உங்கள் நிலம் யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் நடிகைகளின் பரிதாப வாழ்வை குறிப்பிட்டு பேசுகிறார்.. அதில், நடிகை கனகா, கேஆர்விஜயா, காஞ்சனா போன்ற நடிகைகளை பற்றி விரிவான தகவல்களை பகிர்ந்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:
"60-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவிகா.. தன்னுடைய அம்மாவின் கண்டிப்பிலிருந்து தப்பிக்கவும், ஒரு துணை வேண்டியும் தேவதாஸ் என்ற உதவி இயக்குநரை தேவிகா திருமணம் செய்து கொண்டார்.. ஆனால், அவர்களுக்குள் சரியான புரிதல் இல்லாததால் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு, இறுதியில் பிரிந்தனர்..
தேவிகா மகள் கனகா
தேவிகா-தேவதாஸ் தம்பதியின் மகளான கனகா, 'கரகாட்டக்காரன்' படத்தின் மூலம் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார்.. கனகாவின் அம்மா உயிருடன் இருந்தவரை அவரது திரைவாழ்க்கையை மிகச் சிறப்பாகக் கவனித்துக்கொண்டார்..
தாயின் மறைவுக்கு பிறகு கனகா தனிமைப்படுத்தப்பட்டார். அப்பா மீதும் அவருக்கு பெரும் கசப்பு இருந்தது.. தனக்கு துணையாக இருப்பார் என்று நம்பி ஒருவரை திருமணம் செய்தார், ஆனால் அந்த நபர் ஏமாற்றியதால் 15 நாட்களிலேயே அவரை விட்டுப்பிரிந்தார்..
தனிமையில் கனகா
2002ல் அவரது தாய் தேவிகாவின் மறைவுக்கு பின் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் தனிமை காரணமாக சினிமாவை விட்டு கனகா விலகினார். பல ஆண்டுகளாகவே தனது வீட்டிற்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்.. வெளி உலகத் தொடர்பின்றி வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டார்.. அவரது போட்டோ ஒன்று வெளியாகி வைரலானது.. அப்போது அவரது உடல் தோற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது..
கடந்த 2023ல் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து பேசியபோது எடுத்த போட்டோ வெளியானது. அதில் கனகா உடல் எடை கூடி, அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தது ரசிகர்களை வருத்தமடைய செய்தது.
ஆரோக்கியமாய் கனகா
கடந்த 2024ல் சென்னையில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ரசிகர் ஒருவருடன் கனகா எடுத்துக் கொண்ட போட்டோவும் இணையத்தில் வைரலானது. இதிலும் கனகா மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்பட்டார்.
ஆனால், இதற்கு முன்பெல்லாம், கனகா அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார், இறந்துவிட்டார் என்றெல்லாம் வதந்திகள் பரவியபோது, அவரை பற்றின போட்டோக்கள் வெளிவந்தது அனைத்துக்கும் பதிலாய் அமைந்தது.. அவர் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறார்.. ஆனால் தனிமையையே விரும்புகிறார்.
நடிகை கனகாவைப் போலவே, கே.ஆர். விஜயாவும் தனது ஆரம்பகால வாழ்க்கையில் உறவினர்களிடம் இருந்து பெரும் டார்ச்சரை அனுபவித்தவர்.. தன்னுடைய சொந்த வாழ்க்கையில் உறவினர்களாலும், சூழலாலும் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்துள்ளார்.
திருமணத் தடை மற்றும் சூனியம்
கே.ஆர். விஜயா வேலாயுதம் என்ற ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, அவரது குடும்பத்தினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் கேஆர் விஜயா திருமணம் செய்துகொண்டால் தங்களுக்கு வரும் வருமானம் நின்றுவிடும் என்ற பயம்தான்.. இதனால் அவருக்கு திருமணம் நடக்கக்கூடாது என்று பல சூனியங்கள் வைக்கப்பட்டன.. கேஆர் விஜயா பற்றின தவறான வதந்திகள் பரப்பப்பட்டன..
அதுமட்டுமல்ல, குழந்தை பிறந்த அன்றே, அவரது கணவர் இறந்துவிட்டதாகவும் அவரது உறவினர்களே பெரிய வதந்தியை கிளப்பிவிட்டனர்... இது அவரை மனதளவில் நிலைகுலையச் செய்துவிட்டது..
தாய்-தந்தையே எதிரியான சோகம்
அதேபோல நடிகை காஞ்சனாவின் கதை இன்னும் வேதனையானது. இவர் தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் தனது பெற்றோரிடமே இழந்துவிட்டார்..
காஞ்சனா ஆரம்பத்தில் ஒரு விமானப் பணிப்பெண்ணாக இருந்தார். ஒரு விமானியை அவர் தீவிரமாக காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்தனர்.
ஆனால், கே.ஆர். விஜயாவைப் போலவே, காஞ்சனாவும் சம்பாதித்து தரும் 'பொன்முட்டை இடும் வாத்து' என்பதால், அவரது அப்பா இந்தத் திருமணத்தை விரும்பவில்லை. காஞ்சனா வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருந்த சமயம் பார்த்து, அவரது காதலனை அழைத்து மிரட்டி துரத்திவிட்டார். இதனால் அந்த காதலர், மனமுடைந்து வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டார்.
தானம் தந்த சொத்து
ஆனால் காஞ்சனாவின் அப்பாவோ, மகளிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி, அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். தனது சொந்த பெற்றோரே தன்னை ஏமாற்றியதை அறிந்த காஞ்சனா, பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
பிறகு நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தனது சொத்துக்களை மீட்டு, அவற்றை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குத் தானமாக வழங்கினார். அதற்கு பிறகு உலக வாழ்க்கையைத் துறந்து, ஆன்மீகப் பாதையில் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார்" என்றெல்லாம் தெரிவித்து வருகிறார்
#📰டிசம்பர்-30 முக்கிய செய்திகள் #சினிமா🎤தகவல்