D Muthu Prakash, Kanchipuram 💐
1K views • 14 days ago
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 12.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
--------------
நடுத்தீர்ப்பு தொடர்ச்சி
------------------------------------------
மாலும்நா னப்போ மகாகோப மாய்வெகுண்டு
சுட்டிப் பயலே சுணைவந்து தில்லையென்று
மட்டிப் பயலே மாறிப்பின் னேதுரைத்தேன்
.
விளக்கம்
----------------
திருமாலாகிய நான் மிகுந்த கோபம் கொண்டு உன்னை நோக்கி, சுட்டிப் பயலே, உனக்கு இப்பொழுதும் சிறிதுகூட உணர்வு வரவில்லையே என்று சொல்லி விட்டு மீண்டும் உன்னை நோக்கி கூறலானேன்.
.
.
அகிலம்
--------------
உன்றனுட தம்பி ஒருவன்மிக வந்தெனக்கு
சிந்தையுற்ற உன்பெலங்கள் தெரியப் படுத்தியல்லோ
கொன்றாய்நீ யென்று கூறினா யின்னமுனை
இன்னம் பிறவி ஏற்றதுரி யோதனனாய்
துவாபர யுகத்தில் தோன்ற உனையருளிப்
.
விளக்கம்
-----------------
உன் தம்பி ஒருவன் என்னிடம் வந்து உன் உயிர் நிலை பற்றி தெரியப் படுத்திய காரணத்தால்தான் நான் உன்னைக் கொல்ல முடிந்ததாக நீ சொன்ன காரணத்தால், இனி உன்னைத் துவாபரயுகத்தில், தோன்ற செய்தேன்.
.
.
அகிலம்
--------------
பவரா யுனக்குப் பக்கத் துணையாக
ஒருநூறு பேராய் உலகில்மிக நீதோன்றி
இருபேர்க்கும் நான்பொதுவாய் இருந்து வுனைவதைத்து
இன்றுரைத்தப் பேச்சு யானன்று கேட்பேனென
.
விளக்கம்
----------------
உன் சகோதர்களோடு உன்னையும் சேர்த்து நூறு பேராகவும், இன்னும் கிளைகளும் உலகில் தோன்றச் செய்து கௌரவராகிய உங்களுக்கும், பஞ்சவர்க்கும் நான் பொதுவாய் இருந்து உன்னை அழியச் செய்து, இன்று நீ உரைத்த பேச்சுகளை அன்று உன்னிடம் கேட்பேன் என்று கூறினேன்.
.
.
அகிலம்
-------------
அன்று உனதுடைய அன்னசுற்றம் வேரறுத்து
உன்னுயி ரைமழித்து உற்றயுக முமழித்து
என்னுடைய லட்சுமியை யான்மீட்டு என்னுள்வைத்து
உற்ற திரேதா யுகமழித் துன்றனையும்
சுத்ததுவா பரயுகத்தை தொல்புவியில் தோணவைத்தேன்
.
விளக்கம்
----------------
அன்று உன்னுடைய சுற்றத்தோடு உன் உயிரையும் அழித்து, அப்போதுள்ள யுகத்தையும் அழித்து என் இலட்சுமியை நான் மீட்டு, சுத்தத் துவாபரயுகத்தைப் பழமையான பூமியில் தோன்ற வைத்தேன்.
.
.
அகிலம்
---------------
பிறந்தாய்ப் புவியில் பிறப்பொரு நூறுங்கூட
அறந்தான் பெரிய ஐவர்களு மங்குதித்தார்
அப்படியே நீபிறந்து ஆளுகின்ற நாளையிலே
முப்படியே நானும் உகத்தில்கோ பாலனெனப்
பாலனென வுதித்து பாண்டவர்க ளோடிருந்து
தூலமொன்று வீமனுக்குச் சொல்லியுனைச் சங்கரித்தேன்
.
விளக்கம்
----------------
பிறகு நீ அந்த யுகத்தில் நூறுபேரோடு ஒருவனாய்ப் பிறந்தாய். தருமத்தைப் பெரிதாக நினைத்து வாழும் ஐவர் பஞ்ச பாண்டவர்களும் அங்குத் தோன்றினர். இப்படியாக நீ அங்குத் தோன்றி ஆட்சி புரிந்து வருகின்ற சமயத்தில் முன் வினைப்படியே நான் அந்த யுகத்தில் கோபாலன் என்னும் பெயரோடு குழந்தையாகத் தோன்றினேன். பஞ்சபாண்டவர்களோடு நானும் கூடி இருந்து, வீமனுக்கு இரகசியமான ஒரு சூட்சுமம் ஒன்றைச் சொல்லிக் கொடுத்து உன்னை அழியச் செய்தேன்.
.
.
அகிலம்
-------------
சங்கரித்து உன்னைச் சகுனி யிழுக்கையிலே
பங்கமாய் முன்னுரைத்த பாங்கு மிகக்கேட்டேன்
அப்போது நீயும் அகமகிழ்ந்து கொள்ளாமல்
இப்போது வீமன் எனைக்கொன்றா னல்லாது
ஏலுமோ போடா இடையா எனவுரைத்தாய்
.
விளக்கம்
----------------
உன்னை இவ்வாறு அழிக்கும்போது, உன்னைச் சகுனியானவன் போர்க் களத்திலிருந்து இழுத்துச் சென்றான். அப்போது மிகவும் இதமாக முன்பு உரைத்த வாக்குகளைப் பற்றி உன்னிடம் கேட்டேன். நீ மனம் மகிழ்ந்து கொள்ளாமல் என்னை நோக்கி, போடா இடையனே, இப்பொழுது என்னை வீமன்தான் கொன்றானே அல்லாமல் உன்னால் என்னைக் கொல்லுவதற்கு முடியுமோ? என்று வினவினாய்.
.
.
அகிலம்
-------------
மேலும்வந் தயுகத்தில் மேட்டிமையா யுன்னையிப்போ
தன்னால் பிறக்கவைத்து தன்னா ழிவையென்று
சொன்னே னானுன்னைச் சொன்ன மொழிப்படியே
உன்னால் குதித்து உற்ற கலியனென
இந்நாள் வரைக்கும் இருந்தாயே பார்மீதில்
.
விளக்கம்
----------------
எனவே அந்த யுகத்தில் அகந்தையாகப் பேசிய உன்னிடம் கலியுகத்தில் தன்னாலே தான் பிறந்து தன்னாலே தன் அழிவைத் தானே தேடிக் கொள்வாய் என்று சொன்னேன். அந்த வாக்குப்படியே உன்னால் நீயே உதித்து எழுந்து, இந்தக் கலியுகத்தில் கலியன் எனப் பிறந்தாய். இந்த நாள்வரைக்கும் இந்தக் கலியுகத்தில் வாழ்ந்து வந்தாய்.
.
.
அகிலம்
-------------
பார்மீதில் நானும் பரதேசிப் போலிருந்து
போரேது மில்லாமல் பொறுதி யுடனிருக்கக்
கர்ம வயசுனக்குக் காலஞ் சரியாகி
வர்மம்வந்து மூடி மாண்டாயே தன்னாலே
.
விளக்கம்
-----------------
கலியுகத்தில் நான் ஏழைப்பரதேசியைப் போல் இருந்து கொண்டு எந்தவிதப் போரும் செய்யாமல் பொறுமையுடன் இருந்தேன். நீ செய்த வினைகளுக்கு எல்லாம் சரியான நேரம் வந்ததும், பழிகள் எல்லாம் உன்னைச் சூழ்ந்து உன் கிளைகள் எல்லாம் இறந்து நீயும் உன்னாலே அழிகிறாய்.
.
.
அகிலம்
-------------
கலி முடிவு
---------------------
முன்னுனக்குத் தந்த முடியு மென்சக்கரமும்
மன்னுகந்த நல்ல வரங்கள்மிகத் தத்துவமும்
எல்லாம் நீயிப்போ என்முன் னெடுத்துவைத்துப்
பொல்லாத வனேநகரம் புக்கிடுநீ யென்றனராம்
.
விளக்கம்
----------------
முன்பு உனக்கு நான் தந்த முடியையும், என் (பணமாக ஆக்கப்பட்ட) சக்கரத்தையும், சிறந்த வரங்கள் எல்லாவற்றையும் இப்போது என் முன்பாக எடுத்து வைத்து விடு, பொல்லாதவனே, பிறகு நீ நரகம் சென்று விடு என்று தீர்ப்பு சொன்னார்.
.
.
தொடரும்.... அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்
22 likes
1 comment • 18 shares