம்பரியத்துடன் அழகாகக் கலந்திருப்பதால் தனித்துவமாகக் கருதப்படுகிறது._
* 🛕🛕🛕புரட்டாசி மாதத்திற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்?
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் மற்றும் நவராத்திரியை அனுசரிக்கும் மாதம் என்றும் நம் எல்லோருக்குமே தெரியும். மேலும் இந்த மாதம் ஒரு சிறந்த மாதமாகவும் கருதப்படுகிறது. ஏன் தெரியுமா? ஏனென்றால் இந்த மாதமானது ஆன்மீகம் மற்றும் அறிவியல் மற்றும் பாரம்பரியத்துடன் அழகாகக் கலந்திருப்பதால் தனித்துவமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் பெருமாளை வழிபடுவோம் மேலும் துர்கையையும் சிறப்பாக நவராத்திரி என்கிற ஒன்பது நாட்களில் வணங்கி பூஜை செய்வோம். இவை மட்டுமல்லாமல் இந்த மாதமானது நமக்கு உடல் மற்றும் மன நலனைக் கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் கற்பிக்கிறது.
புரட்டாசி மாதத்தில் முக்கியமாக கடைபிடிக்கும் இரண்டு நடைமுறைகள் என்னவென்று கேட்டால், ஒன்று கோவிலுக்கு சென்று பெருமாளையும் துர்கா தேவியையும் வழிபடுதல், வீட்டில் கொலு வைத்து அம்மனை வழிபடுதல், மற்றொன்று உண்ணாவிரதம் அல்லது மாதம் முழுவதும் சைவ உணவை பின்பற்றுதல் இந்த இரண்டு நடைமுறைகளையும் பல நூற்றாண்டுகளாகவே மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
புரட்டாசி மாதம் குறிப்பாக விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு, உலகை அசுரர்களிடமிருந்து காப்பாற்ற பகவான் விஷ்ணு ஒரு காட்டுப்பன்றி (கூர்ம அவதாரம்) வடிவில் பூமிக்கு அவதரித்தார் என்று மக்கள் நம்புகிறார்கள். கலியுகத்தின் முடிவில் இருந்து கிரகத்தைப் பாதுகாத்ததற்காக விஷ்ணுவுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் இந்துக்கள் இந்த மாதத்தை தெய்வீக மாதமாகக் கருதுகின்றனர்.
அறிவியலுக்கும் புரட்டாசி மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
புரட்டாசி மாதத்தில், மக்கள் பொதுவாக அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். நவராத்திரி விரதம் இருப்பவர்களும் 9 நாட்களுக்கு முழுவதுமாகவோ அல்லது ஒரு வேளை சாப்பிட்டோ அவரவர் சௌகரியத்திற்கேற்றவாறு விரதம் இருக்கிறார்கள்.
இந்த நவராத்திரி விரதத்தின் போதும் அசைவத்தை உண்ண மாட்டார்கள். ஆன்மீக நோக்கத்தோடு இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதில்லை என்கிற காரணம் இருந்தாலும் அசைவத்தை தவிர்ப்பது என்ற நடைமுறையானது, உண்மையில் அறிவியலுடனும் தொடர்பு கொண்டுள்ளது. ஆச்சிரியமாக இருக்கிறதா? வாஸ்தவத்தில் அதற்கான விளக்கமும் இருக்கிறது.
செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியானது இலையுதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதன் காரணமாக, வெப்பநிலை மிதமான குளிர்ச்சியாகவும், பகல் வெளிச்சம் வழக்கத்தை விட அதிகமாகவும் இருக்கும். பகல் வெளிச்சத்துடன் குளிர்ந்த சூழ்நிலையும் சேரும் போது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்களுக்கு சோர்வு, வெப்பம் தொடர்பான தொற்றுகள் மற்றும் சோம்பலுக்கு வழிவகுக்கும். ஆகவே புரட்டாசி மாதத்தில் நமக்கு சரியான செரிமானம் நிகழாது. குறிப்பாக சிவப்பு இறைச்சியை சாப்பிட்டால், அதை ஜீரணிக்க கடினமாக இருக்கும். ஏனெனில் அதில் நிறைய புரதம் மற்றும் கொழுப்பு உள்ளது.
குளிரும் வெயிலும் கலந்திருக்கும் காரணத்தால் இயல்பாகவே நம் உடலில் ஜீரண சக்தி குறைவாகவே இருக்கும் காரணத்தால் அசைவ உணவை ஜீரணிக்க இயலாது.
தற்போதைய சூழ்நிலையில் உண்ணாவிரதம் பிரபலமடைந்து வந்தாலும், உண்ணாவிரதமானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே துவங்கபட்டது. மேலும் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. உணவு உண்ணாவிட்டாலும் சரி, குறைந்த கலோரி உணவுகளை உட்கொண்டாலும் சரி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவு இல்லாமல் இருப்பதே நம்முடைய உடலிற்கு ஆரோக்கியம் என்று பலர் நம்புகிறார்கள்.
நல்ல குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் மக்கள் புரட்டாசி மாதத்தின் போது உண்ணாவிரதத்தை கடைபிடிக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் உண்ணாவிரதத்தை கடைபிடித்தால் அது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது. மக்கள் அரிதாகவே உண்ணாவிரதத்தை மேற்கொள்ள விரும்புவதால், உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள புரட்டாசி மாதம் சரியானது என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனாலும் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, தைராய்டு, இதய நோய் மற்றும் வேறு சில நோய்களால் பாதிக்கபட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி விரதத்தை மேற்கொள்வது நல்லது.
🍁🍁🍁