⚔️🛡 மஹாபாரதம் 🛡⚔️
ஆதி பர்வம் 12: கண்காட்சியின் உண்மையான கதை
======================
இளவரசர்கள் ஆயுதம் மற்றும் போர்க்கலையில் வல்லுனர்களாகிவிட்டதைக் கண்டு, குரு துரோணர் திருதராஷ்டிரரிடம் சென்று, "அரசே, உங்கள் புத்திரர்கள் அவர்களது கல்வியை முடித்துவிட்டார்கள். உங்கள் அனுமதியுடன் அவர்கள் இப்போது தங்கள் திறமைகளைக் காட்ட தயாராக இருக்கிறார்கள். எனவே, நான் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறினார். திருதராஷ்டிரர் இளவரசர்களுக்கு பயிற்சியளித்ததற்காக துரோணருக்கு நன்றி தெரிவித்து, "என் புத்திரர்களின் திறமையைக் காண்பவர்களை எண்ணி நான் பொறாமைப்படுகிறேன். விதுரனை என் கண்களாகக் கொண்டு கண்காட்சிக்கு நான் நிச்சயம் வருவேன். அவனுடைய உதவிகளுடன் தயவு செய்து ஏற்பாடுகளைச் செய்யுங்கள், ப்ராமண சிரேஷ்டரே!"
துரோணரும் விதுரரும் நகருக்கு வெளியே சென்று ஒரு பெரிய, சமதளமான நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். தெய்வங்களுக்குப் பிரார்த்தனைகள் செய்வித்து அவிக்கள் அளித்து அந்த இடத்தை புனிதப்படுத்திய பிறகு, துரோணர் திறமையான கட்டிடக் கலைஞர்களை அழைத்து மாபெரும் ஓர் அரங்கத்தை உருவாக்கினார். பரந்த மையப் பகுதியையும் நான்கு திசைகளிலும் உயர்ந்த தளங்களையும் கொண்டிருந்தது அந்த அரங்கம். செல்வம் பொருந்திய வணிகர்கள், மரத்தால் செதுக்கப்பட்டு தந்தம் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அழகான இருக்கைகளை நிறுவுவதற்கு நிதியுதவி செய்தனர். அரச மேடையில் பவளம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசன வரிசைகள் கட்டப்பட்டன. அரங்கத்தின் நான்கு மூலைகளும் வானத்தை எட்டியது. அதில் வெள்ளைக் கொடிக்கம்பங்கள் பொருத்தப்பட்டு காற்றில் பறக்கும் வண்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டது.
அரச ஜோதிடர்களால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நன்நாளில், இளவரசர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவத்தைக் காண குடிமக்கள் ஆவலுடன் அரங்கத்திற்குள் நுழைந்தனர். பீஷ்மரும் விதுரரும், திருதராஷ்டிரனைக் கைப்பிடித்து வழிநடத்தி ஊர்வலத்தை தலைமை தாங்கினர். அவர்களைத் தொடர்ந்து துரோணரும் கிருபரும், பாஹ்லிகம், சோமதத்தம் போன்ற பாரதவர்ஷத்தின் பிற அரசு உறுப்பினர்களும், சுற்றியுள்ள ராஜ்யங்களிலிருந்து வருகை தந்த பிற மன்னர்களும் வந்தனர். அரச பெண்டீர் பிரகாசமான ஆடை ஆபரணங்களை அணிந்து ஏராளமான பணிப்பெண்களுடன் நகரத்திலிருந்து வெளியே வந்தனர். புனித மேரு மலையில் ஏறும் தெய்வங்களைப்போல அப்பெண்கள் அரச மேடைகளில் ஏறினர். நான்கு வர்ணங்களைச் சேர்ந்த குடிமக்கள் கூட்டம் அரங்கத்திற்குள் திரண்டு அதன் அழகைக் கண்டு வியந்தனர்.
அரங்கத்தின் பெரும் பகுதிகள் தூய தங்கத்தால் கட்டப்பட்டு விலைமதிப்பற்ற வைடூர்யங்களால் பதிக்கப்பட்டிருந்தன. அவை எண்ணற்ற பிரகாசமான மலர் மாலைகளாலும், முத்துக்களின் சரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அரங்கில் நிரம்பியிருக்கும் மக்களின் சத்தம் பொங்கி எழும் கடல் போல இருந்தது. எக்காளங்கள் ஊதப்பட்டு, மேளங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான சங்குகளின் முழக்கங்கள் மக்களின் உற்சாகமான பேச்சுக்களுடன் கலந்தன.
அனைவரும் அமர்ந்ததும், துரோணர் தனது மகன் அஸ்வத்தாமனுடன் களத்திற்குள் நுழைந்தார். அவர் வெள்ளை அங்கியும் வெள்ளை மாலையும் அணிந்திருந்தார், மேலும் அவரது உடல் சந்தனக் குழம்பால் வெண்மையாகப் பூசப்பட்டிருந்தது. அவரது தலைமுடியும் தாடியும் வெண்மையாக இருந்தது, மேலும் அவரது சக்திவாய்ந்த மகனுடன் செவ்வாயோடு சந்திரனைப் போல தோற்றமளித்தார். துரோணர் உள்ளே நுழைந்ததும் கூட்டத்தின் சத்தம் தணிந்தது. பின்னர் துரோணர் ஏராளமான பிராமணர்களை களத்தில் சுப சடங்குகளைச் செய்ய வைத்தார். மந்திரங்கள் அரங்கத்தைச் சுற்றி எதிரொலித்தன. நிபுணத்துவம் வாய்ந்த இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் தங்கள் வாத்தியங்களை வாசித்தனர், எதிர்பார்ப்பில் அமர்ந்திருந்த பார்வையாளர்களை மகிழ்விக்கும் அமைதிப்படுத்தும் ஒலியை எழுப்பினர்.
பின்னர் இளவரசர்கள் யுதிஷ்டிரனின் தலைமையில் பெருமை பொங்க வலிமைமிக்க சிங்கங்களைப்போல அரங்கிற்குள் நுழைந்தனர். அற்புதமான கவசங்களையும் எல்லா வகையான ஆயுதங்களையும் அணிந்திருந்தனர். துரோணர் அவர்களது வெவ்வேறு திறமைகளைக் காட்டும்படி கட்டளையிட்டார். யுதிஷ்டிரரில் தொடங்கி, இளவரசர்கள் ஒவ்வொருவராக முன்னேறினர். வேகமான குதிரைகளில் ஏறி, திறமையாக சவாரி செய்து, அரங்கைச் சுற்றிச் சென்று, அந்தந்த பெயர்கள் பொறிக்கப்பட்ட அம்புகளால் அசையும் மற்றும் அசையா இலக்குகளைத் தாக்கினர்.
ஆயிரக்கணக்கான அம்புகள் எல்லா திசைகளிலும் வேகமாக பறந்தன; சிலர் பயத்தில் குனிந்தனர். சிலர் அச்சமற்றவர்களாக, கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. "பலே! சபாஷ்!" என்ற சத்தங்கள் அரங்கம் முழுவதும் எதிரொலித்தன. இளவரசர்களின் ஆயுதத் திறன்கள், குதிரை சவாரி மற்றும் தேர் ஓட்டுதல் ஆகியவை மூச்சடைக்கச் செய்தன. திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்திய பிறகு, அவர்கள் தங்கள் பளபளப்பான நீல வாள்களை வெளியே எடுத்து, ஒருவரையொருவர் நோக்கி கூச்சலிட்டு, விரைந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்குதல்களைத் திறமையாகத் தவிர்த்து, தள்ளி, வீழ்த்தினர். மக்கள் அனைத்து இளவரசர்களின் நயம், வேகம் மற்றும் வலிமையை மகிழ்ச்சியுடன் கண்டனர்.
பின்னர் துரோணர் பீமனையும் துரியோதனனையும் கதாயுத்த காட்சிக்காக முன்னோக்கி வரச்சொன்னார். இரண்டு வீரர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சீற்றம் கொண்ட காளைகளைப்போல முழக்கமிட்டனர். உயரமான இரும்பு கதாயுதங்களைப் பிடித்துக்கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் பார்வையை ஒருவர் மீது ஒருவர் பதித்து வட்டமிட்டனர். விதுரர் அந்தக் காட்சியை திருதராஷ்டிரனுக்கும், குந்தி காந்தாரியிடமும் விவரித்தபோது, இரண்டு இளவரசர்களும் ஒருவரையொருவர் பயங்கரமாகத் தாக்கினர். அவர்களின் கதாயுதங்கள் இடியென மோதி, காற்றில் தீப்பொறிகளை எரிந்தன.
கூட்டம் பிளவுபட்டது. சிலர் பீமனுக்கு ஆதரவளித்தனர், மற்றவர்கள் துரியோதனனுக்கு ஆதரவளித்தனர். "பீமரின் வலிமையைப் பார்!" மற்றும் "வலிமைமிக்க துரியோதனனைப் பாரடா!" என்ற கூச்சல்கள் அரங்கத்தை நிரப்பின. யுத்தம் மிகவும் தீவிரமாகி வருவதை துரோணர் உணர்ந்தார், மேலும் மக்கள் மிகவும் உற்சாகமாகி வருவதையும் அவர் கண்டார். தனது மகனிடம் கர்ஜிக்கும் போட்டியாளர்களுக்கு இடையே நுழைந்து அவர்களைத் தடுக்கச் சொன்னார். அஸ்வத்தாமன் தனது தந்தைக்குக் கீழ்ப்படிந்து, விரைவாக முன்னேறி, இரண்டு இளவரசர்களையும் பிரித்தான்.
பீமனும் துரியோதனனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நின்றபோது, துரோணர் களத்தின் நடுவில் நுழைந்தார். இசைக்கலைஞர்களை நிறுத்த சொல்லிவிட்டு இடிமுழக்கம் போல எதிரொலிக்கும் குரலில் பேசினார், "இப்போது பாருங்கள் அர்ஜுனனின் திறமைகள். என் சொந்த மகனை விடவும் எனக்கு மிகவும் பிரியமானவன். இந்திரனின் இந்த மகன் எல்லா வகையான போர் திறமைகளிலும் ஒப்பிடமுடியாதவன்."
துரோணர் பேசும்போதே அர்ஜுனன் அரங்கத்திற்குள் நுழைந்தான். தங்கக் கவசம் அணிந்து, முதுகில் ஒரு பெரிய தங்க அம்பறாத்தூணியுடன், இளவரசன் மாலை சூரியனின் கதிர்களைப் பிரதிபலிக்கும் மேகம் போலவும், வானவில்லாலும் மின்னல்களாலாலும் பிரகாசிக்கப்பட்டது போலவும் பளபளப்பாக தோன்றினான். வெல்ல முடியாத இளவரசன் சிங்கத்தின் நடையுடன் நடந்து சென்றான். மேலும் அவன் அரங்கத்தைச் சுற்றிப் பார்த்தபோது, அவன் கண்கள் விழுந்த அனைவரையும் பயமுறுத்தினான்.
பார்வையாளர்களிடமிருந்து மகிழ்ச்சியின் முழக்கம் எழுந்தது. மக்கள் சங்குகளை ஊதி இசைக்கருவிகளை வாசித்தனர். "இந்த அழகான இளைஞன் குந்தியின் மூன்றாவது மகன், அவன் அனைத்து நல்லொழுக்கமுள்ள மனிதர்களிலும் சிறந்தவன், மிகவும் சக்திவாய்ந்தவன்" என்று சிலர் கூறினர். "அவன் வலிமைமிக்க இந்திரனின் மகன். குரு குலத்தின் சிறந்த பாதுகாவலர்" என்று மற்றவர் மேலும் கூறினர். கூட்டத்தினரிடமிருந்து எல்லா வகையான பாராட்டுகளும் கேட்டன. இதைக் கேட்ட குந்தி தன் முலைகளிலிருந்து பால் சுரந்து வழிவதை உணர்ந்தாள், அவளுடைய கண்ணீருடன் சேர்ந்து, அது அவளுடைய கச்சையை நனைத்தது.
'மக்கள் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியுடன் ஆர்பரிக்கிறார்கள்?' என்று திருதராஷ்டிரர் விதுரரிடம் கேட்டார். அர்ஜுனன் தோன்றியதால் தான் இப்படி நடந்ததாக விதுரன் சொன்னபோது, திருதராஷ்டிரன், "குந்தியின் மூன்று புத்திரர்களால் நான் எவ்வளவு பாக்கியம் பெற்றிருக்கிறேன். அவர்கள் மூவரும் யாக அக்னியை போன்றவர்கள், குந்தி யாக எரிபொருளைப் போன்றவள்" என்றார். ஆனால் திருதராஷ்டிரர் தனக்குள் ரகசியமாக பொறாமையால் எரிந்தார். மக்கள் ஏன் தன் மகன்களை இப்படி உற்சாகப்படுத்தவில்லை? துரியோதனன் அர்ஜுனனுக்கு சமமானவன் இல்லையா? என்ன நடக்கிறது என்பதை அவரால் பார்க்க முடிந்திருந்தால்.
விதுரர் அந்தக் காட்சியை குருடரான மன்னரிடம் விவரித்தார். அர்ஜுனன் ஒன்றன்பின் ஒன்றாக தெய்வீக ஆயுதங்களைக் காட்டினான். அக்னேய ஆயுதத்தால் நெருப்பை உருவாக்கினான்; வருண ஆயுதத்தால் ஏராளமான தண்ணீரை உருவாக்கினான்; வாயவ்ய ஆயுதத்தால், பெரும் காற்றை வீசச் செய்தான்; பர்ஜன்ய ஆயுதத்தால், ஒரு பெரும் மழையைப் பொழியச் செய்தான். அர்ஜுனன் பௌம ஆயுதத்தால் நிலத்தைப் படைத்தான், பார்வதிய ஆயுதத்தால், அரங்கில் ஒரு மலை தோன்றச் செய்தான். பின்னர், அந்தர்த்தன ஆயுதத்தை ஏவி, அவை அனைத்தையும் மறையச் செய்தான்.
பிரஜைகள் மூச்சுத் திணற, இளவரசன் அனைத்து வகையான மாய சக்திகளையும் வெளிப்படுத்தினான். ஒரு கணம் அவன் ஒரு பெரிய பனை மரத்தைப்போல உயரமாகவும், அடுத்த கணத்தில் கட்டைவிரலைப்போல சிறியவராகவும் தோன்றினான். ஒரு கணத்தில் அவன் தனது தேரில் நின்றதிலிருந்து, தேரிலிருந்து சிறிது தூரத்தில் தரையில் நிற்கத் தொடங்கினான். துரோணர் ஒரு இயந்திர இரும்புப் பன்றியை அரங்கின் குறுக்கே வேகமாக ஓடச்செய்தார், அர்ஜுனன் ஒரே தண்டுபோல ஐந்து அம்புகளை அதன் வாயில் எய்தான். ஒரு கம்பத்தைச் சுற்றிச் சுற்றி கயிற்றில் ஆடும் ஒரு பசுவின் கொம்பின் குழியில் இருபது அம்புகளை எய்தான். வில்லுடன் தனது திறமையைக் காட்டிய பிறகு, அர்ஜுனன் தனது வாளையும் கதாயுதத்தையும் எடுத்து, அவை இரண்டையும் கொண்டு பல திறமையான அசைவுகளை வெளிப்படுத்தினான்.
கண்காட்சி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இசை நின்றுவிட்டது, கூட்டத்தின் உற்சாகம் குளிர்ந்துவிட்டது. திடீரென்று அரங்க வாயிலில் யாரோ ஒருவர் மிகுந்த பலத்துடன் தனது கைகளை அறைந்து, கோபமடைந்த யானையைப்போல கர்ஜிக்கும் சத்தத்தைக் கேட்டார்கள். வெளிப்படையாக யாரோ ஒரு மிகப்பெரிய சக்தி வாய்ந்த மனிதர் வந்திருக்கிறார். மக்கள் சத்தம் வந்த மூலத்தை சுற்றிப் பார்த்தார்கள்: "மலைகள் பிளந்து போகின்றனவா? பூமியே பிளந்து போகிறதா?" மற்றவர்கள் ஏதோ பொறாமை கொண்ட கடவுள் தனது சக்தியைக் காட்ட விரும்பி அங்கு வந்திருப்பதாக நினைத்தார்கள்.
துரோணர் குதித்து எழுந்தார். ஐந்து பாண்டவர்களால் சூழப்பட்டார். பிரகாசமான நட்சத்திரங்களால் சூழப்பட்ட சந்திரனைப்போல காட்சிதந்தார். துரியோதனன் தனது நூறு சகோதரர்களுடன், தேவர்கள் சூழ்ந்த இந்திரனைப்போல நின்றான். அனைவரும் வாயிலை நோக்கிப் பார்த்தார்கள். ஒரு போர்வீரன் அவர்களை நோக்கி வந்தான். சுடர்விடும் சூரியனைப்போலத் தெரிந்தான். அவன் உடலின் இயற்கையான பகுதியாக இருந்த ஒரு அற்புதமான கவசத்தை அணிந்திருந்தான், நெருப்பு போல பிரகாசிக்கும் காதணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தான். பூமி அவனது காலடித் தடங்களுடன் எதிரொலித்தது. அவன் நகரும் மலையைப்போலத் தெரிந்தான். கூட்டம் அசையாமல் நின்றது. அந்த புதிய வருகையைப் பார்த்தார்கள். இது யார்?
அவ்வழகான இளைஞன் நேராக துரோணரை நோக்கி நடந்தான். சிறிது அலட்சியத்துடன் அவர் காலடியில் வணங்கினான். பின்னர் கிருபருக்கு மரியாதை செலுத்தினான். மீண்டும் துரோணரிடம் திரும்பி, மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கக்கூடிய குரலில் பேசினான். "நான் ராதேயன் (கர்ணன்). ஓ பிராமணரே, உங்கள் அனுமதியுடன் நான் அர்ஜுனனின் திறமைகளுக்கு சமமான திறமைகளைக் காண்பிப்பேன். உண்மையில், குந்தியின் மகன் காட்டிய அனைத்து சாதனைகளையும் நான் முறியடிப்பேன். கண்டு ஆச்சரியப்படுங்கள்."
கூட்டம் ஏதோ ஒரு கருவியால் இயக்கப்பட்டதுபோல் ஒன்றாக எழுந்து நின்றது. கர்ஜித்து ஆரவாரம் செய்தது. அர்ஜுனன் திகைத்து கோபமடைந்தான். உடும்பு தோலின் விரல் பாதுகாப்புகளால் மூடப்பட்டிருந்த தனது கைமுட்டிகளை இறுக்கி அவிழ்த்தான். கர்ணனைப் பார்த்தபோது அவன் கண்கள் தீப்பிடித்தன. துரோணர் தலையசைத்து சம்மதம் தெரிவித்தார். கர்ணன் களத்தின் மையத்திற்கு நகர்ந்தான். உடனே தன் திறமைகளைக் காட்டத் தொடங்கினான். அர்ஜுனன் காட்டிய ஒவ்வொரு சாதனையையும் அவன் பொருத்தினான், கூட்டம் தங்கள் ஒப்புதலைக் காட்டி கத்தியது. அவன் முடித்ததும், துரியோதனன் அருகில் சென்று அவனை அன்புடன் அணைத்துக் கொண்டான். 'அந்த செருக்கு வாய்ந்த அர்ஜுனனை எதிர்த்து நிற்கக்கூடிய ஒருவர் இதோ. பாண்டவ இளவரசன் நீண்ட காலமாக கவனத்தின் மையமாக இருந்தான் அல்லவா, இதோ அவனுக்கு இணையானவன்.'
துரியோதனன் சிரித்துக் கொண்டே கர்ணனிடம், "ஓ வலிமைமிக்க வீரனே! நீ வரவேற்கப்படுகிறாய். அதிர்ஷ்டத்தால் நீ இன்று இங்கு வந்திருக்கிறாய். சொல்! உன் மகிழ்ச்சிக்காக நான் என்ன செய்ய முடியும்? நானும் குரு ராஜ்ஜியமும் உன் கட்டளைக்கு காத்திருக்கிறோம்."
துரியோதனன் அர்ஜுனனின் கோபத்தைக் கண்டான். "உங்கள் வார்த்தைகளால் எனது ஆசை நிறைவேறியதாக நான் கருதுகிறேன். உங்கள் அழியாத நட்பை மட்டுமே நான் விரும்புகிறேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் உள்ளது: தயவுசெய்து அர்ஜுனனுடன் ஒற்றைப்போரில் ஈடுபட என்னை அனுமதியுங்கள்" என்று கர்ணன் பதிலளித்தபோது அவன் பாண்டவரைப் பார்த்து புன்னகைத்தான்.
அர்ஜுனன் விறைத்துப்போய் தன் வில்லைப் பற்றிக்கொண்டான். வெளிப்படையாகவே திமிர்பிடித்த கர்ணனைக் கண்ட நொடியே அவனுக்குள் ஒரு கடுமையான போட்டி உணர்வு ஏற்பட்டது. ஒருவேளை அதை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அவனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். துரியோதனன் சிரித்தான். "வாழ்க்கையின் நல்ல விஷயங்களை என்னுடன் அனுபவி, ஓ வீரனே! ஒன்றாக மகிழ்ச்சியில் வாழ்வோம்."
அர்ஜுனனுக்கு கேட்டது போதும் என்றிருந்தது. அவன் துரியோதனனை இடி முழக்கக் குரலில் குறுக்கிட்டான். "ஓ கர்ணா, அழையாது நுழைபவருக்கும் வரவேற்கப்படாத பேச்சாளருக்கும் சொந்தமான பாதை இப்போது உன்னுடையதாகிவிடும்."
கர்ணன் எரியும் நெருப்புப்போல் புகைந்தான். "ஓ பார்த்தா, இந்த அரங்கம் உனக்கானது மட்டுமல்ல. உன்னை விட உயர்ந்தவர்கள் உட்பட அனைத்து வீரர்களுக்கும் இது திறந்திருக்கும். ஏன் வார்த்தைகளால் வாதிடுகிறாய்? வலிமையானவர்கள் வார்த்தைகளை வீணடிக்கமாட்டார்கள். அம்புகளால் பேசு, உன் குருவின் கண்களுக்கு முன்பாக உன் தலையை நான் துண்டிப்பேன்!"
அர்ஜுனன் துரோணரை நோக்கித் திரும்பினான், அவர் மெலிதாக தலையசைத்தார். கர்ணனை நோக்கித் தன் பார்வையைப் பதித்த பாண்டவன் போருக்கு முன்னேறினான். துரியோதனன் அர்ஜுனனுக்கு முன்னால் சென்ற கர்ணனைத் தழுவினான், அவன் ஆயுதங்கள் தயாராக இருந்தன. திடீரென்று வானம் கனத்த மேகங்களாலும் பிரகாசமான மின்னல்களாலும் நிரம்பியது. இந்திரனின் பெரிய வானவில் மேலே தோன்றியது. இருப்பினும், கர்ணனுக்கு மேலே இருந்த மேகங்கள் சிதறின, சூரியன் பிரகாசமாக பிரகாசித்து, அவனது வடிவத்தை ஒளிரச் செய்தது. திருதராஷ்டிரனின் மகன்கள் கர்ணனுக்குப் பின்னால் நின்றார்கள், துரோணர், கிருபா மற்றும் பீஷ்மர் அர்ஜுனுக்குப் பின்னால் நின்றனர்.
மாடிகளில் கூட்டம் பிளவுபட்டது. அரச பெண்களும் இரண்டு வீரர்களில் ஒருவரை ஒருவர் தேர்வு செய்ய முடியவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் எதிர்கொண்டபோது, குந்தி திகிலால் நிரம்பி மூர்ச்சையடைந்தாள். இதைக் கண்டு விதுரர் ஆச்சரியப்பட்டு, அவளை மெதுவாக உயர்த்தி, அவள் முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளித்தார். அவர் 'என்னவாயிற்று?' என்று அவளிடம் கேட்டார், ஆனால் குந்தி எதுவும் சொல்லவில்லை. அவள் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தாள். இவ்வளவு காலமாக அவள் மறைத்து வைத்திருந்த ரகசியத்தை அவள் எப்படி எவரிடமும் சொல்ல முடியும்? பயத்தால் ஆட்கொள்ளப்பட்ட அவள் அரங்கத்தைப் பார்த்து, உதவியற்றவளாக உணர்ந்து, அமைதியாக பிரார்த்தனை செய்தாள்.
இரண்டு போர்வீரர்களும் சண்டையிடவிருந்தபோது, போரின் அனைத்து விதிகளையும் அறிந்த கிருபர், முன்னோக்கி வந்து, "பாண்டுவின் இந்த மகன் குந்தியின் புத்திரன் மற்றும் குரு அரச இனத்தின் வழித்தோன்றல். அவரது எதிராளியிடமிருந்து அவரது வம்சாவளி மற்றும் இனம் என்ன என்பதைக் கேட்போம். இதை அறிந்தவுடன், அர்ஜுனன் சண்டையிடலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம். சண்டைகள் சமமானவர்களிடையே மட்டுமே நடத்தப்படுகின்றன." கிருபர் கர்ணனைப் பார்த்தார்.
கர்ணன் வெட்கப்பட்டு எதுவும் பேசவில்லை. அவன் ஒரு அரச வம்சத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பது தெளிவாகத் தெரிந்தது. அவனது சங்கடத்தைக் கண்டு துரியோதனன், "பெருந்தன்மை பிறப்பை மட்டும் சார்ந்தது அல்ல. வீராங்கனைகளாகவும், வீரர்களின் தலைவர்களாகவும் இருப்பவர்கள் கூட, அரச வம்சத்தில் பிறக்காவிட்டாலும் பெருந்தன்மை பெற்றவர்களாகக் கூறலாம். ஆனால் அர்ஜுனன் வேறொரு மன்னனுடன் மட்டுமே சண்டையிட வேண்டுமென்றால், நான் உடனடியாக கர்ணனுக்கு ஒரு ராஜ்யத்தைக் கொடுக்கிறேன்" என்று கூறினான்.
தாமதிக்காமல், துரியோதனன் அரங்கத்திலேயே ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்தான். புனித நீரைக் கொண்டு வர ஒருவரை அனுப்பி கர்ணனின் தலையில் தெளித்தான். "இனி நீ அங்க நாட்டின் அரசன்!" பிராமணர்கள் தகுந்த மந்திரங்களை உச்சரித்து கர்ணனுக்கு அரிசி, பூக்கள் மற்றும் புனித நீரை வழங்கியபோது கூட்டம் ஆரவாரம் செய்தது. கர்ணன் ஒரு தங்க இருக்கையில் அமர, சாமரங்கள் விசிறப்பட்டது. துரியோதனனின் ஸ்நேகத்தின் சைகையால் அவன் நெகிழ்ச்சியடைந்து, அடைபட்ட குரலில், "ஓ அரசே! உங்களுக்கு நான் எப்படி கைம்மாறு செய்ய? எப்போதும் உங்கள் கட்டளைப்படி நடக்க சித்தமாயிருக்கிறேன்" என்றான்.
துரியோதனன், "உன் நட்பு மட்டுமே எனக்கு வேண்டும்" என்று பதிலளித்தான்.
இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தனர். மக்கள் மேலும் உற்சாகமடைந்தனர். பின்னர், கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான சண்டை தொடங்கவிருந்தபோது, திடீரென்று மற்றொரு மனிதன் அரங்கிற்குள் ஓடிவந்தான். அவன் வயதால் நடுங்கியவனாக, ஒரு தடியால் தன்னைத் தாங்கிக் கொண்டான். கர்ணனை நோக்கி வேகமாக நடந்தான், உடலில் இருந்து துணி தளர்வாகத் தொங்கிக் கொண்டு வியர்த்திருந்த அந்த மனிதன். உடனே, கர்ணன் தன் இருக்கையிலிருந்து கீழே இறங்கி, முடிசூட்டு விழாவிலிருந்து இன்னும் ஈரமாக இருந்த தலையை, அந்த மனிதனின் காலடியில் வைத்தான். அவன் எழுந்து நின்று, ஆர்வத்தோடு பார்த்த துரியோதனனிடம், "இவர் என் தந்தை, அதிரதன்" என்றான்.
அதிரதன் கூட்டத்தில் இருந்தார், தன் மகனின் முடிசூட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினார். அவர் ஒரு தேரோட்டி என்பதை உடையினாலும் பெயரினாலும் உடனடியாக அடையாளம் காணப்பட்டார். அவர் தன் மகனை இறுக்கமாக அணைத்துக்கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டார். இதையெல்லாம் பார்த்த பீமன், "ஓ தேரோட்டியின் மகனே, நீ அர்ஜுனனின் கைகளால் இறக்கத் தகுதியானவன் அல்ல. சாட்டையை எடுத்து ஒரு தேரை வழிநடத்துவது நல்லது. உண்மையில், தேவர்களுக்குரிய யாகத்திற்கான நெய் ஒரு நாய்க்கு தகுதியானதை விட, நீ அங்க ராஜ்யத்திற்கு தகுதியானவன் அல்ல."
கர்ணன் வெட்கத்தில் தலைகுனிந்தான். துரியோதனன் தன் சகோதரர்கள் மத்தியில் இருந்து கோபத்துடன் எழுந்தான், தாமரைகள் நிறைந்த ஏரியிலிருந்து எழுந்த ஒரு கோபமான யானையைப்போல. "பீமா!, நீ இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசக்கூடாது. இப்படிப்பட்ட ஒருவன் எப்படி தாழ்ந்த பிறவியாக இருக்க முடியும்? ஒரு வீரனின் முதல் குணம் அவனது வலிமையையும் வீரமும்தான். இன்று நாம் அனைவரும் கர்ணனின் சக்தியைக் கண்டிருக்கிறோம்."
அப்போது துரியோதனன் அசாதாரணமான பிறப்புகளைக் கொண்ட பல்வேறு கடவுள்கள் மற்றும் வீரர்களின் பெயர்களைக் கூறினான். துரோணர் ஒரு பானையிலிருந்து பிறந்ததாகவும், கிருபர் ஒரு மரத்துண்டிலிருந்து பிறந்ததாகவும், கடவுள் கார்த்திகேயர் ஒரு நாணல் கட்டியிலிருந்து பிறந்ததாகவும் கூறப்படுகிறது. பாண்டவர்களின் பிறப்பு கூட மர்மமானது. "ஒரு மான், சிங்கத்தைப் பெற்றெடுக்க முடியுமா? இந்த மனிதனைப் பாருங்கள், அவரது இயற்கையான கவசகுண்டலங்களை, அவரது மங்களகரமான அடையாளங்களைப் பாருங்கள். நான் அவரை ஒரு தேரோட்டி என்றே கருதவில்லை."
துரியோதனன் பாண்டவர்களை எதிர்க்கும் விதமாகப் பார்த்தான். "கர்ணனை நான் முடிசூட்டியது யாருக்காவது பிடிக்கவில்லை என்றால், அவர் முன்னோக்கி வந்து போரில் தனது வில்லை வளைக்கட்டும்!"
துரியோதனனின் வீர உரையால் கூட்டம் கிளர்ந்தெழுந்தது. அவர்கள் ஆரவாரம் செய்து எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தனர். இப்போது, இரண்டு வலிமைமிக்க வீரர்களுக்கு இடையே ஒரு பெரிய போரொன்று உறுதியாயிற்று. ஆனால் துரியோதனனின் உரையின்போதே, சூரியன் மறைந்திருந்தது. சர்ச்சையை வேறொரு நாள் தீர்க்க வேண்டும். துரியோதனன் கர்ணனின் கையைப் பிடித்து அரங்கிலிருந்து வெளியே அழைத்துச் சென்றான். அரங்கம் இப்போது எண்ணற்ற விளக்குகளால் எரிந்தது. துரோணர், கிருபர் மற்றும் பீஷ்மருடன் பாண்டவர்களும் வெளியேறினர். பின்னர் குடிமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். அவர்களில் சிலர் அர்ஜுனன் என்றும், சிலர் கர்ணன் என்றும், மற்றவர்கள் அன்றைய வெற்றியாளர் துரியோதனன் என்றும் சுட்டிக்காட்டினர்.
தொடரும்... 🚩🕉🪷🙏🏻
#மகாபாரதம் #மகாபாரத காவியம் #🕉️விஷ்ணு புராணம்🦅கருடபுராணம்🏹 பகவத்கீதை.. மகாபாரத போர்..!!🐄 #🌹மகா பாரதம்🌹 #ராமாயணம் மகாபாரதம்