உலகத்திலேயே அதிக நஞ்சுள்ளதாக எதைக் கருதுகிறீர்கள்?
பாக்ஸ் ஜெல்லி ஃபிஸ் என்கிறது, ஏ ஐ.!
சில விஞ்ஞானிகளோ, ‘’கண்ணாடி வீரியன் பாம்பு’’ என்கிறார்கள்!
என்னைக் கேட்டால், ''தினமலருக்கு மிஞ்சி விஷத்தை கக்க, இந்த உலகில் இது வரை எந்த ஜந்துவும் பிறக்கவில்லை, பிறக்கவும் முடியாது…'' என்பேன்.
இதை ஏதோ, வெறுப்பில் சொல்லவில்லை. ஆழ்ந்த மனவருத்தத்தில் சொல்கிறேன்.
இன்றைய தலைப்புச் செய்தியே நாலு வார்த்தை தான்;
'புருடா!'
அதற்கு கீழே சட்டசபையில் தனக்கு படிக்க கொடுத்த அறிக்கையை புருடா எனக் கூறும் விதமாக 13 குற்றச்சாட்டுகளை கவர்னர் ரவி வரிசைப்படுத்தி உள்ளார்…எனச் செல்கிறது செய்தி.
இது செய்தியல்ல, தினமலரின் அபிப்ராயம். கவர்னர் சொன்னதை போடுவது தான் செய்தியாகும். தலைப்பே திமுக அரசு மீதான கடும் தாக்குதலாக உள்ளது. சட்டசபை நிகழ்வுகள் குறித்த கடும் விமர்சனங்கள் திமுக அரசு மீது தினமலருக்கு இருப்பதே பிழையல்ல. அதை தனிப்பட்ட கட்டுரையாகவோ, ஏன் தலையங்கமாகவே கூட அவர்கள் எழுதுவது தான் கண்ணியமான அணுகுமுறையாகும்.
ஆனால், இவர்கள் தமிழக கட்சிகள் குறித்து செய்தி போடும் விதமே காசிப் பாணியில் தான் உள்ளது!
மற்றுமொரு உதாரணம்;
'தே.ஜ. கூட்டணிக்குள் தினகரன்? அச்சத்தில் அதிமுக மாஜிக்கள்' என்ற தலைப்பு;
இதிலும் 'இன்னார் சொன்னத் தகவல்' என்றில்லாமல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது என பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டு எழுதப்பட்டவை, முழுக்கவே ஹேஸ்யமாக உள்ளது; இதோ அவை;
பாஜகவுக்கு நேரடியாக அதிமுக சீட் ஒதுக்காது. பாஜகவுக்கு வழங்கப்படும் சீட்டுகள் உள் ஒதுக்கீடாக அம்முகவுக்கு ஒதுக்கப்படும். இதனால், தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை அதிமுக என்றாலும் கூட்டணி கட்சிகளின் பிடி பாஜகவிற்குள் சென்றுவிடும்.
அதே போல் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமியை வீழ்த்த வேண்டும் என்பது தான் தினகரனின் லட்சியம். எனவே அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்வது சந்தேகம். அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து உள்ளடி வேலைகளில் ஈடுபடுவார். தினகரன் வெற்றி பெற்று பலமானால் அதிமுகவிற்குள் மீண்டும் குழ்ப்பங்களை ஏற்படுத்துவார்.
இதனால் அமமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பழனிச்சாமி பிரச்சாரம் செய்யமாட்டார். இப்படி ஒருவரை ஒருவர் வீழ்த்த உள்ளடி வேலை பார்த்தால் கூட்டணிக்குள் குழப்பங்கள் ஏற்படும். எனவே அமமுகவுடன் கூட்டணி அமைந்தாலும் தேர்தல் வெற்றிக்கு உதவாது.
'அதிமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் தினமலரின் கெடுநோக்கம் இதில் துல்லியமாக வெளிப்படுகிறது.
மற்றோரு செய்தி, 'மத்திய அமைச்சர் பதவி கேட்டு தேமுதிக நிபந்தனை. பியூஸ் போன பல்பு ஆனார்'
பியூஸ் கோயல்!
இந்தச் செய்தியும் முழுக்க, முழுக்க ஹேஸ்யங்களாக உள்ளது! ஒரு பிரபல பத்திரிகை இப்படி செய்தி போடுவதற்கு முன்பு பிரேமலதாவிடம் நீங்கள் கேட்டதாக சொல்லப்படுவது உண்மையா? என குறைந்தப்டசம் உறுதிபடுத்திவிட்டு, என்ன வேண்டுமானலும் அந்தம்மாவை விமர்சனம் செய்துவிட்டு போகலாமே. இது எப்படி செய்தியாகும்.?
இப்படி இந்த பத்திரிக்கையில் அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான செய்திகள் என்பதெல்லாமே அவர்களின் உள் நோக்கத்தை வெளிப்படுத்தும் போலிச் செய்திகளாகவே உள்ளன.
ஆனால், பாஜக குறித்து இவர்கள் போடும் செய்திகளை மாத்திரம் மிகவும் கவனத்தோடு கண்ணியமாக போடுகிறார்கள்.
தினமலர் எனும் தீய சக்தியை அம்பலப்படுத்த வேண்டிய தமிழர் மற்றும் திராவிட இயக்க தலைவர்கள் எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் எனப் புரியவில்லை.
சமீபத்தில் திருமுருகன் காந்தி மே-17 இயக்கம் சார்பில் தினமலம் என்ற நூலைக் கொண்டு வந்துள்ளார். ஆனால், இது போதாது!
இவர்களின் விஷமத்தனமான செய்திகளுக்கு ஒரு முடிவு ஏற்படாத வரை தமிழ்ச் சமுதாயத்திற்கு விடிவே இல்லை.
சாவித்திரி கண்ணன்
#👨மோடி அரசாங்கம்